Friday, 16 March 2012

திராவிடர் – திராவிடம் – திராவிட இயக்கம்

திராவிடர் திராவிடம் திராவிட இயக்கம்


திராவிட இயக்க நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த தலைப்பு குறித்து நாம் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தலைப்பில் குறிப்பிட்டுள்ள திராவிடர், திராவிடம், திராவிட இயக்கம் என்ற மூன்றையும் எதிர்ப்பவர்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து இருந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள். எதிர்ப்புகளை வென்றுதான் இன்றும் அந்த மூன்றும் நிலைபெற்று நிமிர்ந்து நிற்கின்றன பெருமிதத்தோடு.

ஆனால் தற்போது ஒரு புதிய நெருக்கடி. திராவிட இயக்கத்தால் பலன்பெற்றவர்களே அதை மறந்து அல்லது மறைத்து, திராவிட மாயை என்றும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் நன்றிகெட்டத்தனமாக பேசி விளம்பரம் செய்கிறார்கள். காலம் காலமாக வழக்கமாக எதிர்ப்பவர்கள், இவர்களை மகிழ்வோடு பார்த்து இரசிக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தை எதிர்க்க முயன்று அல்லது அழிக்க முயன்று தோற்றவர்கள், இறுதியில் அதன் வேரையே அழிப்பதாக கருதி, திராவிடமே மாயை என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயலுகின்றனர். இளைய தலைமுறையினரில் பலர் வரலாற்று நூல்களை படிக்கும் பழக்கம் இல்லாததால், குழப்பவாதிகளின் வாதங்களை கேட்டு குழப்பம் அடைகின்றனர். அந்த குழப்பத்தை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்ய முயலுகின்றனர் குழப்பவாதிகள்.

தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை எனக்கருதியே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

1856-இல் இராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த பிறகே, திராவிடம் என்ற சொல் அறிமுகமானது என்று சொல்லுகிறார்கள். அது உண்மையா? இல்லை.

மனுதர்ம சாஸ்திரம் என்ற பழமையான சட்ட நூலில், அதன் 44வது சுலோகத்தில், பவுண்டரம், ஒளண்டரம், திராவிடம்,
காம்போசம்......என்று இவைகளை தேசங்களாக குறிபிடப்பட்டுள்ளது.

திரு.அ.சிங்காரவேலு முதலியார் அவர்களால் தொகுக்கப்பட்ட அபிதான சிந்தாமணி என்ற நூலில், 1079ம் பக்கத்தில், 56 தேசங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் ஒரு தேசம் திராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1948 – ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட திராவிடர் கழக தனி மாகாண மாநாட்டில் பேசிய திரு.வி.க அவர்கள்,

திராவிடம் என்ற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்திலும் திராவிடர்களை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம் குறிக்கபட்டிருகிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு ஐந்து திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்ற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகா என்னும் நூலிலும் காணப்படுகிறது. நிறைய குறிப்புக்கள் எடுத்து இந்த சமுதாயத்திற்கு மறுபடியும் ஒரு மறு ஆய்வு, மறு வாசிப்பு செய்வதுபோல மறுமுறை உலவவிடவேண்டும் நமது வரலாற்று ஆசிரிய பெருமக்கள்.

திராவிடம் என்ற வார்த்தைக்கு பல ஆதாரங்கள் காட்டப்படிருப்பதை பார்க்கலாம்  என்று சொல்லியிருக்கிறார்.

நமது தேசிய பாடலை எழுதிய ரவீந்தரநாத் தாகூர் கூட தேசிய கீதத்தில் திராவிட உத்கல பங்கா என்று திராவிடத்தை பதிந்துள்ளார்.

1856-இல் இராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த பிறகு, திராவிட என்ற சொல் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானது.

சேர சோழ பாண்டிய பேரரசுகள் மறைந்த பிறகு, மற்ற திராவிட மொழிகளைப்போல தமிழ் மொழியும் பாதிப்புக்குள்ளானது. ஆனால் மற்ற மொழிகள் அளவிற்கு தமிழ் மொழி பாதிப்புக்குள்ளாகவில்லை. காரணம், பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றின் பரந்துபட்ட பண்பாடு, அந்நிய படையெடுப்புகளில் இருந்து நெடுந்தொலைவு ஒதுங்கி இருந்த தமிழ்நாட்டின் நில அமைப்பு போன்றவையே. இதை விட சிறந்த காரணம், திராவிட மொழிகளிலேயே தமிழ்மொழி மட்டும்தான் தனக்கென்று ஓர் இலக்கண அமைப்பையும் சொல்லாக்க விதிமுறைகளையும் கொண்டிருந்தது. ஆனால் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் சமஸ்கிருத மொழியின் ஒலிப்புகள், ஒலியியல், இலக்கணம் ஆகியவற்றை அப்படியே எற்றுக்கொண்டுவிட்டன.

பிற்காலத்தில், பழந்தமிழ் இலக்கியங்களை பதிப்பித்ததின் விளைவாக, தமிழர் நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, தளர்ச்சி நிலைகளை தேடி ஆய்வு செய்கின்ற முயற்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, பழந்தமிழ் இலக்கியங்களை தேடிக் கண்டெடுத்த பின்னணியில், தெற்கு பகுதிக்கு பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னதாகவே பிறர் தொடர்பின்றி தனித்தியங்கிய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று முதன் முதலாக கோடிட்டுக் காட்டிய டாக்டர். இராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவையே அறிஞர்கள் உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.

திராவிடர்களின் பண்பாட்டுத் தன்னிறைவு, தொல்பழஞ் சிறப்புகள் பற்றிய ஆதரவு கருத்துகளை முதன் முதலாக வெளிபடுத்திய பார்ப்பனர் அல்லாத தமிழறிஞர் பேராசிரியர் பி.சுந்தரம் பிள்ளை (1885 – 1897) அவர்கள்தான். ஒரு காலம் இருந்தது, அது தொல்பழங் காலம், இந்த மண்ணிற் பிறந்த திராவிட மதம் மட்டுமே அந்நாளில் வழக்கில் இருந்தது என்று அவர் தாம் எழுதிய தமிழிலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் என்ற நூலில் குறிபிட்டுள்ளார்.

