Friday 16 March 2012

திராவிடர் – திராவிடம் – திராவிட இயக்கம்

திராவிடர் திராவிடம் திராவிட இயக்கம்


திராவிட இயக்க நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த தலைப்பு குறித்து நாம் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தலைப்பில் குறிபிட்டுள்ள திராவிடர், திராவிடம், திராவிட இயக்கம் என்ற மூன்றையும் எதிர்ப்பவர்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து இருந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள். எதிர்ப்புகளை வென்றுதான் இன்றும் அந்த மூன்றும் நிலைபெற்று நிமிர்ந்து நிற்கின்றன பெருமிதத்தோடு.

ஆனால் தற்போது ஒரு புதிய நெருக்கடி. திராவிட இயக்கத்தால் பலன்பெற்றவர்களே அதை மறந்து அல்லது மறைத்து, திராவிட மாயை என்றும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் நன்றிகெட்டத்தனமாக பேசி விளம்பரம் செய்கிறார்கள். காலம் காலமாக வழக்கமாக எதிர்ப்பவர்கள், இவர்களை மகிழ்வோடு பார்த்து இரசிக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தை எதிர்க்க முயன்று அல்லது அழிக்க முயன்று தோற்றவர்கள், இறுதியில் அதன் வேரையே அழிப்பதாக கருதி, திராவிடமே மாயை என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயலுகின்றனர். இளைய தலைமுறையினரில் பலர் வரலாற்று நூல்களை படிக்கும் பழக்கம் இல்லாததால், குழப்பவாதிகளின் வாதங்களை கேட்டு குழப்பம் அடைகின்றனர். அந்த குழப்பத்தை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்ய முயலுகின்றனர் குழப்பவாதிகள்.

தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை எனக்கருதியே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

1856-இல் இராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த பிறகே, திராவிடம் என்ற சொல் அறிமுகமானது என்று சொல்லுகிறார்கள். அது உண்மையா? இல்லை.

மனுதர்ம சாஸ்திரம் என்ற பழமையான சட்ட நூலில், அதன் 44வது சுலோகத்தில், பவுண்டரம், ஒளண்டரம், திராவிடம்,
காம்போசம்......என்று இவைகளை தேசங்களாக குறிபிடப்பட்டுள்ளது.

திரு.அ.சிங்காரவேலு முதலியார் அவர்களால் தொகுக்கப்பட்ட அபிதான சிந்தாமணி என்ற நூலில், 1079ம் பக்கத்தில், 56 தேசங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் ஒரு தேசம் திராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1948 – ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட திராவிடர் கழக தனி மாகாண மாநாட்டில் பேசிய திரு.வி.க அவர்கள்,

திராவிடம் என்ற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்திலும் திராவிடர்களை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம் குறிக்கபட்டிருகிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு ஐந்து திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்ற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகா என்னும் நூலிலும் காணப்படுகிறது. நிறைய குறிப்புக்கள் எடுத்து இந்த சமுதாயத்திற்கு மறுபடியும் ஒரு மறு ஆய்வு, மறு வாசிப்பு செய்வதுபோல மறுமுறை உலவவிடவேண்டும் நமது வரலாற்று ஆசிரிய பெருமக்கள்.

திராவிடம் என்ற வார்த்தைக்கு பல ஆதாரங்கள் காட்டப்படிருப்பதை பார்க்கலாம்  என்று சொல்லியிருக்கிறார்.

நமது தேசிய பாடலை எழுதிய ரவீந்தரநாத் தாகூர் கூட தேசிய கீதத்தில் திராவிட உத்கல பங்கா என்று திராவிடத்தை பதிந்துள்ளார்.

1856-இல் இராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த பிறகு, திராவிட என்ற சொல் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானது.

சேர சோழ பாண்டிய பேரரசுகள் மறைந்த பிறகு, மற்ற திராவிட மொழிகளைப்போல தமிழ் மொழியும் பாதிப்புக்குள்ளானது. ஆனால் மற்ற மொழிகள் அளவிற்கு தமிழ் மொழி பாதிப்புக்குள்ளாகவில்லை. காரணம், பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றின் பரந்துபட்ட பண்பாடு, அந்நிய படையெடுப்புகளில் இருந்து நெடுந்தொலைவு ஒதுங்கி இருந்த தமிழ்நாட்டின் நில அமைப்பு போன்றவையே. இதை விட சிறந்த காரணம், திராவிட மொழிகளிலேயே தமிழ்மொழி மட்டும்தான் தனக்கென்று ஓர் இலக்கண அமைப்பையும் சொல்லாக்க விதிமுறைகளையும் கொண்டிருந்தது. ஆனால் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் சமஸ்கிருத மொழியின் ஒலிப்புகள், ஒலியியல், இலக்கணம் ஆகியவற்றை அப்படியே எற்றுக்கொண்டுவிட்டன.

