Tuesday, 7 February 2012

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதியின் பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதியின் பிறந்தநாள் (17.09.11 அன்று முகநூலில் பதிந்தது)

நான்
கற்ற கல்வி,
பெற்ற அறிவு,
ஈட்டும் பொருள்,
வாழும் வாழ்க்கை,
என்னுடைய,
பகுத்தறிவு சிந்தனை,
சமூக பொறுப்பு,
தனி மனித ஒழுக்கம்,
பொதுநல நோக்கம்
இவை அனைத்திற்கும்...
எதோ ஒரு வகையில்
காரணமாய் அமைந்துள்ளவர்
தந்தை பெரியார்.
அவரது பிறந்தநாளில்,
அவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.
அவர் வழியில்,
இந்த சமூகத்திற்காக உழைப்பேன்
என உறுதி ஏற்கிறேன்.
- திராவிடப் புரட்சி  

கருணை காட்ட விரும்பாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் தி.மு.கவை நோக்கி திசை திருப்பும் பேச்சு.

கருணை காட்ட விரும்பாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் தி.மு.கவை நோக்கி திசை திருப்பும் பேச்சு. (29.08.11 அன்று முகநூலில் பதிந்தது)

மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினிக்கு தூக்குதண்டனையை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டதற்கு காரணம் கலைஞரால் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது உண்மை அதற்காக இன்றும் அவரை பாராட்டவேண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.

அன்று ஒருவருக்கு வழங்கப்பட்ட கருணையே இன்று மற்ற மூவருக்கும் வழங்குங்கள் என்று கேட்பதற்கு முகாந்திரத்தை வழங்கி இருக்கிறது.

ஒருவேளை அன்று நால்வருக்கு அதே அமைச்சரவை கருணை காட்ட பரிந்துரை செய்திருந்தால், நால்வருக்கும் சேர்ந்து அந்த கோரிக்கை மறுக்கபடுவதற்கு வாய்ப்பிருந்தது.

நால்வருக்கும் தண்டனை குறைப்புக்கு பரிந்துரை செய்திருந்தால், மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க ராஜீவை கொன்றது அதுவே அந்த குற்றவாளிகளை தப்பிக்கவைக்கிறது என்று கூசாமல் ஜெயலலிதா பேசியிருப்பார்.

ஜெயலலிதா இந்த மூவருக்கும் கருனைகாட்டமாட்டார் அவர் குணம் அப்படித்தான் என்பது உண்மையான திராவிட இனஉணர்வாளர்கள், அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும்.

ஈவு இரக்கமற்ற அந்த பெண்மணியின் அறிக்கை 23.10.2008  அன்று நமது எம்ஜியாரில் வெளிடப்பட்டது.

நளினிக்கு கலைஞரால் கருணை காட்டப்பட்டது என்ற உண்மை தெரியாத ஜெயலலிதா அந்த அறிக்கையின் ஒருபகுதியில்  கூறியிருப்பதாவது....

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி போய் பார்க்கலாமா? எது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆறஅம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”  இவ்வாறு செல்கிறது அறிக்கை.


கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்ற கருணையற்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் தி.மு.கவை கைகாட்டும் உச்சிகுடுமி சானக்கியதனத்தை காட்டியிருக்கிறார். தனது அரசால் முடியாது என்று சட்டவிதிகளை சுட்டிக்காட்டும் ஜெயலலிதா, குறைந்த பட்சம் ஒரு கட்சியின் தலைவியாக தார்மீக அடிப்படையில் இந்த மரணதண்டனைக்கு எதிராக கருத்தை கருணையோடு தெரிவிப்பதற்குமா சட்டவிதிகள் தடுக்கின்றன???!!!

இத்தனைக்கும் பிறகு அந்த பரிதாபத்திற்குரிய தாயார் அற்புதம் அம்மையார்.”அம்மா என் மகனை காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுகிறார். இளைஞர்கள் இன உணர்வாளர்கள் போராடுகிறார்கள், ஒருவர் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார், தமிழக மக்கள் அனைவரும் அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகிவிட போகிறது என முனுமுனுக்கிறார்கள்.

இன்னமும் கூலிக்கு மாரடிப்பவராய், ஜெயலலிதாவின் கொள்கை பரப்பு துறையை குத்தகை எடுத்தவராய், சீமான் கலைஞரை குற்றம் சாட்டி அறிக்கை விடுகிறார். ஜெயலலிதா சீமான் இருவரின் நோக்கங்களை இந்த கட்டுரை தகர்க்கும் என்று நம்புகிறேன்.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. நேரு உட்பட பலர் காந்தியை சந்தித்து மூவரையும் விடுதலை செய்ய ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைக்க சொன்னபோது, அவர்கள் அகிம்ஸா தர்மத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி மறுத்துவிட்டார். உயிரை காக்கும் வாய்பிருந்தும் சொந்த புகழை காக்க முயன்ற காந்தி, ஆங்கிலேய அரசோடு சேர்ந்து குற்றம் சாட்டபடவேண்டியவர் விடுதலை பெற்ற இந்தியாவில். அதுபோன்ற வரலாற்று தவறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்துவிடக்கூடாது.