1880ம் ஆண்டிற்கு பிறகு தமிழறிஞர்கள், திராவிட மதக் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை, வேதக் கருத்துகளில் இருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கும் சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கி நிலைபெற்றவை என்று சொல்லத் தொடங்கினார்கள். 1883-ல், தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபை என்ற அமைப்பு தொடங்கப்பட்டது, இந்த சபையின் ஆதரவில், 1903 – ஆம் ஆண்டில் திராவிட வேத பாடசாலை ஒன்றும் தொடங்கப்பட்டது.


தமிழ்நாட்டு பகுதியில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியும் அதன் நிலம் சார்ந்த தொழில் பிரிவுகளுமே இருந்தன. ஆரியர் இங்கு நுழைந்த பிறகே, அவர்களின் வருணம் சார்ந்த நான்கு பிரிவுகள் பேசப்பட்டன. பழந்தமிழிலக்கியமான தொல்காப்பியம் தமிழில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவுகளைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. இறுதியாக உள்ள உழவர்களை குறிக்கும் வேளாளர் என்ற சொல், ஆரியர் ஜாதி அமைப்பில் உள்ள சூத்திரர் என்பதோடு பொருந்தவில்லை. தமிழகத்தில் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும், அரசர்களாகவும், படித்தவர்களாகவும், பாடல் இயற்றும் வல்லமை கொண்டவர்களாகவும், ஒரு கலந்த தன்மை இருந்தது.   பார்ப்பனர்களின் வருண வரிசையில் உள்ள சத்திரியர், வைசியர் என்ற வருண அமைப்புகளுக்கு இணையாக தமிழக மக்களிடையே ஒரு வகுப்பு அல்லது ஜாதி இல்லாமையால், பார்ப்பனர் அல்லாதோர் அனைவரும் ஒரே ஜாதியாக சூத்திரர்களாக கருதப்பட்டு, பார்பனர்கள் மட்டுமே உயர்ந்த ஜாதியினர் மற்ற எல்லோரும் சூத்திரர் என்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 19-ம் நூற்றாண்டின் கடைசிக் காலங்களில் படித்த வேளாளர்கள் தங்களுக்கு நடைமுறையில் இருக்கும் நிலைக்கும் சமூக அந்தஸ்திற்கும் தங்களை சூத்திரர் என்று சொல்லுவது பொருத்தமாக இல்லை என்பதை கருதியதால், வேளார்களின் தோற்றம் பற்றிய ஆய்வு  மேற்க்கொள்ளப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களின் மீட்டுருவாக்கம், சைவ சித்தாந்த தத்துவ சிந்தனை போன்றவை தமிழர்களின் உண்மையான பழஞ் சமயத்தை வெளிபடுத்தியது. தமிழ்ச் சமுதாயத்தில் வருண பிரிவுகள் பின்னாளில் திணிக்கப்பட்டவை என்ற புரிதல் போன்ற வளர்ச்சி நிலைகள் திராவிட உணர்வுக்கு அடிகோலுபவையாக அமைந்தன.

இதன் விளைவாக திராவிடர் என்போர் யார்? தென்னிந்தியாவின் ஆதி குடிமக்கள் யார்? ஆதி குடிமக்களாக எவரும் இல்லையென்றால், அங்கே வாழ்த்து கொண்டிருந்தவர்கள் எங்கிருந்து எப்போது வந்தார்கள்? அவர்களது மூலத் தாயகம் எது? என்பன போன்ற கேள்விகள் எழுந்து 19-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் ஒரு விவாதப் பொருளாயிற்று. இராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப், குஸ்தாவ் ஒபர்ட், எர்பர்ட் ரிஸ்லி, ஜி.ஏ.கிரியர்சன், ஸ்டென் கொனோவ் போன்ற மொழியறிஞர்களும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மற்றும் மாவட்ட தகவல் களஞ்சிய தொகுப்பிலும் பங்குபெற்ற நிர்வாகிகளும் இந்த விவாதத்தில் முனைப்பு காட்டினர்.

தலைவன் என்ற பொருளில் ஆரியன் என்ற சொல்லை ஈரானியர்கள் வழங்கினார்கள். அவர்கள்தான் கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்குள் நுழைந்தார்கள். அவர்கள்தான் ரிக் வேதம் மற்றும் இன்னபிற நூல்கள் உருவாக காரணமாக இருந்தவர்கள். தொடக்கத்தில் ஆரியன் என்ற சொல் இன மேன்மையை குறிக்கும் சொல்லாக இருந்தது, தங்களிடம் அடிமைப்பட்டவர்களிடமிருந்து தங்களை பிரித்து காட்டவும், பின்னாளில், இந்து சமூகத்தின் மேல்நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவுமான ஒரு கருவியா அமைந்தது எனலாம்.

பவுத்தர்கள் ஒழுக்க சீலரான சான்றோரை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தினர். ஆரிய என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து தோன்றிய அய்யர் அய்யங்கார் போன்ற சொற்களை பார்ப்பனர்கள் தமிழில் வழங்க மரியாதைப் பின்னொட்டுச் சொல்லாக பயன்படுத்தி இருக்கவேண்டும், என்று சென்சஸ் ஆப் இந்தியா, 1871 மெட்ராஸ், பக்கம் 144 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொல்லின் வேர் மூலமே வடநாட்டு ஆரியர்களுடன் தமிழ்நாட்டு பார்பனர்களை இணைத்து பார்ப்பதற்கு பயன்படுத்தபட்டிருக்கவேண்டும். அதே நேரத்தில் தென் இந்தியாவின் பார்ப்பனர் அல்லாதோர் திராவிடர்கள் என்ற பொருளிலேயே பேசப்பட்டார்கள் என்று K.A.நீலகண்ட சாஸ்திரி, தனது Cultural  Contacts between Aryans and  Dravidians என்ற ஆய்வு நூலில் பக்கம் 2-ல் குறிபிட்டுள்ளார்.

