இனவாதம் – மதவாதம் –
ஜாதிவாதம்
மனிதர்களை பிரிக்கும், மோதவிடும்,
இழப்புகளை ஏற்படுத்தும் இனவாதம்,
மதவாதம், ஜாதிவாதம் இம்மூன்றும் எக்காலத்திலும் தேவையற்றது. ஆபத்தை ஏற்படுத்தும்
இவைகள் சமூகத்தில் இருந்து அகற்றப்படவேண்டியது என்பதில் எந்தவிதமான
மாற்றுக்கருத்தும் இல்லை. இவைகள் சமூகத்திலிருந்து அகற்றப்படவேண்டுமானால், முதலில்
இவைகளை பயன்படுத்தி செய்யப்படும் அரசியல் அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவற்றை பயன்படுத்தி அரசியல் செய்து லாபம்
பார்ப்பவர்களால்தான் இவைகள் சமூகத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு நிலைபெறுகிறது.
இந்திய ஒன்றியத்தை
பொருத்தவரை, 1947க்கு முன்பு உருவான
அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நோக்கங்களோடு உருவாகின. அவைகள்
உருவான போது இருந்த சமூக சூழல்கள், அரசியல் சூழல்கள், உருவாக்கியவர்கள் ஆகிய
மூன்றும் அந்த அரசியல் இயக்கங்களின் அடிப்படை நோக்கத்திற்கான காரணமாக இருக்கின்றன.
இந்திய ஒன்றிய நாடுகள்
ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த போது பொதுவாக இரண்டு விதமான நிர்வாகங்கள்
இருந்தன. ஒன்று மன்னர்களின் சமஸ்தானங்கள் நேரடியாக செய்த நிர்வாகம். மற்றொன்று ஆங்கிலேயர்களால்
கையகப்படுத்தபட்டு நேரடியாக செய்யப்பட்ட நிர்வாகம். சமஸ்தானங்கள் என்பது இஸ்லாமிய
மன்னர்களாலும், இந்து மன்னர்களாலும் ஆளப்பட்டுவந்தன. ஆங்கிலேயர் வசம் இருந்த
நிர்வாகப் பகுதிகளை கிருஸ்துவர்கள் ஆண்டதாக எடுத்துகொள்ளலாம். பார்ப்பனர்கள் மற்றும்
மன்னர்களின் வாரிசுகள் மட்டுமே கல்வியை கற்க முடியும் என்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகால
நடைமுறையை மாற்றி கல்வியை பொதுவாக்கி அனைவருக்கும் கற்பிக்க தொடங்கினர்
ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர் கற்றுத்தந்த கல்வி, வெளிநாடுகளுக்கு சென்று கற்ற கல்வி
ஆகிய இரண்டும் சமூகத்தில் மட்டுமல்லாமல், அரசியலிலும் புதிய பார்வைகளையும்,
பாதைகளையும் உருவாக்கின. அதன் காரணமாக ஆங்கிலேயர் நிர்வாகம் செய்த நிலப்பகுதியில் புதிய
அரசியல் இயக்கங்கள், சமூக இயக்கங்கள் உருவாகின. அதற்கு ஆங்கிலேயரின் ஜனநாயக
அரசியல் முறையும் ஒரு வகையில் உதவின.
1885ல் இந்திய தேசிய
காங்கிரஸ் உருவாக்கப்படுகிறது. அதனை உருவாக்கியவர்களில் கல்வி கற்ற பார்ப்பனர்,
பார்சி, ஆங்கிலேயர் என மூவரும் இருக்கின்றனர். கல்வி கற்ற ஆங்கிலேயர் அல்லாதோர்
அரசில் பங்கு பெறுவதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த அமைப்பில் ஒரு ஆங்கிலேயர்
இருப்பது இதன் உருவாக்கத்தில் ஆங்கிலேயரின் உள்நோக்கம் இருப்பதாகவே சிலரால்
கருதப்படுகிறது. காலப்போக்கில் அடுத்த இருபது ஆண்டுகளில் இந்து, முஸ்லிம்,
கிருஸ்துவர்கள் என பலர் இந்த அமைப்பில் சேர மெல்ல இந்த அமைப்பு விடுதலை முழக்கத்தை
நோக்கி நகர்கிறது. தொடங்கிய முப்பது ஆண்டுகளில் அது மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியின்
தலைமையில் புதிய கொள்கை இலக்கு மற்றும் செயல்பாட்டு திட்டத்தோடு உரிமை, விடுதலையை
நோக்கி பயணிக்க தொடங்கி அதன் இலக்கை அடைந்துவிட்டது. அதன் பிறகு இந்திய தேசிய
காங்கிரஸ் என்பது பெரிய அளவிலான சமூக, அரசியல் கொள்கை இலக்கோடு பயணிக்கவில்லை.
சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் பல விதமான குழப்ப நிலையிலேயே
பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த அரசியல் இயக்கத்தில் இனவாதம், மதவாதம், ஜாதிவாதம்
என்ற மூன்றும் பின்னிப்பினைதிருந்தாலும், அவைகள் வெளிப்படையாக இந்த இயக்கத்தின்
அடையாளமாக காட்டப்படவில்லை. விடுதலைக்காக போராடிய இயக்கமாகவே அடையாளம்
பெற்றுவிட்டது.
ஆங்கிலேயருக்கு முன்பாக
ஆட்சி அதிகாரத்தில் இருந்த முஸ்லீம்கள் தங்கள் ஆளுகை மற்றும் செல்வாக்கை
பெருமளவில் இழந்த நிலையில், 1906ல் முஸ்லீம் லீக்கை
உருவாக்குகிறார்கள். உருவான போதும் இதுவும் உயர் வகுப்பு முஸ்லீம்கள் பாதுகாப்பு மற்றும்
முஸ்லீம்களின் உரிமைகள பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உருவானது. காலப்போக்கில்
இதுவும் முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை இலக்காக கொண்டு நகர்ந்து அதன்
இலக்கை அடைந்தது. இந்த கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஏற்கனவே உருவான காங்கிரஸ்
இயக்கத்தில் மிதவாத காங்கிரசார், தீவிரவாத
காங்கிரசார் என இரு பிரிவினர் செயல்பட்டதும், இந்துத்துவ மனநிலை கொண்டோர்
காங்கிரசில் அதிக அளவில் இருந்ததும். அப்போதெல்லாம் காங்கிரசில் இருந்த முகமது அலி
ஜின்னா பிற்காலத்தில் முஸ்லீம் லீக்கில் இணைந்து பாகிஸ்தான் உருவாக முக்கிய
காரணமாக அமைந்தார். இதுவே முதலில் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவான அரசியல்
இயக்கம்.
மத அடிப்படையில்
முஸ்லீம்களுக்கு ஒரு அரசியல் அமைப்பு உருவான பின்னர், இந்துகளுக்காக ஒரு அரசியல்
இயக்கம் உருவாக்கபட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் 1909ல் பஞ்சாப் இந்து மகாசபா உருவாக்கபட்டு அது பின்னர் 1915ல் சர்வதேச இந்து மகாசபா அதாவது அகில இந்திய
இந்து மகாசபா என உருவெடுத்தது. இயல்பாகவே இதன் பின்னணியில் பார்ப்பனர்கள்
இருந்தனர். அப்போது அதன் நோக்கம் இந்து ஒற்றுமை என்றது. ஆனால் கவனமாக அந்த அமைப்பை
ஆங்கிலேயே அரசுக்கு விசுவாசமான அமைப்பு என அறிவித்தது. பிறகு 1921ல் அது தனது நிலைப்பாட்டை மாற்றி ஒன்றிணைந்த
சுயராஜ்ஜியம் என்பதை நோக்கமாக அறிவித்தது. அரசியல் செயல்பாட்டில் இருந்த இந்து
மகாசபா 1925ல் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு
புதிய தேர்தலில் போட்டியிடாத இந்து அமைப்பு உருவானதன் காரணமாக முடிவுக்கு வந்தது.
இந்த அமைப்பு மதத்தை அடிப்படையாக கொண்டு உருவான அரசியல் இயக்கம்.