இந்த கட்டுரையை ஒரு வேகத்தில் எழுதினாலும்.........

ஒரு தமிழனாய் என் மாநில முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்....தமிழர்கள்...பெரும்பான்மையினோர் விருப்பத்தை...வேதனையை உணர்ந்து தயவுசெய்து இந்த மூவரையும் மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சியையும் எடுங்கள்...உங்கள் ஆதரவை தாருங்கள் என மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.... இதற்கு உங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை...கருணை உள்ளம் மட்டும் இருந்தால் போதும் தாயே....


- திராவிடப் புரட்சி     

பெரியாரிய பார்வையில் விடுதலை நாள் தகவல்கள்

பெரியாரிய பார்வையில் விடுதலை நாள் தகவல்கள் (15.08.11 அன்று முகநூலில் பதிந்தது)

இன்று பிரித்தானிய அரசின் கீழ் இருந்த பிரித்தானிய இந்திய பகுதியின் 572  சுய சமஸ்தானங்களுக்கு முழு விடுதலை வழங்கப்பட்ட நாள்.

இந்த நாளில் நாம் தெரிந்துகொள்ள....

தந்தை பெரியார் திராவிட நாடு குறித்து 17.12.1939 அன்று குடிஅரசுவில் எழுதிய தலைங்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகளில் ஒரு சிறு பகுதியை எடுத்து தந்தால் சிறப்பாக இருக்குமென கருதி தந்துள்ளேன். அந்த செய்தி பின் வருமாறு...

.....*நீண்ட ஒரு பத்திக்கு பிறகு*......கடல் நீரினுள் புகுந்து முத்துக்களையும் பவளங்களையும் எடுத்துவர கருவிகளையும், நீரினுள் புகுந்து செல்லும் சப்மரீன்களையும், டார்பிடோக்களையும், எண்ணும் நவீன இயந்திரங்களையும் கண்டுபிடித்து வருபவர்களிடம் மச்சவதாரத்தையும், வராக அவதாரத்தையும், கூர்ம அவதாரத்தையும் , குறித்துச் சொன்னால் நகைக்காமல் என்ன செய்வார்கள் என்று கேட்கிறோம். ஆகவே, இத்தகைய நாகரீகத்தையும், பழக்கவழக்கத்தையும், கலைகளையும், கொண்டவர்கள்தானா சுதந்திரத்தோடு வாழ்துவிடப் போகிறார்கள்? இவர்களுக்கா சுதத்திரம் என்று எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய நாகரீகத்தையும், கலையையும், தெய்வ வழிபாட்டையும் கொண்டது எது? எச்சமூகம்? எந்நாடு? என்பதை சிந்தித்து பார்க்கவேண்டாமா? வெறும் ரோஷம் எதற்கு? ஏக தெய்வ வழிபாட்டையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், தொழிலையே பிரதானமாகவும் கொண்ட கலையையும், நாகரீகத்தையும் உடைய சமூகம், நாடு எத்தனை நாளைக்கு மேற்சொன்ன பழிச் சொற்களைத் தாங்கி நிற்கும்? பயிர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசை உடையவன் களைகளைக் களைந்தெறிய பிரியப்பட மாட்டானா? அதற்கும் தண்ணீர் இறைத்துவிட்டு இத்தனை நாள் வளர்தோமே இப்பொழுது அவைகளை எப்படி களைந்தெறிவது என்று எந்த பயித்தியகாரனாவது என்னுவானா? அது போலவே, நமது கலை, நாகரீகம், பழக்கவழக்கம் ஆகியவைகளானாலும் சரி, அவைகளை நிலை பெற்றிருக்கச்செய்யும் எந்தச் சட்டமானாலும் சரியே களைந்தெறியவேண்டியது முதற்கடமையல்லவா என்று கேட்கிறோம்.

இவ்வண்ணம் நம்நாட்டிலே இன்று நேற்று தோன்றியதாக யாரும் கருதி விட முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி. தியாகராய பெருமான் மனதிலும் தோன்றிவிட்டது. ஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட மக்களை, திராவிட நாட்டை காப்பாற்ற வேண்டும். இந்நாட்டிலிருந்து ஆரியக் களையை களைந்தெறிய வேண்டும் என்ற கருத்தின்மீது பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை தோற்றுவித்தார்கள். இந்த எண்ணம் அன்று இருந்ததினாலேதான் பார்பனரல்லாதோர் இயக்கத்தை தோற்றுவித்தார்கள். இந்த எண்ணம் அன்று இருந்ததினாலேதான் பார்பனரல்லாதோர் இயக்கத்தார் “திராவிடன்” என்ற பத்திரிக்கையை தோற்றுவித்து நடத்தி வந்தார்கள். இப்பொழுது அவ்வெண்ணம் கொழுந்துவிட்டு எரிகிறது. திராவிட இரத்தம் கொதிக்கிறது. அதன் காரணமாகவே சென்ற 10ஆம் தேதி நாடெங்கும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் ஒலித்தது. திராவிட நாட்டை தனியாக பிரித்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கபட்டிருகிறது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் சரித்திர அறிவோ, அரசியல் அறிவோ அற்ற ஒரு சிறு கூட்டம் பரிகாசம் பண்ணுகிறது. தமிழ்நாடு தமிழருக்கே ஆய்விட்டால் கன்னடர்,ஆந்திரர்,கேரளர் என்னாவது என்று கேட்கின்றன அம்முண்டங்கள். தமிழ், தாய் மொழியென்றும் அதிலிருந்துதான் கன்னடம், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகள் பிறந்தன என மொழி ஆராய்ச்சி வல்லுனர்கள் புகலுகின்றனரே. அப்படியிருக்க தமிழ்நாடு தமிழருக்கே என்றால் அவர்களைச் சேர்ந்த குழுவினர்களாகிய கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் தனித்து பிரிந்து போய்விடுவார்களோ? இந்த அற்ப விஷயம் எப்படி அந்த மர மண்டைகளில் ஏறப் போகிறது? அது ஒருநாளும் ஏறப்போவதில்லை என்பதையும் நாமறிவோம்.