வட இந்திய சமஸ்கிருத இலக்கியங்களில் தென்னிந்திய மக்களை பெரும்பாலும் திராவிடர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு முக்கிய மொழிகளை பேசிய மக்களின் மொழிக்குழுவை குறிக்க கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினார். மனித இனவியல் அறிஞர்களான குஸ்தாவ் ஒபர்ட், எர்பர்ட் ரிஸ்லி போன்றோர் இந்த சொல்லை கடன் பெற்று, தென்னிந்திய தீபகற்ப பகுதியில் பரவலாக வாழும் ஒரு இன மக்களை குறிப்பிட திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள் என்று சென்சஸ் ஆப் இந்தியா, 1891 மெட்ராஸ், அறிக்கை, பகுதி1,  பக்கம் 211 – 212  ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளடைவில் ஆரியர், திராவிடர் என்ற சொற்கள் மொழி, இன, பண்பாட்டை குறிக்கப் பயன்படலாயின.

திராவிட மொழிக் குழு என்று ஒன்று இருந்தது என்பதே, அதற்கு முன்னால் வரலாற்றுக்கு முந்தய ஏதோ ஒரு காலக்கட்டத்தில் திராவிட மொழிக்கு முந்தைய மொழி (தொல் திராவிட மொழி) ஒன்று பேசப்பட்டு வந்திருக்ககூடும் என்றும், அதன் கிளைகளாக பிற திராவிட மொழிகள் தோன்றி இருக்கலாம் என்றும் கருத இடமளிக்கிறது. இப்போதைய திராவிட மொழிகள் கிளைத்து பிரிந்து வழங்கி வரும் பாங்கே, மறைந்துபோன அந்த மூல மொழி பேசிய மக்களின் இருப்பிடத்தை ஊகித்தறிய இடமளிக்கிறது.

தென்னிந்தியாவில் பேசப்படும் இந்த நான்கு முக்கிய மொழிகளைத் தவிர திராவிட மொழிகள் என்று தெளிவாக அறிய முடிகிற சில மொழிகள் இந்தியாவின் நடு பகுதியிலும், வங்காளத்திலும், பலுசிஸ்தானத்திலும் பிராகுயி மொழியாக இன்றும் பேசப்பட்டுவருகிறது. இந்த அடிப்படையில்தான் கால்டுவெல், மிகத் தொல்பழங்காலத்திலேயே திராவிட இன மக்கள் இந்திய பெருநிலத்தின் பெரும்பாலான பகுதியில் பரவலாக வாழ்ந்திருந்தனர் என்று கருதினார். இந்த ஊகத்தினால், திராவிடர்கள் இந்தியாவின் வடபகுதி முழுவதும் வாழ்ந்திருந்தனர், பின்னாளில் ஆரியரால் தெற்கு நோக்கி துரத்தபட்டார்கள் என்ற கருத்து உருவாகியது.

ஆனால், கிரிஸ்டாப்  வான்ப்யுரர் என்ற ஆய்வாளரும், ஆரோக்கிய சாமி என்ற வரலாற்று அறிஞரும் இந்த கருத்தை மறுத்து, திராவிடர்கள் தென் இந்தியாவின் ஆதி குடிகள் என்றும், அவர்கள் பிற பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் சென்றார்கள் என்றும், அவ்விடங்களில் அவர்களது செல்வாக்கு இன்றுவரை நிலவுகிறது என்றும் விளக்குகிறார்கள்.

1920 – ல் நடத்தப்பட்ட மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாராய்சியிகள், சிந்துவெளி நாகரிகம், திராவிட இன தமிழ் மக்களின் நாகரிகம் எனத் தற்போது தெரியவருகிறது.


தென்னிந்திய மொழிகளை குறிப்பதற்காக திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் இராபர்ட் கால்டுவெல் கண்டுபிடித்து பயன்படுத்தவில்லை. தென்னிந்திய மொழிக் குடும்பத்தை ஒரே சொல்லில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மொழியறிஞர் குமரில பட்டரே பயன்படுத்தினார். அவரே, ஆந்திர திராவிட பாஷா எனும் சொற்களை தமிழ் தெலுங்கு நாடுகளை குறிப்பதற்காக பயன்படுத்தினார் என்பதை கால்டுவெல் அவர்களே ஒப்புக்கொள்கிறார்.  மேலும் அவருக்கு பிந்தைய சம்ஸ்கிருத இலக்கியங்களில் திராவிட எனும் சொல் விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள தென்னிந்திய நிலப்பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது? ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியை திராவிட பகுதி என்றும் அங்கு வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை சேர்ந்தவர்களை திராவிடர்கள் என்றோ சூத்திரர்கள் என்றோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழைத்துள்ளனர் என்பது தெரிகிறது.

சிலர், தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், சங்க இலக்கியங்களிலும் திராவிட என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை, எனவே திராவிட என்பதே பிற்கால கற்பிதம் மாயை என்று சொல்லி குழப்ப முயலுகின்றனர்.

திராவிட என்ற சொல் வடமொழி பேசுபவர்களால் பயன்படுத்தபட்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு மேலே பார்த்தோம். ஒரு இனக் குழுவை சேர்ந்தவர்கள் பயன்படுத்திய மொழி காலத்தால் தூரத்தால் மாறி, மறுவி, வேறு மொழியோடு கலந்து பல மொழிகளாக பிரிந்த நிலையில், அந்த இனக்குழுவை சேர்ந்த மக்களுக்கு இடையேயான ஒற்றுமையை அந்த மொழிக் குழுவை அடையாளப்படுத்த திராவிட  என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக விளங்குகிறது. தமிழ் என்ற சொல்லே மறுவி திராவிட என்ற சொல்லாக மாறியுள்ளது என்றும் மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த பழந்தமிழ் இலக்கியங்களிலும் மங்கோலிய இனம் குறித்தோ, ஆப்பிரிக்க இனம் குறித்தோ, ஐரோப்பிய இனம் குறித்தோ, ஆரிய இனம் குறித்தோ சொல்லப்படவில்லை, திராவிட இனம் குறித்து மட்டும் எப்படி இருக்கும்? அந்த காலத்தில் இனம் குறித்த பார்வை, சிந்தனை இல்லை. பிற்கால மானுடவியல் அறிஞர்களே இனக்குழுக்களை வகைப்படுத்தி பெயர் தந்தனர். திராவிடர் என்ற பெயரும் அப்படியே. ஒன்று குறிப்பிடப் படவில்லை என்பதற்காக அது இல்லை என்றாகிவிடாது. திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்ற சொல் இல்லை. அதற்காக, திருக்குறள் தமிழ் இல்லை என்றாகிவிடுமா? திருவள்ளுவர் தமிழர் இல்லை என்றாகிவிடுமா?