பிற்காலத்தில், பழந்தமிழ் இலக்கியங்களை பதிப்பித்ததின் விளைவாக, தமிழர் நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, தளர்ச்சி நிலைகளை தேடி ஆய்வு செய்கின்ற முயற்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, பழந்தமிழ் இலக்கியங்களை தேடிக் கண்டெடுத்த பின்னணியில், தெற்கு பகுதிக்கு பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னதாகவே பிறர் தொடர்பின்றி தனித்தியங்கிய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று முதன் முதலாக கோடிட்டுக் காட்டிய டாக்டர். இராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவையே அறிஞர்கள் உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.

திராவிடர்களின் பண்பாட்டுத் தன்னிறைவு, தொல்பழஞ் சிறப்புகள் பற்றிய ஆதரவு கருத்துகளை முதன் முதலாக வெளிபடுத்திய பார்ப்பனர் அல்லாத தமிழறிஞர் பேராசிரியர் பி.சுந்தரம் பிள்ளை (1885 – 1897) அவர்கள்தான். ஒரு காலம் இருந்தது, அது தொல்பழங் காலம், இந்த மண்ணிற் பிறந்த திராவிட மதம் மட்டுமே அந்நாளில் வழக்கில் இருந்தது என்று அவர் தாம் எழுதிய தமிழிலக்கிய வரலாற்றில் சில மெயில் கற்கள் என்ற நூலில் குறிபிட்டுள்ளார்.

1880ம் ஆண்டிற்கு பிறகு தமிழறிஞர்கள், திராவிட மதக் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை, வேதக் கருத்துகளில் இருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கும் சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கி நிலைபெற்றவை என்று சொல்லத் தொடங்கினார்கள். 1883-ல், தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபை என்ற அமைப்பு தொடங்கப்பட்டது, இந்த சபையின் ஆதரவில், 1903 – ஆம் ஆண்டில் திராவிட வேத பாடசாலை ஒன்றும் தொடங்கப்பட்டது.


தமிழ்நாட்டு பகுதியில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியும் அதன் நிலம் சார்ந்த தொழில் பிரிவுகளுமே இருந்தன. ஆரியர் இங்கு நுழைந்த பிறகே, அவர்களின் வருணம் சார்ந்த நான்கு பிரிவுகள் பேசப்பட்டன. பழந்தமிழிலக்கியமான தொல்காப்பியம் தமிழில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவுகளைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. இறுதியாக உள்ள உழவர்களை குறிக்கும் வேளாளர் என்ற சொல், ஆரியர் ஜாதி அமைப்பில் உள்ள சூத்திரர் என்பதோடு பொருந்தவில்லை. தமிழகத்தில் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும், அரசர்களாகவும், படித்தவர்களாகவும், பாடல் இயற்றும் வல்லமை கொண்டவர்களாகவும், ஒரு கலந்த தன்மை இருந்தது.   பார்ப்பனர்களின் வருண வரிசையில் உள்ள சத்திரியர், வைசியர் என்ற வருண அமைப்புகளுக்கு இணையாக தமிழக மக்களிடையே ஒரு வகுப்பு அல்லது ஜாதி இல்லாமையால், பார்ப்பனர் அல்லாதோர் அனைவரும் ஒரே ஜாதியாக சூத்திரர்களாக கருதப்பட்டு, பார்பனர்கள் மட்டுமே உயர்ந்த ஜாதியினர் மற்ற எல்லோரும் சூத்திரர் என்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 19-ம் நூற்றாண்டின் கடைசிக் காலங்களில் படித்த வேளாளர்கள் தங்களுக்கு நடைமுறையில் இருக்கும் நிலைக்கும் சமூக அந்தஸ்திற்கும் தங்களை சூத்திரர் என்று சொல்லுவது பொருத்தமாக இல்லை என்பதை கருதியதால், வேளார்களின் தோற்றம் பற்றிய ஆய்வு  மேற்க்கொள்ளப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களின் மீட்டுருவாக்கம், சைவ சித்தாந்த தத்துவ சிந்தனை போன்றவை தமிழர்களின் உண்மையான பழஞ் சமயத்தை வெளிபடுத்தியது. தமிழ்ச் சமுதாயத்தில் வருண பிரிவுகள் பின்னாளில் திணிக்கப்பட்டவை என்ற புரிதல் போன்ற வளர்ச்சி நிலைகள் திராவிட உணர்வுக்கு அடிகோலுபவையாக அமைந்தன.