பழைய நாகரீகத்தை என் இவ்வளவு பிடிவாதமாக ஆதரிக்கிறோம் என்றால், புது உலகு சமைப்பதற்கான திட்டங்களும், கொள்கைகளும், முறைகளும் நமது தமிழர் கலையிலும், நாகரீகத்திலும், பழக்கவழக்கதிலும் இருப்பதனாலேயே ஆகும். இன்று நாம் அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும், சீர்குலைந்து க்ஷீணதிசையடைந்து வாழ்ந்து வருவதற்கு காரணம் ஆரிய ஆதிக்கமே என்று நாம் எந்த மலையுசியிளிருந்தும் கூசாது கூறுவோம். சரித்திர ஆதாரங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுவோம். அறிஞர் கூற்றுகள் எத்தனை வேண்டுமானாலும் தீட்டுவோம். நன் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருப்பதற்கும் நாம் அடிமையாய் இருப்பதற்கும் பார்பனியமே அதாவது, ஆரியமே காரணம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். இந்நாட்டில் பார்பனியம் இழைத்த கொடுமைகள் பல என தோழர் காந்தியார் பார்பனிய வலையில் விழுவதற்குமுன் கூறியிருக்கிறார். ஆகவே, திராவிட நாடு முன்னேற வேண்டும் ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமிழ்நாடு தமிழருக்கே வர வேண்டும் எனக் கோருகிறார்கள்.

மற்றொரு காரணம் என்னவென்றால், ஒரு மாகாணம் மற்றொரு மாகாணத்தை எந்தவித காரணத்தினாலும் சுரண்டகூடாது என்பதினாலே ஆகும். இப்பொழுது நம்மாகானம் அறிவுத்துறையிலே சிறந்து விளங்கியும், அதாவது உயர்ந்த கல்வியிலே நம்மவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகயிருந்தும், வர்த்தகம், செல்வம் ஆகிய விஷயங்களிலே வடமாகானத்துக்கு இளைத்தே இருந்து வருகிறது.......*பத்தி தொடர்கிறது*........

தமிழன் தன்  “லட்சியம்” வெற்றி பெறும் வரை அயரா மாட்டான் அல்லும் பகலும் அதே சிந்தனையாயிருப்பான் தமிழன் இத்துணிச்சலை பெற்றிருப்பதில் ஒன்று அதிசயம் ஒன்றுமில்லை. இன்று உலகிலே நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்ப்பவர்களுக்கு இதில் ஒன்றும் அதிசயம் காண மாட்டார்கள். அய்ரோப்பாக் கண்டத்தில் எத்தனை சிறு நாடுகள் நமது திராவிட நாட்டைவிட ஜனத் தொகையிலும், விஸ்தீரனதிலும் எவ்வளவோ சிறிய நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன என்பதை யாவரும் அறிவர். ஏன் அவைகள் தனக்ல் சுதந்திரத்திற்காக போராடுகின்றனவென்றால், அப்பொழுதுதான் தங்கள் கலை, நாகரீகம் முதலியவைகள் காப்பாற்ற முடியும் என்ற காரணதிலேயாகும். அய்ரோப்பா எல்லாம் ஒன்றாகிவிட்டால் மெஜாரிடியினர்களுடைய நாகரீகத்தை புகுத்தி மற்றவைகளை அழிக்கச் செய்துவிடுமென்ற அச்சம் ஒவ்வொரு நாடும் கொண்டிருப்பதனால்தான் இன்று அவ்வாறு போராடுகின்றன. ஆகவே, உலகம் போற்றும் நமது கலை, நாகரீகம் பழக்கவழக்கம் ஆகியவை வளர வேண்டுமானால் – உலகிலேயே பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் நமது நாட்டுக்கு அதாவது திராவிட நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும். ஏற்கனவே மாகாணங்களுக்கு சுய ஆட்சி வழங்கப்பட்டுவிட்டது. இப்பொழுது நாம் கோருவதெல்லாம் நமது கலையின் மீதும், நாகரீகதின்மீதும், பொருளாதாரத்தின் மீதும் வேறு எந்த மாகாணமும் அதிகம் செலுத்த கூடாதுஎன்பதேயாகும். இந்த பாதுகாப்பை கோருவதில் என்ன தப்பு என்று கேட்கிறோம். நிலம் படைத்தவன் தனது நிலத்தை சுற்றி அடுத்த நிலத்துகாரனது ஆடு மாடுகள் வந்து பயிரை அழித்துவிடாமல் பார்த்துகொள்வதற்காக வேலி போட மாட்டானா? அப்படி அவன் வேலி போடுவது தவறா? என்று கேட்கிறோம். இதுபோலவேதான் நமது மாகாணத்திற்கு பந்தோபஸ்து தேடுகிறோம் இது எப்படி குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