எது எப்படி ஆனாலும், தொன்மையான தமிழ்மொழி செம்மொழி என்று கருதப்படுவதற்கு காரணம், அது பல மொழிகளுக்கு வேர் மொழியாக இருப்பதாலும்தான் என்பதை மறுக்க முடியாது. மற்ற திராவிட மொழிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று யாரும் வாதிடவும் முடியாது. திராவிட இன மக்களின் உருவ ஒற்றுமையை யாரும் மறுக்க முடியாது. திராவிட இன மக்களின் உணவுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த ஒற்றுமையை திராவிட என்ற சொல்லால் அழைக்கக்கூடாது என்று கருதுபவர்கள் மூன்று வகைப்படுகிறார்கள். திராவிட இயக்கங்களால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் முதல் வகையினர், திராவிட இயக்கங்களால் தோற்ற இயக்கங்கள் இரண்டாம் வகையினர், எந்த சூழலிலும் தெற்கு பகுதி மக்கள் உணர்வால் ஒன்றினைந்துவிடக்கூடாது, அது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து என்று கருதும் மூன்றாம் வகையினர்.

இல்லாத ஜாதியை இருக்கிறது என்று நம்பும் ஜாதி வெறிபிடித்தவர்கள், இருக்கும் ஓர் இனத்தை இல்லை அது மாயை என்று சொல்லுவது வேடிக்கையானது. மறுப்பவர்கள், வரலாற்று அறிஞர்களாகவோ, மானுடவியல் அறிஞர்களாகவோ இருந்தால், அதை ஒரு பொருட்டாக கருதலாம், ஆனால் இப்படி மறுப்பவர்களில் பெரும்பான்மையினர் அரசியல்வாதிகள், இவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக எதையோ சொல்லி குழப்ப முயலுகின்றனர், அவ்வளவே. இருப்பினும், குழப்பத்தை யாரும் நம்பிவிடக்கூடாதே என்ற எண்ணத்தின் விளைவே இந்த கட்டுரை. 

இனி திராவிட இயக்கங்கள் குறித்து பார்ப்போம்.

திராவிட இனம், திராவிட மொழி,  திராவிடர் பண்பாடு, திராவிட மதம் குறித்த கருத்துகள் பரவலாக படித்த திராவிடர்களின் மத்தியில் புகழ்பெற்று வந்திருந்த காலத்தில், திராவிடர்களுக்கான அரசியல் இயக்கம் உருவானதன் பின்னணியை கவனமாக ஆராயவேண்டியுள்ளது.

எந்த ஒன்றும் அதிகமாக அழுத்தப்ப்படும்போது, ஒரு குறிப்பிட்ட அழுத்ததிற்கு பிறகு அது வெடித்து கட்டுக்கடங்காமல் போகும் நிலை ஏற்பட்டே தீரும் அது இயற்கை விதி. அதுபோல எந்த ஒரு மக்கள் சமூகமும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு வந்தால், ஓர் நாள் அங்கு புரட்சி வெடித்தே தீரும்.

ஆனால், இந்திய  சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, ஏழ்மை நிலை தினிக்கபட்டும் எந்த ஒரு புரட்சியும் வெடிக்கவில்லை. காரணம் தாங்கள் தாழ்தபட்டுள்ளதாக, ஒடுக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் உணரவில்லை, மாறாக அதை தங்களது தலைவிதி என்றும் கடவுளால் இந்த நிலையில் வைக்கப்ட்டுள்ளதாகவும், எந்த மாறுதலும் அடுத்த பிறவியில்தான் கிடைக்கும் என்றும் திடமாக நம்பி வாழ்ந்ததே. கல்வி அறிவு இல்லாததால், மாறுபட்டு சிந்திக்கும் வாய்ப்பும் குறைந்துபோனது. கடவுள், மத சம்பிரதாய நடவடிக்கைகள், ஜாதிய முறைகள் அவர்களை உடலால் அடிமைபடுத்தியதோடு அல்லாமல் அவர்களின் மூளைக்கே விலங்கிட்டுவிட்டது. பெரும்பான்மையான தாங்கள், பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு இருக்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் வாழ்ந்தனர். பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கிற தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு மனிதன் கருவியாக கருதுகிற தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் புரட்சி வருவதற்கான சாத்தியகூறுகளே இல்லை என்று இந்தியாவில் சுதந்திரப் போர் என்ற தலைப்பில் 1848-ல் காரல் மார்க்ஸ் எழுதியிருப்பதே இந்திய சமூகத்தின் நிலையை விளக்க போதுமானது.

இந்நிலையில், கிருஸ்துவ மிஷனரிகள் இந்தியாவில் கல்வி நிலையங்களை தொடங்கிய பின், குறிப்பாக ஆங்கிலேயேர் ஆட்சியில், கல்வி அனைவருக்கும் பொது என்ற நிலை வந்த பிறகு, அதை பயன்படுத்தி செல்வந்தர்களாக இருந்த பார்ப்பனர் அல்லாத சமூகத்தை சேர்ந்த சிலர் கல்வியறிவு பெற்றனர்.

கிருஸ்துவ மிஷனரிகளால் தரங்கம்பாடியில் அறிமுகப்படுத்தபட்ட அச்சடிக்கும் முறை, ஆங்கிலேயர் அரசில் மெல்ல வளர்ந்து, நூல்களை பதிப்பிக்கும், செய்தித்தாள் வெளியிடும் நிலையில் வந்திருந்த காலகட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டன.

கல்விக்கூடங்களும் அச்சகங்களும், திராவிட இன மக்களின், ஏன் இந்திய சமூகத்தையே மாற்றிது என்றால் மிகையாகாது.