1917ல் ரஷிய புரட்சி
நடைபெற்று கம்யூனிஸ்ட் நாடு உருவான பின்னர், 1925ல் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுகிறது.
வர்க்க வேறுபாட்டை ஒழித்து சமதர்ம சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட மார்க்சிய
கோட்பாட்டை கொண்ட இயக்கம் இது. இந்திய சீன போருக்கு பிறகு இரண்டாக பிளவுபட்ட
கம்யூனிஸ்ட் இயக்கம் தனித்து செயல்படுகின்றன. இந்திய ஒன்றிய நாடுகளின் விடுதலைக்கு
பிறகு தேர்தல் அரசியலில் ஈடுபடும் இயக்கம் இது.
அன்றைய ஒன்றிணைந்த மதராஸ்
மாகாணத்தில் ஒரு அரசியல் இயக்கம் மெல்ல முளைக்க ஆரம்பித்தது. 1909ல் இரண்டு வக்கீல்கள் சேர்ந்து மதராஸ்
பார்ப்பனரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பினை உருவாக்குகின்றனர். அதன் பின்னர் மதராஸ் யுனைட்டெட்
லீக் என்ற அமைப்பு பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக உருவாக்கப்படுகிறது. இந்த
அமைப்பின் பெயரை மதராஸ் திராவிடர் சங்கம் என மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று
அவ்வாறே மாற்றப்படுகிறது. இந்த அமைப்பு பார்ப்பனரல்லாத மாணவர்களின் கல்வி
வளர்ச்சிக்காக செயல்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் செயலாளராக இருந்த நடேசனார்,
தியாகராயர், டி.எம்.நாயர் மூவரும் இனைந்து பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை பெரிய
இயக்கமாக கட்டமைக்க திட்டமிட்டு 1916ல் தென்னிந்திய நல உரிமை
சங்கத்தை உருவாக்குகின்றனர். அன்றைய சூழலில் கல்வி மற்றும் அரசு பணிகளில்
பார்ப்பனர்கள் அதிக அளவில் இருந்ததும், காங்கிரஸ் இயக்கத்தில் பார்ப்பனர்களின்
செல்வாக்கு அதிக அளவில் வளைந்து இருந்ததும், அன்னிபெசன்ட்டின் ஹோம் ரூல் இயக்கம்
பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதை ஊக்குவித்ததும், பார்ப்பனர் அல்லாதோர்
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி இருந்தும் இப்படி ஒரு அமைப்பு
உருவாக காரணமாக அமைந்தது. இந்த அமைப்பு நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பெயராலேயே
நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு ஆங்கிலேயே அரசு கொண்டுவந்த
சீர்திருத்தத்தின் விளைவாக 1920ல் நடத்தப்பட்ட தேர்தலில்
போட்டியிட்டு வென்று ஆட்சியில் அமர்ந்து பல சமூக சீர்திருத்த சட்டங்களை கொண்டுவந்தது.
பார்ப்பனர் அல்லாதோர் உயர்விற்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து 13 ஆட்சியில் இருந்தது இந்த கட்சி. அதுவரை
தேர்தலில் போட்டியிடாமல் இருந்த காங்கிரஸ் 1937ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டது அதில் நீதிக்கட்சி பெரும்
தோல்வியை சந்தித்தது. 1938ல் பெரியார்
ஈ.வெ.இராமசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நீதிக்கட்சி 1944ல் அவரால் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காங்கிரசில் தலைவராக இருந்து அங்கு இருக்கும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை
எதிர்த்து, வெளியேறிய பெரியார் ஈ.வெ.