எனவே, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் திராவிடநாடு தனியாக பிரிக்கப்படும்வரை சலிக்காமல் ஒலிக்கபடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அதற்கு ஆவன செய்ய ஒவ்வொரு தமிழனும் தன்னைப் பக்குவபடுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

திராவிடநாடு! திராவிடருக்கே!     


மேற்சொன்ன தந்தை பெரியாரின் கருத்துக்களை படித்தபிறகு இன்று எனக்கு கீழ் கண்ட கேள்விகள் எழுகின்றன...

நம் மொழி காப்பாற்றபடுகிறதா?

தமிழர்கள் எப்படி தன் மொழியில் பெயர் வைப்பதை அசிங்கம் என கருதி வட மொழியில் பெயர் வைக்கின்றனர்?

தமிழன் பண்டிகை வட நாட்டில் கொண்டாடப்படுவதில்லை, ஆனால், தீபாவளி, ஹோலி, ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகளை எப்படி நம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர்?

வடநாட்டினர் தென்நாட்டின் உடையை உடுத்த விரும்பாத நிலையில், தமிழர்களின் உடையை தமிழர்கள் வெறுத்து ஒதுக்கி...வட நாட்டின் பைஜாமா குர்தா, சல்வார் கமீஸ்..துப்பட்டா என்று மாறியது எப்படி?

தென் மாநில மொழிகளை வடநாட்டினர் கற்றுக்கொள்ளாத வெறுக்கும் நிலையில்...தமிழர்கள் எப்படி இந்தியை விருப்பத்துடன் கற்றுகொள்ள தொடங்கினர்?

தென்நாட்டின் உணவு வகைகளை வடநாட்டினர் வெறுத்து ஒதுக்கும் நிலையில்...தென்நாட்டினர் எப்படி வட இந்திய உணவை சுவைத்து சாப்பிட பழகினர்? பல உணவகங்களில் வட இந்திய பதார்த்தங்கள் என பட்டியலே தரப்படுகிறது எவ்வாறு?

இன்றும் தமிழகம் மற்றும் ஏனைய தென் மாநிலங்கள் பொருளாதாரத்தில் வடநாட்டை விட பின்தங்கியுள்ளது எவ்வாறு?

இந்த கேள்விகளுக்கான பதில்களும் தந்தை பெரியாரின் தலையங்கத்தில் உள்ள இறுதி பத்தியில் தெளிவாக தெரிகிறது. எதை அவர் தடுக்க நினைத்தாரோ அதை தடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் நமக்குள் எழுகிறது....


பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற அந்த 572 சுய சமஸ்தானங்களில் நம் திராவிடநாட்டு பகுதியும் இருந்தாலும்.....மொழி, கலை, நாகரீகம், பழக்கவழக்கம் ஆகியவற்றில் சிறந்திருந்த நாம் இன்று வட இந்திய ...ஆரிய...பார்பனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறாமல் இருக்கிறோம்...நாம் அடிமைகள்தான் இன்றும். அன்று ஆரியரிடமிருந்து பிரித்தானியரிடம் சென்றோம் மீண்டும் ஆரியரிடம் அடிமையாக்கபட்டுவிட்டோம்.

ஆகவே, எனக்கு இந்த நாளில் எந்த மகிழ்ச்சியும் ஏற்படவில்லை...போலியாக மகிழ்ச்சியை வெளிபடுத்திகொள்ளும் விருப்பமும் இல்லை.

- திராவிடப் புரட்சி                              

1959ம் ஆண்டு, சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி, இன்றும் நாம் ஒப்பிட்டு பார்க்கும்வண்ணம் உள்ளது

1959ம் ஆண்டு, சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி, இன்றும் நாம் ஒப்பிட்டு பார்க்கும்வண்ணம் உள்ளது.(13.07.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)