இதன் விளைவாக திராவிடர் என்போர் யார்? தென்னிந்தியாவின் ஆதி குடிமக்கள் யார்? ஆதி குடிமக்களாக எவரும் இல்லையென்றால், அங்கே வாழ்த்து கொண்டிருந்தவர்கள் எங்கிருந்து எப்போது வந்தார்கள்? அவர்களது மூலத் தாயகம் எது? என்பன போன்ற கேள்விகள் எழுந்து 19-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் ஒரு விவாதப் பொருளாயிற்று. இராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப், குஸ்தாவ் ஒபர்ட், எர்பர்ட் ரிஸ்லி, ஜி.ஏ.கிரியர்சன், ஸ்டென் கொனோவ் போன்ற மொழியறிஞர்களும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மற்றும் மாவட்ட தகவல் களஞ்சிய தொகுப்பிலும் பங்குபெற்ற நிர்வாகிகளும் இந்த விவாதத்தில் முனைப்பு காட்டினர்.

தலைவன் என்ற பொருளில் ஆரியன் என்ற சொல்லை ஈரானியர்கள் வழங்கினார்கள். அவர்கள்தான் கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்குள் முழைந்தார்கள். அவர்கள்தான் ரிக் வேதம் மற்றும் இன்னபிற நூல்கள் உருவாக காரணமாக இருந்தவர்கள். தொடக்கத்தில் ஆரியன் என்ற சொல் இன மேன்மையை குறிக்கும் சொல்லாக இருந்தது, தங்களிடம் அடிமைப்பட்டவர்களிடமிருந்து தங்களை பிரித்து காட்டவும், பின்னாளில், இந்து சமூகத்தின் மேல்நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவுமான ஒரு கருவியா அமைந்தது எனலாம்.

பவுத்தர்கள் ஒழுக்க சீலரான சான்றோரை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தினர். ஆரிய என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து தோன்றிய அய்யர் அய்யங்கார் போன்ற சொற்களை பார்ப்பனர்கள் தமிழில் வழங்க மரியாதைப் பின்னொட்டுச் சொல்லாக பயன்படுத்தி இருக்கவேண்டும், என்று சென்சஸ் ஆப் இந்தியா, 1871 மெட்ராஸ், பக்கம் 144 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொல்லின் வேர் மூலமே வடநாட்டு ஆரியர்களுடன் தமிழ்நாட்டு பார்பனர்களை இணைத்து பார்ப்பதற்கு பயன்படுத்தபட்டிருக்கவேண்டும். அதே நேரத்தில் தேன் இந்தியாவின் பார்ப்பனர் அல்லாதோர் திராவிடர்கள் என்ற பொருளிலேயே பேசப்பட்டார்கள் என்று K.A.நீலகண்ட சாஸ்திரி, தனது Cultural  Contacts between Aryans and  Dravidians என்ற ஆய்வு நூலில் பக்கம் 2-ல் குறிபிட்டுள்ளார்.

வட இந்திய சமஸ்கிருத இலக்கியங்களில் தென்னிந்திய மக்களை பெரும்பாலும் திராவிடர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். முதன் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு முக்கிய மொழிகளை பேசிய மக்களின் மொழிக்குழுவை குறிக்க கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினார். மனித இனவியல் அறிஞர்களான குஸ்தாவ் ஒபர்ட், எர்பர்ட் ரிஸ்லி போன்றோர் இந்த சொல்லை கடன் பெற்று, தென்னிந்திய தீபகற்ப பகுதியில் பரவலாக வாழும் ஒரு இன மக்களை குறிப்பிட திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள் என்று சென்சஸ் ஆப் இந்தியா, 1891 மெட்ராஸ், அறிக்கை, பகுதி1,  பக்கம் 211 – 212  ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளடைவில் ஆரியர், திராவிடர் என்ற சொற்கள் மொழி, இன, பண்பாட்டை குறிக்கப் பயன்படலாயின.