இராமசாமி அவர்களால் சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித
சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925ம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய சமூகத்தினிடமிருந்து
இவர்களை மீட்டெடுக்கவும்,
அவர்களை சமுதாயத்தின்
மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது. இவ்வியக்கத்தின் கொள்கை தமிழகத்தில்
மட்டுமின்றி மலேசியா,
சிங்கப்பூர் வாழ்
தமிழர்கள் என்று அனைவரிடமும் பரவியது. 1938ல் நீதிக்கட்சி பெரியார் ஈ.வெ.இராமசாமியின் தலைமைக்கு வந்த பிறகு, இந்த
இயக்கமும் திராவிடர் கழகத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது. 1944க்கு பிறகு இந்த இயக்கம்
தேர்தலில் போட்டியிடாத இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் இருந்து
பிரிந்த அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் 1949ல் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி அது 1956ல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதன்
பிறகு தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. திராவிடர்
கழகத்தின் கொள்கையை அரசியல் அதிகாரத்தின் மூலமாக செயல்படுத்த உறுதியேற்று
செயல்பட்டு வருகிறது இவ்வியக்கம். 1912ல் தொடங்கி ஜாதி
ஆதிக்கத்தால் ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய இயங்கும் இயக்கமாக
இருக்கிறது இதன் தொடர் செயல்பாடுகள். பெயரில் திராவிடர், திராவிட என இருந்தாலும், அது
பண்பாடு சார்ந்த பெயராகவும், ஆரியர்கள் எனப்படும் பார்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும்
குறியீடாகவும் மட்டுமே அதன் தலைவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. திராவிடர்
கழகத்தின் தலைவரான பெரியார் திராவிடர் என்பது குறித்து “இன்றைய தினம் ஆரிய -
திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார,
பழக்க, வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர
வேண்டும்” என்று தெளிவுபடுத்துகிறார்.
இந்திய ஒன்றியம் அமைந்த
பிறகு, பல அரசியல் கட்சிகள் பல தனி நபர்களால் பல நோக்கங்களோடு
உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளில் பல தனிப்பட்ட ஜாதியை அடிப்படையாக கொண்டிருப்பவைகளாக
இருக்கின்றன. இதில் ஆந்திரா போன்ற பகுதிகளில் முன்னேறிய ஜாதியை சேர்ந்தவர்களும்,
சில பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களும், சில பகுதிகளில்
தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களும் அரசியல் இயக்கங்களை உருவாக்கி ஆட்சியை
பிடித்த காரணத்தால், இந்த ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் இந்திய ஒன்றியம்
முழுவதும் பல ஆசைகளோடு பல்கி பெருகியுள்ளன. "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward
Classes) மற்றும் அட்டவணை சாதிகள்
(Schedule Castes) என்றும் குறிப்பிடப்
பெற்றுள்ள மக்களை மராத்திய மொழி சொல்லில் தலித் என்று குறிப்பிடப்படுவதுண்டு. இதை மாகாத்மா
ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்
சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர்,
அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed)
இச்சொல்லை உருவாக்கினார். சட்ட மாமேதை Dr.B.R.அம்பேத்கரும் தலித் என்ற சொல்லை மனித உரிமைப்
போராட்டம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தவறுதலாக, பட்டியலின ஜாதிப்பிரிவினர் அரசியலுக்காக இந்தச்
சொல்லை அந்தப் பிரிவில் இருக்கும் சிலர் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பட்டியலின ஜாதிகளை அரசு ஆணைப்படி
ஆதிதிராவிடர் என்றும்,
அதற்கானத்துறையை ஆதி
திராவிடர் நலத்துறை என்றும் இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஜாதி சான்றிதழ்களிலும்
அப்படியே குறிப்பிடப்படுகிறது. பட்டியலினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது
திராவிட அரசியலை மையப்படுத்துவதாக ஜாதிய அமைப்புகள், சங்கங்கள் கருதியதால் தலித்
என்ற வடமொழிச் சொல்லை ஒரு சில ஜாதிய அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது. அரசு அட்டவணைப்படி 87 ஜாதிகள் பட்டியல் ஜாதிகளாக உள்ளன. இவைகள்
அனைத்தும் சமூக படிநிலையில் மேலும் கீழுமாக ஒன்று சேர வாய்ப்பில்லாத சமூக சூழல்
நிலவுகிறது. இந்நிலையில், வட தமிழ்நாட்டை தனி மாநிலமாக்கினால் தங்களது கட்சி
வெற்றி பெறும் என்ற எண்ணத்தின் காரணமாகவோ என்னவோ தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என
சொல்லிய வன்னியர் ஜாதியின் சங்கத்தோடு தொடர்புடைய பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ்,
தலித் அரசியல் செய்வோருக்கு சாதகமாக, தலித்
அல்லாத ஜாதிகளின் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி, தலித் மற்றும் தலித்
அல்லாதோர் என்ற இரு துருவ அரசியலை உருவாக்கிட முயல்கிறார். இந்த இரு துருவ அரசியலே
தலித் அரசியலின் வெற்றிக்கு வழி என்பது தலித் அரசியல் சித்தாந்த சிந்தனையாளர்கள்
சிலருக்கு நன்றாகவே தெரியும்.