“திருவண்ணாமலையிலே நடக்கும் கால்நடைக் கண்காட்சிக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ வின் ஒத்துழைப்பு பெறவேண்டும் என்ற பண்பு கூட உங்கள் உள்ளத்தில் இல்லை. கோடிக்கனக்கான மக்கள் உள்ளத்திலே என்ன எழுச்சி ஏற்படும்? சொல்லலாம், “நீங்கள் 15 பேர்கள்தான், நாங்கள் 150 பேர்கள்” என்று. என்றாலும், அளவு அறிந்து இடம் அளிக்கும் Propotional Representation முறையை காங்கிரஸ் மேற்கொண்டால், காங்கிரசுக்கு 50 லட்சம் வாக்குகள் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மூன்றில் ஒரு பங்கு அல்லது 17 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். அளவு அறிந்து இடம் அளிக்கும் முறை இருந்தால், நாங்கள் 50 பேர் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் அமைத்திருக்கும் தேர்தல் இலக்கணம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் 150 பேர்களும் நாங்கள் 15 பேர்களும் இருக்கிறோம். ஆனால் 17 லட்சம் மக்கள் கிள்ளுகீரைகள் இல்லை. எனவே, எங்களுடைய ஒத்துழைப்பை பெறவேண்டும் என்றிருந்தால், மக்கள் உள்ளத்திலே ஆர்வம எழவேண்டுமென்றால், உங்கள் லட்சியத்தை அவர்கள் முன்னே வைக்கவேண்டும். இவர்கள் என்ன லட்சியம் வைத்திருக்கிறார்கள்?......” இப்படி போகிறது அந்த உரை.

நான் இன்றைய நிலையை எண்ணிப்பார்க்கிறேன்...... அண்ணாவின் உரை எவ்வளவு தெளிவாக பொருந்துகிறது.

இந்தி எதிர்ப்பு போரில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம்

இந்தி எதிர்ப்பு போரில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் (05.07.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)


1909 – இந்தியை கட்டயாமாக ஒவ்வொரு இந்திய குடிமகனும் கற்கவேண்டும் என்று காந்தி பேசினார்.

1916 – தென்னகத்தில் இந்தியை பரப்பும் நோக்கில் ‘தட்சிண பாரத் இந்தி பிரசார் சபா” காந்தியால் துவக்கப்பட்டது.

1917 – இந்தி ஒன்றுதான் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் பொது மொழியாகவும் இருக்க தகுதி வாய்ந்தது என்று காந்தி தெரிவித்தார்.

1918 – தென்னிந்தியாவில் இந்தியை பரப்ப அனைத்து முயற்சிகளையும் முறைப்படி எடுக்கவேண்டும் என காந்தி பேசினார்.

1920 – தென்னிந்தியாவில் இந்தியை பரப்ப, ரூபாய் இருபதாயிரம் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் வசூலிக்கப்பட்டது.

1920 – “திராவிடர்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் பெரும்பான்மையினரின் மொழியான இந்தியை கட்டாயம் கற்றுகொண்டே தீரவேண்டும்” என்று “யங் இந்தியாவில்” காந்தி எழுதினார்.

1924 – அனைத்து சிறுவர் சிறுமியரும் இந்தியை கற்றுக்கொள்ளும் வகையில் கட்டாய பாடமாக்கவேண்டும், அடுத்த பத்தாண்டுகளில் இந்தி இந்தியாவின் பொதுமொழியாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசினார்.

1927 –  சென்னையில் நடைபெற்ற காங்கிரசின் மாநாட்டோடு, அகில இந்திய இந்தி மாநாடும் கூட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து சமுதாயத்தினரும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கவே இனத்தின் பிரசார் சபா நடத்தபடுகிறது என்று கவிக்குயில் என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு சொன்னார்.

1934 , 1935, 1937 – சென்னை மாநகராட்சி மன்றத்தில் இருந்த காங்கிரஸ் உறுபினர்கள், மாநகராட்சி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கபடவேண்டும் என்படஹி தீர்மானமாக நிறைவேற்றி மாகான அரசிற்கு அனுப்பினர். ஆனால் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி தள்ளுபடி செய்தது.

சூலை 1937 – வட இந்தியர்களை நன்கு அறிந்துகொள்ள, தென்னிந்தியர்களுக்கு இந்தி மொழி பற்றிய அறிவு மிகவும் பயன்படும். இந்தி மொழியை கட்டாய பாடமாக்கிடும் எண்ணத்திலேயே நான் இருக்கிறேன். புதிய இந்தி எழுத்துகளை மாணவர்கள் கற்றுகொள்ள தொடங்கினால், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளை வர்கள் எளிதில் பயில ஏற்பட்டுவிடும் என இந்தி பிரசார் சபாவிற்கு வந்த ராஜாஜி சொன்னார்.

ஆகஸ்ட் 1937  - இதே கருத்தை ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்திற்கு வந்த ராஜாஜி (அப்போது பிரிமியர் ஆகியிருந்தார்) சொன்னார்.

ஏப்ரல் 1938 – இந்தி கட்டாயம் என அரசாணையாக அறிவிக்கப்பட்டது.

சூன் 1955 – இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 344ம் விதிப்படி, இந்திய ஆட்சி மொழி ஆணைக்குழு ஒன்றை இந்திய குடியரசு தலைவர் நியமித்தார். அதன் வேலைகள் அனைத்தும் மத்திய அரசின் இந்தி திணிப்பு எண்ணத்தை வெளிபடுத்தின.