திராவிட மொழிக் குழு என்று ஒன்று இருந்தது என்பதே, அதற்கு முன்னால் வரலாற்றுக்கு முந்தய ஏதோ ஒரு காலக்கட்டத்தில் திராவிட மொழிக்கு முந்தைய மொழி (தொல் திராவிட மொழி) ஒன்று பேசப்பட்டு வந்திருக்ககூடும் என்றும், அதன் கிளைகளாக பிற திராவிட மொழிகள் தோன்றி இருக்கலாம் என்றும் கருத இடமளிக்கிறது. இப்போதைய திராவிட மொழிகள் கிளைத்து பிரிந்து வழங்கி வரும் பாங்கே, மறைந்துபோன அந்த மூல மொழி பேசிய மக்களின் இருப்பிடத்தை ஊகித்தறிய இடமளிக்கிறது.

தென்னிந்தியாவில் பேசப்படும் இந்த நான்கு முக்கிய மொழிகளைத் தவிர திராவிட மொழிகள் என்று தெளிவாக அறிய முடிகிற சில மொழிகள் இந்தியாவின் நடு பகுதியிலும், வங்காளத்திலும், பலுசிஸ்தானத்திலும் பிராகுயி மொழியாக இன்றும் பேசப்பட்டுவருகிறது. இந்த அடிப்படையில்தான் கால்டுவெல், மிகத் தொல்பழங்காலத்திலேயே திராவிட இன மக்கள் இந்திய பெருநிலத்தின் பெரும்பாலான பகுதியில் பரவலாக வாழ்ந்திருந்தனர் என்று கருதினார். இந்த ஊக்கத்தினால், திராவிடர்கள் இந்தியாவின் வடபகுதி முழுவதும் வாழ்ந்திருந்தனர், பின்னாளில் ஆரியரால் தெற்கு நோக்கி துரத்தபட்டார்கள் என்ற கருத்து உருவாகியது.

ஆனால், கிரிஸ்டாப்  வான்ப்யுரர் என்ற ஆய்வாளரும், ஆரோக்கிய சாமி என்ற வரலாற்று அறிஞரும் இந்த கருத்தை மறுத்து, திராவிடர்கள் தென் இந்தியாவின் ஆதி குடிகள் என்றும், அவர்கள் பிற பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் சென்றார்கள் என்றும், அவிடங்களில் அவர்களது செல்வாக்கு இன்றுவரை நிலவுகிறது என்றும் விளக்குகிறார்கள்.

1920 – ல் நடத்தப்பட்ட மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாராய்சியிகள், சிந்துவெளி நாகரிகம், திராவிட இன தமிழ் மக்களின் நாகரிகம் எனத் தற்போது தெரியவருகிறது.


தென்னிந்திய மொழிகளை குறிப்பதற்காக திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் இராபர்ட் கால்டுவெல் கண்டுபிடித்து பயன்படுத்தவில்லை. தென்னிந்திய மொழிக் குடும்பத்தை ஒரே சொல்லில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மொழியறிஞர் குமரில பட்டரே பயன்படுத்தினார். அவரே, ஆந்திர திராவிட பாஷா எனும் சொற்களை தமிழ் தெலுங்கு நாடுகளை குறிப்பதற்காக பயன்படுத்தினார் என்பதை கால்டுவெல் அவர்களே ஒப்புக்கொள்கிறார்.  மேலும் அவருக்கு பிந்தைய சம்ஸ்கிருத இலக்கியங்களில் திராவிட எனும் சொல் விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள தென்னிந்திய நிலப்பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது? ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியை திராவிட பகுதி என்றும் அங்கு வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை சேர்ந்தவர்களை திராவிடர்கள் என்றோ சூத்திரர்கள் என்றோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழைத்துள்ளனர் என்பது தெரிகிறது.

சிலர், தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், சங்க இலக்கியங்களிலும் திராவிட என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை, எனவே திராவிட என்பதே பிற்கால கற்பிதம் மாயை என்று சொல்லி குழப்ப முயலுகின்றனர்.