இந்த இரு துருவ அரசியல்
என்பது மிகவும் முக்கியமானது. எதிரி யாரென தெரியாமல் காற்றில் கத்தி சுழற்ற
சொல்லுவது அறிவுடமையாகாது. எதிரியை அடையாளம் காணாமல் எதிரியின் தாக்குதல் நடவடிக்கையை
எதிர்ப்பது என்பது வெற்றிக்கு இட்டுச் செல்லாது. எதிரியை நேரடியாக எதிர்த்தால்தான்
எதிரியின் தாக்குதல் நடவடிக்கை குறையும். ஒரு அரசியல் இயக்கம் தனது இலக்கு எது?
அதற்கு தடையாக இருக்கும் தனது சித்தாந்த எதிரி யார்? என்பதை துல்லியமாக அடையாளம்
காட்டி இயக்கினால்தான் அது தனது தொண்டர்களை நீண்டகாலம் இயக்க முடியும். இப்போது
இந்திய அரசியல் கட்சிகள் மக்களை ஒன்று திரட்ட யாரை எதிரிகளாக காட்டுகிறார்கள் என்பதை
பார்க்க வேண்டியிருக்கிறது.
காங்கிரஸ் தொடங்கப்பட்ட
காலத்தில் அது எதிரியாக யாரையும் காட்டவில்லை. மெல்ல அது ஆங்கிலேயரை எதிரியாக
அடையாளம் காட்டியது, எதிரியினால் ஏற்படும் பாதிப்புகளை பேசி இந்தியர்களை
ஒன்றிணைத்தது. எதிரியை எதிர்த்தது வெற்றியும் பெற்றது.
முஸ்லீம் லீக் தொடங்கப்பட்ட
காலத்தில் அது எதிரியாக யாரையும் காட்டவில்லை. மெல்ல அது இந்துத்துவாவை எதிரியாக
காட்டி எதிரியினால் ஏற்படும் பாதிப்புகளை பேசி முஸ்லீம்களை ஒன்றிணைத்தது. தனி நாடு
கோரிக்கையை நோக்கி நகர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது.
இந்து மகாசபா தொடங்கப்பட்ட
காலத்தில் அது எதிரியாக யாரையும் காட்டவில்லை. பின்னர், முஸ்லீம்கள் மற்றும்
ஆங்கிலேயர் இருவரையும் எதிரிகளாக காட்டியது. இந்திய ஒன்றியம் உருவானதாலும்,
பாகிஸ்தான் உருவானதாலும், காங்கிரசில் பல இந்துத்துவ சிந்தனையாளர்கள் அதிகாரத்தில்
இருந்ததாலும், இந்து மகாசபாவில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.
அதன் வழிகாட்டுதலில் இயங்கிய ஜனசங்கம் ஆகியவை பெரிய அளவில் மிளிரவில்லை.