ஆகஸ்ட் 1959 -  இந்தி பேசாத மக்களுக்காக நேரு கொடுத்த உறுதி மொழி “ எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும்”.

ஏப்ரல் 1963 – நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்த்ரி ஆட்சி மொழி மசோதாவை கொண்டுவந்தார். அதன்படி, ஜனவரி 26 1965 முதல் இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி.

மேலே குறிபிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும், நம் திராவிட மொழிகளுக்கு எதிராக எவ்வாறு ஒரு தொடர்ந்த திட்டமிடப்பட்ட சதி நடந்து என்பதற்கான வரலாறு.


இதற்கு முன்பு நடந்த இதற்கு பின்பு நடந்த இந்தி எதிர்ப்பு மற்றும் மொழிப்போர் பற்றி நான் அதிகம் தெரிவிக்கவேண்டியதில்லை. அது ஒரு உணர்வுபூர்வமான வீரப்போராட்டம்.

நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் மொழி போரில் வென்றோமா இல்லையா? என்பதை பற்றி...

இந்தி எதிர்ப்பு மற்றும் மொழி போரில் நாம் வென்றதாக கருதிக்கொண்டு மகிழ்ந்து என்பது ஒரு தற்காலிக சுகமே. நாம் அதில் தோற்றுபோனோம் என்பதே உண்மை.

நாம் அன்றும் சரி இன்றும் சரி, உணர்சிவசபடுதல் அல்லது உணர்சிவசபடுத்தபடுதல் ஆகிய இரண்டால் தூண்டப்பட்டு செயல்படுகிறவர்களாக இருகிறோம். நம் உணர்ச்சிகளை திருப்திபடுத்துவதன் மூலமாக நம் எதிரிகள் வெற்றிபெறுகிறார்கள் என்பதே உண்மை.

நான் உங்களுக்கு நேருவின் வார்த்தைகளை அதாவது அவரது உறுதிமொழியை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏனென்றால், அது நம்மை திருப்திபடுத்திய உறுதிமொழி. அவற்றை நன்றாக கவனமாக படிக்கவும். இந்தி பேசாத மக்களுக்காக நேரு கொடுத்த உறுதி மொழி “ எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும்”.


நமது தீவிர போராட்ட உணர்வை கண்டு ஒன்றை நம் எதிரிகள் தெளிவாக புரிந்துகொண்டனர். அதாவது, நேரடியாக சட்டம் போட்டு இந்தியை திணிக்கமுடியாது என்பதை.

அவர்கள் வென்றது உண்மையா? நாம் தோற்றது உண்மையா?

பதில்: உண்மை உண்மை உண்மை.

எவ்வாறு நாம் தோற்கடிக்கப்பட்டோம்???!!!!

நம்மை சட்டத்தின் மூலமாக வழிக்கு கொண்டுவர இயலாத எதிரிகள், சதியின் மூலமாக வழிக்கு கொண்டுவந்தார்கள்.

எந்த திராவிட இயக்கம் அதன் கருத்துகளை பரப்ப திரைப்பட துறையை , எழுத்து துறையை பயன்படுத்தியதோ...அதையே அவர்களும் பயன்படுத்தினர்.

திரைபடத்தில், ஏழைகள் கிராமப்புறத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தமிழ் பெயர் வைத்திருப்பதும் அதே நேரத்தில், நகர மற்றும் பணக்கார கதாபாத்திரங்கள் வடமொழி பெயரை வைத்திருப்பதும் திரைப்படங்களின் வழக்கமாக மாற்றினர். அதே போல சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றிலும் மாற்றினர். இந்த தொடர் சதியால், நம் தமிழ் மக்கள், தமிழில் பெயர் வைப்பதை வெறுக்க தொடக்கி, வடமொழியில் பெயர் வைப்பதை விரும்பதொடங்கினர் அவர்களை அறியாமலேயே.

ஒரு குறிப்பிட்ட காலத்தில், திரைபடத்தில், இயக்குனர் பாலச்சந்தர், இந்தி பாடல்களை தமிழ் படத்தில் பாடுவதுபோல் அமைத்தார். (இன்றும் இரண்டு தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தி பாடல்களை ஒளிபரப்புவது நடக்கிறது).

எந்த நகைச்சுவை கதாநாயகர்களான ஏன்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா போன்றவர்களால், திராவிட இயக்க கொள்கைகள் பரப்பபட்டனவோ...அதே நகைச்சுவை கதாபாத்திரங்களை மொத்த குத்தகை எடுத்தனர் சிலர்... அவர்கள்... ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வீ.சேகர் இப்படியாக பலர்... நினைவுபடுத்தி பார்த்தால் உங்களுக்கே தெரியும்.... கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு வரும் வரை (அதற்குள்ளாக அவர்கள் பணி முடிந்துவிட்டது).   

மெல்ல மத்திய அரசு பணிக்கு, இந்தி இன்றியமையாது என்ற நிலையால் மேலும் நம் மக்களை மாற்றினர்.