மெல்ல விழிப்புணர்வு அடைந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர், திராவிடர், அதிலும் குறிப்பாக இன்றைய தமிழக பகுதியில் வாழ்ந்த திராவிடர் திராவிட மதம் குறித்த சைவ சித்தாந்தம் குறித்த சிந்தனையோடு சமய மறுமலர்ச்சியை நோக்கி சென்றனர், அதன் தொடர்ச்சியாக தனித் தமிழ் இயக்கம் என்ற சிந்தனையும் இந்த நிலப்பகுதியிலேயே உருவானது.

இன்று கர்நாடகாவில், ஆந்திராவில், கேரளாவில் திராவிடம் குறித்து பேசவில்லையே என்று குழப்பும் சிலர் இதை நன்றாக கவனிக்கவேண்டும். தமிழகம் தவிர்த்த மற்ற திராவிட மக்கள் வாழும் மாநிலங்களில், இதுபோன்ற சமய மறுமலர்ச்சி ஏன் வரவில்லை? தனித் தெலுங்கு, தனிக் கன்னடம், தனி மலையாளம் போன்ற சிந்தனை ஏன் வரவில்லை? போன்றவற்றையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனி மலையாளம், தனித் தெலுங்கு, தனிக் கன்னடம் என்று பிரித்தால், அது இறுதியாக தமிழாகவே மாறும் என்பதே உண்மை. ஒருவேளை மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கபடாமல் இருந்திருந்தால், அந்த பகுதிகளிலும் இன்றுவரை திராவிடம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இந்த கல்வியறிவு, திராவிட சமயம் குறித்த பார்வையையும், மொழி குறித்த பார்வையையும், பண்பாடு குறித்த பார்வையையும் அகலப்படுத்தி அதுகுறித்த விழிப்புணர்வை அடைந்துவந்த நிலையில், இயல்பாக சிந்தனை அடுத்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆம், நாம் ஏன் பார்ப்பனர்களை போல உயர்ந்த நிலையில் இருக்கமுடியவில்லை? என்ற சிந்தனையின் விளைவாக ஏற்பட்ட நகர்தல் அது. அந்த நகர்தலே திராவிடரின் சமூக சூழலை மாற்றியது.

புரட்சி வருவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்ற காரல் மார்க்ஸின் கருத்தை பொய்யாகும்வண்ணம், இந்த மண்ணுக்கே உரிய வண்ணம், இந்த சமூகத்தை மாற்றிப்போடும் ஒரு மௌன புரட்சி நடந்தது, அதுதான் திராவிடப் புரட்சி. காரல் மார்க்ஸ் குறிப்பிட்டது ஆயுத புரட்சியாக இருக்கலாம், ஆனால் இது அறிவு புரட்சி. அறிவாயுதத்தை பயன்படுத்திய புரட்சி திராவிடப் புரட்சி.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கற்றறிந்த பார்பனர் அல்லாதோர் திராவிட நாகரிகத்தை பற்றி வரலாற்றில் தாழ்ந்தநிலையில் எழுதப்பட்டுள்ளதைக் குறித்து கேள்வி கேட்கத் தொடங்கினர். பார்ப்பனர்கள் தாங்கள் பெற்ற கல்வியின் மூலமாக பல்கலைகழகத்தில் உயர்ந்த பதவியில் இருந்த எழுத்தர் பதவிவரை அனைத்திலும் அமர்ந்திருந்தனர், அதுவே அதற்கான காரணம்.

பார்ப்பனர்கள் பல அரசுப் பதவிகளை தங்களிடம் வைத்திருந்தனர். குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடித்துவைத்திருன்தனர். 1885 – ல் சென்னை மாகாணத்தில் முக்கிய அரசு உயர்பதவிகளில் 305- ல்  ஆங்கிலேயர்கள் தவிர்த்து 237 பதவிகள் பார்பனர்கள் வசம இருந்தது, அதாவது  77 சதவிகிதம் அவர்கள் வசம இருந்தது.  அதற்கான பல்வேறு ஆதாரங்கள் இன்றும் அரசு ஆவணங்களில் காணக்கிடைக்கின்றன. இந்நிலையில், இதனால் ஏற்பட்ட இயலாமையும், வருத்தமும் கற்றறிந்த பார்ப்பனர் அல்லாதோர் சமுதாயத்தினரிடம் எதிரொலித்தது.  

ஆங்கில கல்வியை பெற்றதுதான் பார்ப்பனர் வாழக்கையில் எல்லாவகையான மேன்மைகளையும் பெற காரணமாக இருக்கிறது, அவர்கள அனைத்து அரசு உயர்பதவிகளிலும் அமர காரணமாக இருக்கிறது என்பதை பார்ப்பனர் அல்லாதோர் புரிந்துகொண்டனர். கல்வியில் பின்னடைந்து இருந்ததுதான் சமூகத்தில் தங்களால் குறிப்பிடத் தகுந்த இடத்தில் இருக்கமுடியவில்லை என்பதை பார்ப்பனர் அல்லாதோர் புரிந்துகொண்டனர்.

1909 – ல் தி மெட்ராஸ் நான்-பிராமின் அசோசியேஷன் என்ற பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பை பி.சுப்பிரமணியம் மற்றும் புருஷோத்தம் நாயுடு என்ற இரு வழக்குரைஞர்கள் உருவாக்கினர். அவர்கள பத்திரிக்கைகளுக்கு....

சென்னை மாகாணத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் அல்லாத பார்ப்பனர்கள் அல்லாத வகுப்பினரைச் சீர்படுத்தி சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு அவர்களை எடுத்துச் செல்லவும் இந்த சமூகத்தை சேர்ந்த நன்கு படிக்கக்கூடிய வசதியில்லாத ஏழை மானவர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து, கல்வியில் அவர்களை வழி வகுப்பதும் இந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெறுவதும், இதரக் கல்வித் திட்டங்களுக்கு உதவித் தொகை வழங்குவதும் அவர்களின் சமூக பொருளாதாரத்தை உய்ரத்துவதும் ஆகிய நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது  என்று பேட்டி அளித்தனர்.