இருப்பினும், இஸ்லாமிய கிருஸ்துவர்களை தங்கள் எதிரிகளாக காட்டி இந்துக்களை ஒன்றிணைக்கும்
வேலையில் ஈடுபட்டு அதன் புதிய அரசியல் பிரிவான பிஜேபியை வெற்றி பெற
வைத்திருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி
ஆங்கிலேயரை எதிரிகளாக அடையாளம் காட்டி இயங்கினாலும், இந்திய ஒன்றியம் அமைந்த
பிறகு, அது இரண்டு கட்சிகளாக உடைந்த பிறகு, பாமர மக்களுக்கு புதிய வர்க்க எதிரிகளை
தெளிவாக காட்டி புரிய வைக்க முடியாத நிலையில், வர்ண வேறுபாட்டால் ஏற்பட்ட வர்க்க
வேறுபாடு குறித்து அதிகம் கவலைப்படாமல் இயங்கியதால் சற்று சறுக்கினாலும், அதன்
கொள்கை எதிரியை மார்க்ஸ் தெளிவாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
நீதிக்கட்சி தனது எதிரி
யாரென அடையாளம் காட்டினாலும், காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாத போது தேர்தலில் வென்றாலும்,
காங்கிரசை போல மக்களை நெருங்காமல் இருந்த காரணத்தினால் தோல்வியை சந்தித்தது. அதன்
பிறகு திராவிட இயக்கத்திற்கு தந்தை பெரியார், எதிரி யார் என்பதனையும் எப்படி
எதிர்க்க வேண்டும் என்பதனையும் தெளிவாக காட்டிய திராவிடர்களை ஒன்றினைத்ததால், அதன்
வழி வந்த திராவிட இயக்கம் தொடர்ந்து வெற்றி பெற முடிந்தது.
அதுபோல ஜாதியை
அடிப்படையாக கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள் பலவும் அந்த பகுதியில் உள்ள மற்ற
ஜாதியை சேர்ந்தவர்களை எதிரிகளாக அடையாளம் காட்டி, தங்கள் ஜாதியை சேர்ந்தவர்களை
ஒன்றிணைத்து அரசியல் செய்கின்றன. அதில் சில வெற்றியையும் பெறுகின்றன.
இந்த சூழலில், நேற்று ஒரு
தனியார் தொலைகாட்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த திரு.ரவிகுமார்
அவர்கள் ஆரியர் – திராவிடர் என்பது தற்போது பொருந்தாதது என்றும் அப்படி பேசுவது
இனவாதம் என்பது போலவும், தற்போது ஆரியபவன் வைத்திருப்பவர்கள் ஆரியர்களா? என்றும் பேசியிருக்கிறார்.
இனவாதம், மதவாதம்,
ஜாதிவாதம் குறித்து நாம் கவலைப்பட்டே தீரவேண்டும். அவைகள் ஆபத்தானவை என்பதால்.
மதவாதம் எப்படிபட்டது? பாகிஸ்தான்
பிரிவினை காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை எத்தனை ஆயிரம் உயிர்கள் மதவாதத்தால் பறிபோயிருக்கின்றன,
மதவெறி ஊட்டும் மதவாத அரசியல் கட்சிகளால் எத்தனை மதக் கலவரவங்கள் நடந்திருக்கின்றன. இங்கு மட்டுமல்ல உலகம்
முழுவதும் இதுதானே நிலை.
ஜாதிவாதம்
எப்படிப்பட்டது? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஜாதியால் தாழ்ந்தது, இழந்தது போதாது என, ஜாதி
கட்சிகள் வந்த பின்னர் ஜாதி மோதல்கள் எத்தனை நடைபெற்றிருக்கின்றன? எத்தனை உயிர்பலிகள் ஏற்பட்டிருகின்றன?
எராளமல்லவா.
இனவாதம் எப்படிபட்டது?
ஜெர்மனியில் , இலங்கையில் நடந்த படுகொலைகள் இனவாதத்தால் ஏற்பட்ட இனப்படுகொலைகள். இந்திய ஒன்றியத்தில்
ஆரியர், திராவிடர் என்று பேசும் ஒரே இயக்கம் திராவிடர்
இயக்கம். அந்த இயக்கம் அப்படி பேச ஆரம்பித்து 100 ஆண்டுகள் தாண்டிவிட்டது. இதுநாள்
வரை அவர்கள் எதிரிகளாக காட்டிய ஆரியர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் ஒரே ஒருவராவது
திராவிட இயக்கத்தினரால் கொல்லப்பட்டிருக்கிறார்களா? இல்லையே. ஏன்? திராவிட இயக்கம் இனவாதம் பேசி இனவெறியை தூண்டி அதில்
அரசியல் லாபம் பார்க்கும் இயக்கமல்ல. அது தனது மக்களில் பெரும்பான்மையானோர் ஆரியர்கள்
எனும் சிறுபான்மையினரால் தாழ்த்தப்பட்டு சமூகத்தில் இழிநிலையில், கீழ்நிலையில், இருக்கிறார்களே என
கவலைப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக உருவான இயக்கம்.