இவ்வாறாக நேரடியாக மோதமுடியாத நம் எதிரிகள், மறைமுகமாக, சமூக எண்ணத்தையே மாற்றி வெற்றிகண்டுள்ளனர். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதையே தவறாக, அவமானமாக, கருதி கூச்சப்படும் அளவிற்கு மாற்றியுள்ளனர். உலகிலேயே, தங்கள் மொழியில் பெயர் வைக்க கூச்சப்படும் அதிசிய பிறவிகளாக தமிழர்களை மாற்றியதன் மூலமாக, எதிரிகள் வெற்றிபெற்றுள்ளனர் என்பதே உண்மை உண்மை உண்மை.

இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரு புதிய சட்டசபை தீர்மானத்தை கொண்டுவந்தார், அதாவது, “தமிழை ஆட்சி மொழியாக கொண்டுவந்தால், நாங்கள் இந்தியை பாடமொழியாக எற்றுகொள்கிறோம்” என்று. இது ஒரு புதுவகை சதி. அதாவது, நீங்கள் மருந்து தந்தால், நாங்கள் நோய் கிருமியை எற்றுகொள்கிறோம் என்பதை போல.

மேலும் தமிழக முதலமைச்சராக இருந்த இருக்கிற ஜெயலலிதா, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே.....நாம் வெற்றிபெற்றிருகிறோமா? அல்லது தோல்வியுற்றிருகிறோமா?


-          திராவிடப்புரட்சி

திராவிட இயக்கத்தை குறைகூறி பிழைப்பு நடத்தும் வரலாற்று புரட்டர்களிடம் கவனமாக இருங்கள்

திராவிட இயக்கத்தை குறைகூறி பிழைப்பு நடத்தும் வரலாற்று புரட்டர்களிடம் கவனமாக இருங்கள் (01.07.11 அன்று முகநூலில் பதிந்தது)


‘எல்லாம் வல்ல இறைவனால் கூட இறந்தகாலத்தை அழித்துவிட முடியாது” என்று எழுதினான் புகழ்பெற்ற கத்தோலிக்க பாதிரியார் தாமஸ் அக்வினாஸ்.

நமது திராவிட இன மற்றும் அதன் இயக்க வரலாறை அதன் புகழை தொடர்ந்து அழிப்பதன் மூலம், அந்த கடவுளால் செய்ய முடியாத செயலை தொடர்ந்து திறமையாக செய்துவருகிறார்கள் இந்திய பார்பனர்கள்.

பொய்மைகளாலும், புரானங்களாலும் மூழ்கடிக்கப்பட்ட திராவிடரின் திராவிடதமிழரின் வரலாற்றை மீட்டு, விடுதலையை நோக்கி வீறுநடை போட வைத்தது திராவிட இயக்கம்.

ஆனால் அதன் கடந்த காலத்தை அழிப்பதன் மூலம் இங்கே பல வரலாற்று புரட்டர்கள் ஒரு சீரார்ந்த இயக்கத்தின் சீலங்களை மறைப்பதில் அன்றுபோல இன்றும் கவனமாயிருக்கிறார்கள்.

கடந்த காலத்தை அழிப்பதன் மூலம் விடுதலைக்குப்போராடும் “திராவிட அடிமைகள்”, தமது எதிரி யார்? தோழர் யார்? என்பதை அறியமுடியாமற் செய்வதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தன்னையே அறிந்துகொள்ள முடியாத விசித்திரபிறவியாகிவிட்டான் நம் திராவிட தமிழன்.

இதன் விளைவாக அந்த வரலாற்று புரட்டை, சதியை உணராமலேயே, தமிழ் தேசியம் என்ற பெயரில், சில தமிழ் உணர்வாளர்கள், தங்களின் உண்மையான பாதுகாப்பு அரனும் ஆயுதமுமாகிய திராவிட இயக்கத்தையும் அதன் சிறந்த தலைவரான தந்தை பெரியாரையும் குறை சொல்லுகின்றனர்.

திராவிட தமிழர்களே! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் சமூக விடுதலைக்காக போராடும் எந்த தலைவனையும் நீங்கள் பார்த்ததில்லை என்ற உண்மையை வரலாறு பதிவு செய்துள்ளது. உங்களை ஏய்த்து பிழைத்த ஆரியரை உயர்த்திபார்த்த மன்னர்களைதான் கண்டுள்ளது நம் தமிழகம் உட்பட இருந்த திராவிட நிலம். ஆயிரக்கணக்கான ஆண்டு திராவிட தமிழர்களின் வரலாற்றில், நமக்கு உணர்ச்சியூட்டிய, நம்மை வழி நடத்திய, நமக்காக போராடிய, தன்னலமற்ற முதல் தலைவர் தந்தை பெரியாரே. அவரை இகழ்ந்து தமிழன் நன்றி கெட்டவன் என்ற அவப்பெயரை வரலாற்றில் பதிவு செய்துவிடாதீர்கள்.