திராவிட என்ற சொல் வடமொழி பேசுபவர்களால் பயன்படுத்தபட்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு மேலே பார்த்தோம். ஒரு இனக் குழுவை சேர்ந்தவர்கள் பயன்படுத்திய மொழி காலத்தால் தூரத்தால் மாறி, மறுவி, வேறு மொழியோடு கலந்து பல மொழிகளாக பிரிந்த நிலையில், அந்த இனக்குழுவை சேர்ந்த மக்களுக்கு இடையேயான ஒற்றுமையை அந்த மொழிக் குழுவை அடையாளப்படுத்த திராவிட  என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக விளங்குகிறது. தமிழ் என்ற சொல்லே மறுவி திராவிட என்ற சொல்லாக மாறியுள்ளது என்றும் மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த பழந்தமிழ் இலக்கியங்களிலும் மங்கோலிய இனம் குறித்தோ, ஆப்பிரிக்க இனம் குறித்தோ, ஐரோப்பிய இனம் குறித்தோ, ஆரிய இனம் குறித்தோ சொல்லப்படவில்லை, திராவிட இனம் குறித்து மட்டும் எப்படி இருக்கும்? அந்த காலத்தில் இனம் குறித்த பார்வை, சிந்தனை இல்லை. பிற்கால மானுடவியல் அறிஞர்களே இனக்குழுக்களை வகைப்படுத்தி பெயர் தந்தனர். திராவிடர் என்ற பெயரும் அப்படியே. ஒன்று குறிப்பிடப் படவில்லை என்பதற்காக அது இல்லை என்றாகிவிடாது. திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்ற சொல் இல்லை. அதற்காக, திருக்குறள் தமிழ் இல்லை என்றாகிவிடுமா? திருவள்ளுவர் தமிழர் இல்லை என்றாகிவிடுமா?

எது எப்படி ஆனாலும், தொன்மையான தமிழ்மொழி செம்மொழி என்று கருதப்படுவதற்கு காரணம், அது பல மொழிகளுக்கு வேர் மொழியாக இருப்பதாலும்தான் என்பதை மறுக்க முடியாது. மற்ற திராவிட மொழிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று யாரும் வாதிடவும் முடியாது. திராவிட இன மக்களின் உருவ ஒற்றுமையை யாரும் மறுக்க முடியாது. திராவிட இன மக்களின் உணவுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த ஒற்றுமையை திராவிட என்ற சொல்லால் அழைக்கக்கூடாது என்று கருதுபவர்கள் மூன்று வகைப்படுகிறார்கள். திராவிட இயக்கங்களால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் முதல் வகையினர், திராவிட இயக்கங்களால் தோற்ற இயக்கங்கள் இரண்டாம் வகையினர், எந்த சூழலிலும் தெற்கு பகுதி மக்கள் உணர்வால் ஒன்றினைந்துவிடக்கூடாது, அது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து என்று கருதும் மூன்றாம் வகையினர்.

இல்லாத ஜாதியை இருக்கிறது என்று நம்பும் ஜாதி வெறிபிடித்தவர்கள் இருக்கும் ஓர் இனத்தை இல்லை அது மாயை என்று சொல்லுவது வேடிக்கையானது. மறுப்பவர்கள், வரலாற்று அறிஞர்களாகவோ, மானுடவியல் அறிஞர்களாகவோ இருந்தால், அதை ஒரு பொருட்டாக கருதலாம், ஆனால் இப்படி மறுப்பவர்களில் பெரும்பான்மையினர் அரசியல்வாதிகள், இவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக எதையோ சொல்லி குழப்ப முயலுகின்றனர், அவ்வளவே. இருப்பினும், குழப்பத்தை யாரும் நம்பிவிடக்கூடாதே என்ற எண்ணத்தின் விளைவே இந்த கட்டுரை. 

இனி திராவிட இயக்கங்கள் குறித்து பார்ப்போம்.


- திராவிடப் புரட்சி  


பின் குறிப்பு: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின், உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற நூலும் கு.நம்பி ஆரூரன் அவர்களின் தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும் என்ற நூலும் இந்த கட்டுரையை எழுத பெரிதும் உதவி புரிகின்றனர்.     

1 comment:

  1. ஆரியர் என்ற சொல்லிலிருந்து அய்யர் என்ற சொல் வந்ததாக முதன் முறையாக படிக்கிறேன்.

    ReplyDelete