உள்ளத்தால் தாழ்ந்து இருந்த அந்த மக்களுக்கு உணர்வூட்ட, தன்னம்பிக்கையூட்ட, அவர்கள் இழந்தவற்றை மீட்க, அவர்கள் இழந்தவற்றை அடையாளம் காட்ட, அதை பறித்தவர் யார், பறிப்பவர்கள் யார் என
அடையாளம் காட்ட, அவற்றை வன்முறை இல்லாமல் மீட்க கற்றுக்கொடுத்த
இயக்கம் திராவிடர் இயக்கம். அதனால்தான் உயிர்பலி இல்லாமல் சமூக புரட்சி நடந்தது
தமிழகத்தில். உயிர்பலி இல்லாமல் அரசியல் மாற்றம் நடந்தது தமிழகத்தில். எனவே
திராவிடர் இயக்கம் இனவாத இயக்கமல்ல என்பது இதனால் எளிதாக புலனாகிறது. இதனை
அவர்களின் எதிரிகளாக சொல்லப்படும் ஆரியர்களே எற்றுக்கொல்வார்கள்.
பெரியார் பார்ப்பன இளைஞர்கள்
சங்கத்தில் கலந்துகொண்டார் என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்? ஜாதிகளை
விட்டுவிட்டு வாருங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம் என வேண்டுகோள்
விடுத்தார். அவருடைய வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது. அது திராவிடர் இயக்கத்தின்
தவறா? மக்களை மதத்தாலோ, ஜாதியாலோ பிரிப்பது திராவிடர் இயக்கத்தின் கொள்கை அல்ல.
இனத்தாலும் கூடத்தான். ஆரியர் - திராவிடர் என்பதற்கான விளக்கம் பெரியாராலேயே
தரப்பட்டுவிட்டது. அதெல்லாம் விட அந்த விளக்கம் தந்த உரையில் அவர் குறிப்பிடுவது
இப்போது திரு.ரவிக்குமாருக்கும் பொருந்துவதுதான் வியப்பு.
// இன்றைய தினம் ஆரிய -
திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க, வழக்க அனுஷ்டானத்தின் படியாகும்
என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்தப்படி பார்க்கிறபோது, யார் ஆரியர், யார் திராவிடர் என்றால், சுருக்கமாகச் சொல்ல
வேண்டும் என்றால், தங்களைப் பிராமணர்கள்
என்றும், அந்தப்படி பிராமணர்கள்
என்பதால் உயர் ஜாதிக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிற பார்ப்பனர்கள் என்பவர்கள்
ஆரியர்கள். அதுபோலவே அந்தப் பார்ப்பனர்களாலும், அவர்களின் கடவுள், மதம், சாஸ்திரம், புராண, இதிகாசங்கள் என்பவைகளின் பேரால் நாலாவது ஜாதி மக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று சொல்லப்படுகிற சூத்திர மக்கள்
என்பவர்கள் திராவிடர்கள் ஆவார்கள்.