- திராவிடப்புரட்சி               

நம்மை பிரித்தாள மீண்டும் ஒரு தீவிர முயற்சி

நம்மை பிரித்தாள மீண்டும் ஒரு தீவிர முயற்சி (28.06.11 அன்று முகநூலில் பதிந்தது)

தந்தை பெரியாரின் கருத்தாழமுள்ள தொடர் பிரச்சாரத்தின் விளைவாக ஒரு மாபெரும் சமூக புரட்சி அமைதியாக நம் தமிழகத்தில் மட்டும் நடந்தது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இருக்கும் மக்களையும், தமிழக மக்களையும் தனித்து வேறுபடுத்திகாட்டும் அடையாளம் அது. இந்தியாவிலேயே அந்த உயர்வான நாகரீக மாறுதலை அடைந்து தமிழகம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளவர்கள் பலருக்கு, இந்த வித்தியாசம் நம்மை உயர்வானவர்களாக காட்டுகிறது. ஆம். அந்த புரட்சி, வித்தியாசம் என்பது,  இந்தியாவில் ஜாதி பெயரை தங்களின் பெயருக்கு பின்னால் போடாத ஒரே மக்கள் தமிழக மக்களே.



உலகில் எங்கும் இல்லாத பிற்போக்குத்தனமான, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி  அமைப்பை, தொடர்ந்து காப்பாற்றும் வகையில், அதை பல மாநிலங்களில் இன்றும் தங்களது ஜாதி பெயரை பின்னால் சேர்த்துகொள்ளுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறு  போடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் சொல்லபோனால், அவ்வாறு போடுவதை இழிவாக கருதும் சமூகமாக மாறிவிட்டோம்.  இந்த உயர்நிலை எண்ணம், நம்மை பிற மாநிலத்தில் உள்ள பிற்போக்குவாதிகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இது தந்தை பெரியாரால் ஏற்படுத்தப்பட்ட உணர்வின் விளைவு.


சமீபகாலமாக, மாநில கட்சிகளின் வலிமையை குறைப்பதற்கும், மாநில கட்சிகளின் சாதனைகளை குழி தோண்டி புதைப்பதற்கும், தேசிய கட்சிகள் மற்றும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி மக்களும் சேர்ந்து திட்டமிட்டு செயலாற்றிவருகின்றனர். இது பல மாநிலங்களில் நடந்தாலும், தமிழகம் அவர்களுக்கு ஒரு சவாலான இடம். ஏனென்றால், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தேசிய கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை, அவைகளின் வளர்ச்சி முடங்கிவிட்டது.  இவற்றை சரி செய்யமுயலும் தேசிய கட்சிகள், பல முனைகளில் இருந்தும் தங்களது சாமர்த்தியமான நடவடிக்கைகளை முடுக்கி உள்ளது. 


இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழகத்தை பொருத்தவரை, திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை முடுக்க, அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாக அவற்றை செயல் இழக்க செய்ய சதிகள் நடைபெறுகின்றன. திராவிட இயக்கத்தின் சாதனைகள் பல இருந்தாலும், அவற்றில் முதன்மையானதும், நிருபிக்கபட்டதுமானது, நான் மேற்சொன்ன சாதனை. இந்த சாதனையை உடைக்க, திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் வெற்றியை பாழ் செய்ய, சமூக நலனை பற்றிகூட கவலைப்படாமல், திராவிட இயக்கங்களை ஒழிக்கிறேன் பேர்வழியென அதன் சமூக நல கொள்கைகளை தகர்க்க முயலுகின்றார்கள்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக  ஒரு குறிப்பிட்ட ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள், இந்த வட்டார -----சங்கம், அந்த பகுதி .............பேரவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்துவதும், அதற்காக செய்யப்படும் விளம்பரங்களில், அனைவரது பெயர்களுக்கு பின்னாலும் ஜாதி பெயர் இணைத்து போடபட்டுவருகிறது.  படித்த இளைஞர்களும் இவ்வாறு ஜாதி பெயர்களை போட்டுக்கொள்ளுவது, அதிலும் சென்னை மாநகரில்....புரியவில்லை....எதோ நடக்கிறது. அந்த ஜாதி பிரிவினர்  செய்வதைப்போல, சமீபகாலமாக மற்றொரு ஜாதி பிரிவயை சேர்ந்தவர்களும், அதே போல செயல்பட தொடங்கியுள்ளனர். இது இப்படி தொடர்ந்தால்.....அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் விரைவில், பழைய பிற்போக்குத்தனமான மனநிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க, அனைத்து ஜாதி பிரிவை சேர்ந்த படித்த, முற்போக்கு என்னம்கொண்ட, சமூக நலனில் அக்கறைகொண்ட, நல்லவர்கள், பெரியவர்கள், முதன்மையானவர்கள், முறையே கண்டித்து, அறிவுரை கூறி தடுத்திட முயலவேண்டும்.


உண்மையான திராவிட இயக்க அரசியல் தலைவர்கள், உடனடியாக தீவிரமாக செயல்பட வேண்டிய நேரமிது. பெரியாரிய கொள்கைகளை மீண்டும் மக்களிடம் எடுத்து சென்று பரப்ப வேண்டிய அவசர கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. 

ஜாதிகளற்ற சமூகத்தை அமைக்க பாடுபடுவோம். 

- திராவிடப்புரட்சி