ஏன் இதை இவ்வளவு தூரம்
விளக்குகிறேன் என்றால், இந்த நாட்டில் யாரும்,
எந்தக் கட்சிக்காரரும் காங்கிரசுக்காரர்களாய்
இருந்தாலும், கம்யூனிஸ்டுகளாய்
இருந்தாலும், சோஷியலிஸ்டாக இருந்தாலும்
அவர்கள் எல்லோரும் இந்த ஆரிய திராவிடப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாதவர்கள் என்பதோடு
மாத்திரமல்லாமல், இந்தக் காரியத்துக்கு
முழு முயற்சி எதிரிகளாவார்கள். அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காங்கிரசுக்காரர்கள்
கம்யூனிஸ்டுகள், சோஷியலிஸ்டுகள்
என்பவர்கள் மாத்திரம் இந்தப்படி ஆரியராவது, திராவிடராவது என்று கேட்பதுடன் பார்ப்பனர்களை அய்யர்கள்
என்று சொல்லுகிறதோடு நம்மவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற நம்மிடம் இருந்து
பிரிந்து போனவர்களும் இந்தப்படியே அதாவது இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள்
அல்ல என்பதாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.//
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11925&Itemid=139 இதில் உள்ள முழு உரையை அவசியம் அனைவரும் படிக்க வேண்டும்.
ஆரிய பவன்
நடத்துகிறவர்கள் யார்? ஐய்யங்கார் பேக்கரி நடத்துகிறவர்கள் யார்? என்பதெல்லாம் ஒரு
புறம் இருக்கட்டும். சமஸ்கிருதத்தை திணிப்பவர்கள் யார்? அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர் ஆவதை தடுத்து வழக்கு போடுபவர்கள் யார்? நீட் தேர்வை கொண்டுபவருபவர்கள்
யார்? மாட்டு கறிக்கு தடை போடுபவர்கள் யார்? இந்த யார்கள் யாரென திராவிடர்
இயக்கத்தவர்களின் பார்வையில் ஆரியர்கள். திரு ரவிகுமாரின் பார்வையில் கேஸ்ட்
இந்துஸ் அதாவது ஜாதி இந்துக்களாக இருக்கலாம். இப்படி ஜாதி இந்துக்கள் என
சொல்பவர்கள் கிறிஸ்டியன் நாடார், கிறிஸ்டியன் பிள்ளை போன்றவர்களை ஜாதி
கிருஸ்துவர்கள் என ஏனோ சொல்வதில்லை.
திராவிட இயக்கத்திற்கு பல எதிரிகள் இருக்கலாம் ஆனால்
அவர்களை விட கவனமாக இருக்க வேண்டியவர்கள்
திராவிடர் இயக்கத்தின் சித்தாந்த எதிரிகள். ஆரியர் – திராவிடர் என்பதை அடிப்படையாக
கொண்டு இயங்கும் திராவிட இயக்கம் இருக்கும் வரை அதாவது அதன் சித்தாந்தம் இருக்கும்
வரை, மதத்தை அடிப்படையாக கொண்ட இயக்கங்களோ, ஜாதியை அடிப்படையாக கொண்ட இயக்கங்களோ
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. இரண்டு திராவிட கட்சிகளும் பெரும்பான்மை
இழந்து மற்றவர்களை நம்பித்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வந்தால்தான் அந்த
இயக்கங்கள் இங்கு ஆட்சியில் அமர முடியும். அதற்கான வேலைகளிலும் அந்த இயக்கங்கள்
ஈடுபடக்கூடும். ஆரியர் – திராவிடர் என்ற
அடிப்படையை எதிர்க்கும் யார் ஒருவரும் திராவிட இயக்க சித்தாந்தத்திற்கு எதிரிகளே.
திராவிடர் இயக்கம் என்பது மதம் மற்றும் ஜாதியை அடிப்படையாக கொண்டது அல்ல. எனவே
அதனை எதிர்ப்பவர்கள் இயல்பாகவே இதில் ஏதோ ஒன்றோடு தொடர்புடைய அரசியல்
சித்தாந்தத்தை கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
இறுதியாக.... இந்த
காலத்தில ஜாதியெல்லாம் யாருங்க பார்க்கிறா? என்று கேட்பதும் இந்த காலத்தில் என்னங்க
ஆரியர் திராவிடர் என்பதும் ஒன்றுதான்!
எல்லாத்தையும் நிறுத்த
சொல்லு நாங்களும் நிறுத்துகிறோம்! என்பதுதான் திராவிடர் இயக்கத்தின் நிலைப்பாடாக
அப்போதிலிருந்து இருந்து வருகிறது.
-
திராவிடப் புரட்சி