பேட்டியை கண்ட வி.வண்ணமுத்து என்பவர், மெட்ராஸ் மெயில் பத்திரிக்கைக்கு, 06.05.1909 அன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர்,

தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாதவர்கள் திராவிட இன வழிவந்தவர்கள். எனவே இந்த அமைப்பிற்கு தி மெட்ராஸ் திராவிடியன் அசோசியேஷன் என்று பெயர் சூட்டலாம் என ஆலோசனை வழங்கி இருந்தார்.

அதே சமயத்தில், மற்றொரு வாசகர் கூறும்போது,

இரு வழக்குரைஞங்கர்களால் எடுத்துள்ள பார்ப்பனர் அல்லாதோர் போன்ற அமைப்பினை உருவாக்கும் முயற்சி வழக்குரைஞர் தொழில் சார்ந்தவர்களைக் கவர்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இச்சமுதாயத்தில் பெருமதிப்பிற்குரிய டாக்டர்.நாயர், தியாகராயச் செட்டி, வேங்கடசாமி நாயுடு போன்றவர்களிடம் இக்கப்பலை வழிநடத்தும் சுக்கானைக் கொடுத்து குறுகிய மற்றும் சிறுமணம் படைத்த எண்ணங்களைக் களைந்து இதுபோன்ற அமைப்பை வழிநடத்தி செல்லலாம் என்று ஆலோசனை வழங்கி இருந்தார்.

இந்நிலையில், பார்ப்பனர் அல்லாத வாசகரான சி.வி.ரெட்டி என்பவர் குன்டூரிலிருந்து மெட்ராஸ் மெயில் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில்,

பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பு என்கிற பெயரே பார்ப்பனர்களை ஒதுக்குவதாக இருக்கிறது. இது தேவையற்றதும், விரும்பத்தகாததும் ஆகும். மேலும் பார்ப்பனர் அல்லாதோர் அமைப்பு என்ற பெயர் மிகப் பரந்துபட்ட பொருளுடையதாக உள்ளது. பார்பனர் அல்லாத அனைத்து ஜாதி, மதத்தினரையும் உள்ளடக்குவதாக உள்ளது. இது பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சத்திரியர்கள், வைசியர்களை நான்காவது வகுப்பினரோடு சேர்ப்பதாக இருக்கிறது. இவ்வமைப்பு பார்ப்பனர் அல்லாத ஜாதிகளுக்கிடையே ஒற்றுமையையும் அனுதாபத்தையும் உண்டாக்க முடியாது. மாறாக, ரெட்டி அமைப்பு (சங்கம்), பலிஜா அமைப்பு, வேளாளர் அமைப்பு என அமைக்கப்பட்டு இருந்தால் செயல்பாடு சிறப்பாகவும் பயன் உடையதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை என்றும் ஜாதி உணர்வுள்ள, ஜாதி வெறிபிடித்த மனிதர்களின், அரசியல்வாதிகளின் குரலாகவே பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில், இன்றையை தமிழ்நாட்டை தவிர, மற்ற திராவிட மொழி பேசும் மாநிலங்களில் திராவிடம் குறித்து பேசாமல் இருப்பதற்கான காரணமும் இதன் மூலம் தெளிவாக புரிகிறது.

சி.நடேச முதலியார் என்ற அரசு சாரா தனி மருத்துவர் 1912- ல் தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பு, வயதுவந்தோருக்கு கல்வி அளிக்கும் மாலை நேர வகுப்புகளை நடத்தியது. அமைப்பின் உறுப்பினர்களே ஆசிரியர்களாக பணியாற்றினார். .

இந்த அமைப்பின் உறுப்பினர்கள், பார்ப்பனர் அல்லாதோர் சங்கம் என பெயர்வைக்கலாம் என்று சொன்னார், சிலர் அது எதிர்மறைப் பெயராக இருப்பதால், திராவிடர் சங்கம் எனப் பெயர் வைக்கலாம் என்று சொன்னார்கள். இறுதியில், லீக் உறுப்பினர்களின் ஒப்புதல்படி தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.

நாம் திராவிட என்ற சொல்லை, எட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தியதை பார்த்தோம், மனுதர்ம சாஸ்திரத்தில் பயன்படுத்தியதை பார்த்தோம், அபிதான சிந்தாமனியில் பயன்படுத்தியதை பார்த்தோம், கால்டுவெல் பயன்படுத்தியதை பார்த்தோம். ஆனால் அமைப்பு ரீதியாக இந்த சொல், அதாவது திராவிட என்ற சொல், டாக்டர். நடேசனார் அவர்கள் பயன்படுத்தும் முன்பாகவே...

1892 – ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் உள்ள பஞ்சமர்களால் ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பிற்கு ஆதிதிராவிட ஜனசபா என்ற பெயர் சூட்டப்பட்டது. திராவிடர் என்ற சொல்லுக்கு முன்னால் ஆதி என்ற ஒட்டை சேர்த்து, தம்மை பழமை வாய்ந்த திராவிடர்கள் என அவர்கள் அழைத்துக்கொண்டனர். அடுத்து, 1894 – ஆம் ஆண்டு அக்டோபரில், சென்னையில் பறையர் மகாஜன சபை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. பறையர், பஞ்சமர் எனும் இழிவுதரும் பெயர்களை நீக்கி திராவிடர் எனும் இனப் பெயரால் அவர்கள் அழைக்கப்படுவதை உரிமையாக கோரினர் என்று 09.05.1916 அன்று வந்த மெட்ராஸ் மெயில் பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

இன்று, திராவிடன், திராவிடர், திராவிடம், ஆதிதிராவிடர் போன்ற சொற்களை பயன்படுத்த தயங்கி அதற்கு மாற்றாக வடநாட்டில் பயன்படுத்தும் சொல்லான தலித் என்ற சொல்லை பயன்படுத்துவோர் இதை கவனிக்கவேண்டும்.

பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கி படிக்க, கல்லூரியில் கற்க ஜாதி ஒரு தடையாக இருந்தது. சென்னை பல்கலைகழக செனெட் கமிட்டி அறிக்கையின் படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இடம் தராமல், வெளியில் தங்களுக்கான தங்கும் வசதியை எற்படுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தொடர்பான செய்தி 16.10.1915 மெட்ராஸ் மெயில் பத்திரிக்கையில் வந்துள்ளது. இந்நிலையில், திராவிட சங்கம் நடத்திய நடேசனார் அவர்கள், திராவிடன் இல்லம்  என்ற விடுதியை பார்பனரல்லாதோருக்காக உருவாக்கினர். இதுவே பார்பனர் அல்லாதோர் முன்னேற்றம் குறித்து எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

1915- ம் ஆண்டு வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதோரின் கடிதங்கள் என்ற நூல், பார்பனரல்லாதோர் இருபத்தியொரு பேர் எழுதிய கடிதங்களை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு கடிதம், பார்பனர் அல்லாதோரின் நோக்கங்கள் நிறைவேறவும், அவர்கள் முன்னேறவும், திராவிட மகாசபை ஒன்றை சென்னையில் உருவாக்கி, அதன் கிளைகள் அனைத்து மாவட்டம், தாலுகா, , நகரம், கிராமம் என்று ஏற்படுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தது. 1910 – 1920 க்கும் இடையில், பார்ப்பனர் அல்லாதோரின் கல்வி கற்றவர்களின் விகிதம் உயர்ந்திருந்தது. தாங்களும் பார்பனர்களோடு போட்டிபோடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக பார்ப்பனர் அல்லாதோர் உணர்ந்தனர். பார்ப்பனர் அல்லாதோர் புறக்கணிக்க முடியாத சக்தியாக கிளர்ந்தெழுந்தனர்.

இந்த சூழலில், அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம், பார்ப்பனர் அல்லாதோர் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க தூண்டுகோலாக இருந்தது.


சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த பிரம்மா ஞான சபையின் தலைவர்களின் எழுத்துகளும், சொற்பொழிவுகளும், ஆரிய நாகரிகத்தையும், சமஸ்கிருத இலக்கியங்களையும் புகழ்ந்துரைத்தன. சென்னை நகரில் சம்ஸ்கிருத பள்ளிகள் தொடங்கப்பட்டன. சபையின் கிளைகள் மூலமாக ஆரிய நெறிகள் முன்னெடுத்து செல்லப்பட்டன. இந்து சமய இலக்கியங்களை வினா விடை போன்ற  துண்டறிக்கை மூலமாக பிரச்சாரம் செய்தனர். அன்னிபெசன்ட் இந்து சமயத்தின் ஸ்மார்த்த பிரிவை எல்லோரும் அறிந்துகொள்ள விழிப்புணர்வு பிரசாரத்தை தென்னிந்தியாவில் செய்தார். C.H. ஹெயம்சாத் எழுதிய Indian Nationalism and Hindu Social Reform என்ற நூலில், அன்னிபெசன்ட் மிகப் பரந்த அளவில் இந்து மதம் சார்ந்த பண்பாட்டையும் தேசியத்தையும் வளர்த்தெடுப்பதில் சென்னை நகர பார்ப்பனர்களிடையே பணியாற்றினார், 1904 – ம் ஆண்டு அன்னிபெசன்ட் சென்னை இந்து சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார் என்று குறிபிட்டுள்ளார். மேலும், வர்னாஸ்ரமத்தின் நான்கு படித்தரங்களை சம்ஸ்கிருத இலக்கிய ஆதாரங்களை எடுத்துக்காட்டி தமது ஆதரவை வழங்கினார்.

1907-ல் பிரம்ம ஞானசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றிவந்த இப்படிப்பட்ட அன்னிபெசன்ட் காங்கிரசில் சேர்ந்து, 1916 ம் ஆண்டு சென்னையில் ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கினார். காங்கிரஸ் இயக்கத்தில் ஏற்கனவே பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்துவந்த நிலையில், ஹோம் ரூல் இயக்கத்தின் செயல்கள் பார்ப்பனர்களை மட்டுமே நாட்டினுடைய நிர்வாகத்தில் வலுப்படுத்த உதவும் என்றுணர்ந்த பார்ப்பனர் அல்லாதோர், அன்னிபெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்திற்கு எதிர்வினை ஒன்றை உருவாக்கவேண்டுமானால், பார்ப்பனர் அல்லாதோர் மிகப் பெரிய அளவில் ஒன்றுபட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தனர்.

1916 – ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வேப்பேரியில் நடேசனார் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பிட்டி.தியாகராயர் மற்றும் டி.எம்.நாயர் உள்ளிட்ட முப்பது பேர் கொண்ட பார்ப்பனர் அல்லாதோரின் கூட்டம் நடைபெற்றது. இவர்கள் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதன் சார்பாக தென்னிந்திய நலவுரிமை சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இந்திய பார்ப்பனர்களிடம் மட்டுமே இருந்த அதிக பத்திரிக்கைகள் இருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதோருக்காக, திராவிடன் என்ற தமிழ் நாளேடும், ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளேடும் நடத்தப்பட்டது. இந்த ஆங்கில நாளேட்டின் பெயரிலேயே ஜஸ்டிஸ் பார்ட்டி நீதி கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்டது.

1917 அமைப்பாக உருவாக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தனது நோக்கங்களை பின்வருமாறு வெளியிட்டது.

தென்னிந்தியாவில் உள்ள பார்பனர்கள் அல்லாத சமூகங்களுக்கு இடையே கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் உற்பத்தி, ஒழுக்கம் ஆகியவற்றை உருவாக்கி முன்னெடுத்து செல்லுவது.

பொது அம்சங்கள் நிறைந்த பிரச்சனைகளைக் குறித்த காலத்தில் தகுந்த பிரதிநிதித்துவத்தோடு அரசின் முன்வைத்து தென்னிந்திய மக்களின் நலன் சார்ந்த பார்வையோடும், முன்னேற்றத்திற்குரிய எல்லா நலன்களும் பாதுகாப்பும் எல்லா வகுப்பினர்களுக்கும் கிடைக்கும் விதமாக பணியாற்றுவது.

இந்நோக்கங்களுக்குப் பொதுக் கருத்தை உருவாக்கும் விதத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, துண்டறிக்கை வெளியிடுவதுமான செயல்பாடுகள் விளக்கப்பட்டு இருந்தன . அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்ற பார்ப்பனர் அல்லாத எவரும் உறுப்பினர் ஆகலாம்.

திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் சாதனைகள் திராவிட மக்களின் வாழ்கையை மாற்றிக்காட்டியது என்பதை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள் கடந்த நிலையில், திராவிடன் எனும் சொல் இனம் மற்றும் மொழியியல் சார்ந்த பொருளில் வழங்கப்பட்டது. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத வகுப்பினரை திராவிடன் என்ற ஒரே சொல்லில் வழங்கினர். பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும், பண்பாட்டு மறுசீரமைப்பின் அடையாளத்தை உறுதிபடுத்தவும் பார்ப்பனர் அல்லாத வகுப்புகள் தம்மை தர்க்காத்துகொள்ளவும் திராவிட தேசியம் என்ற பார்வை உருவானது. யார் திராவிட மொழிகளில் ஒன்றை பேசுகிறார்களோ அவர்கள் பொதுவாகத் திராவிடர்கள் என்கிற மரபுரிமையை பெறுகிறார்கள். வடக்கிலிருந்து வந்த ஆரியர்களுக்கு எதிராகவும் தென்னிந்திய பார்ப்பனர்களுக்கு எதிராகவும் அந்த திராவிடர்களை ஒன்றினைக்கவேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவர்கள் திராவிடர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். எனவே, திராவிடன் என்ற சொல் தென்னிந்திய பார்ப்பனர் அல்லாதோரிடையே அணிதிரட்டும் ஒரு திட்டமாக ஆயிற்று.

திராவிடர் என்ற சொல் பிரபலமடைந்து வந்தாலும், தெலுங்கு பேசும் சிலர் தங்களை திராவிடர்கள் என்று அடையாளபடுத்திக் கொள்ள விரும்பவில்லை.  நெல்லூரில் நடைபெற்ற ஐந்தாவது ஆந்திர மாநாட்டில், காங்கிரஸ் தலைவரான வெங்கடப்பையா, இப்போது இந்தியாவில் இருக்கிற மாகாணங்கள் யாவும் மொழிவழி அடிப்படையில் அமைக்கப்படவில்லை, ஆந்திரர்கள், திராவிடர்கள் (தமிழர்கள்), கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோர் சென்னை மாகாணம் முழுமைக்கும் ஒழுங்கற்ற வகையில் குழுக்குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இதர மாகாணங்களிலோ பல்வேறு இனங்களை சார்ந்து வேறுபாடுகள் உள்ள மொழியினர் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசினார். தமிழர்கள் என்பதற்கு வெங்கடப்பையா திராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார்.

தெலுங்கர்கள் திராவிடர் என்ற நிலையை பெறுவதில் அவர்கள் விருப்பம் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதில் பலகீனம் இருந்தது. தமிழை போலவே தெலுங்கு மொழி இருக்கவில்லை. தெலுங்கு மொழியில் பல சமஸ்கிருத மொழிகள் கலந்து இருந்தன. ஆரிய செல்வாக்கினால் தெலுங்கு தனித்த பண்பாட்டை இழந்திருந்தது. தமிழ்நாட்டு பகுதியை காட்டிலும் மற்ற பகுதிகளில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் மரியாதையாகவும் இணக்கமாகவும் இருந்தனர். அவர்கள் வகுப்புவாரி பிரதிநித்துவம் என்பதை விட அதிகமாக மொழிவாரி மாகாணம் அமைப்பதில் ஆர்வம் கொண்டனர்.

ஆந்திரப் பகுதிகளில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் இடையே பகையோ, கசப்புணர்ச்சியோ இல்லை, அது தமிழ் பேசும் பகுதியில் மட்டுமே இருந்தது ஏன்று சென்னை மாகாண சங்கத்தின் உறுப்பினராக இருந்த ப். செஞ்சைய்யா, தெலுங்குப் பேசும் பன்னிரெண்டு மாவட்டங்களின் சார்பாக பிரதிநிதியாக இருந்து, 1919 – ம் ஆண்டு இந்திய அரசின் மசோதா உருவாகும்போது கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முன்சாட்சியமளித்தார்.

இதிலிருந்து சிலவற்றை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் பேசும் திராவிட பகுதியில் ஏற்பட்ட விழிபுணர்ச்சி அளவிற்கு மற்ற திராவிட பகுதிகளில் ஏற்படவில்லை.

பழந்தமிழ் இலக்கியங்களை ஆராயத் தொடங்கி மற்ற திராவிட மொழிகளை ஆராய்ந்த கால்டுவெல் பயன்படுத்திய திராவிட என்ற சொல்லை தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொண்டு ஆர்வத்தோடு பயன்படுத்தியுள்ளனர். காரணம், திராவிட மொழிகளில் தமிழ் மொழியே மூத்த மொழி என்பதாலும், தமழ் மொழியில் சம்ஸ்கிருத கலப்பு மிகவும் குறைவாக இருந்ததாலும், திராவிடர் என்ற சொல் தங்களை அதிகம் பெருமைபடுத்துவதாக கருதியதாலும்.

மற்ற திராவிட மொழி பேசுபவர்கள், சமஸ்கிருத கலப்பின் காரணமாக, திராவிட என்ற சொல்லால் தமிழுக்கு முதலிடமும் மற்ற திராவிட மொழிகள் இரண்டாம் இடத்திற்கு செல்லும் என்ற காரணத்தினால், திராவிட என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த தயங்கியுள்ளனர்.

தமிழர்களை குறிப்பிடும்போது வெங்கடப்பையா திராவிடர் என்ற சொல்லை மாநாட்டில் பயன்படுத்தியது, மற்ற மாநில மக்கள் தமிழ் பேசும் மக்களை திராவிடர்கள் என்று கருதியது தெரிகிறது.

பார்ப்பனர்களால் அதிக அளவில் பாதிக்கபட்டிருந்தாலும், ஜாதிய ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கபட்டிருந்தாலும், சமூக நீதி குறித்த விழிப்புணர்ச்சி குறைவாக இருந்த காரணத்தினால், தமிழ் பேசும் பகுதியை தவிர ஏனைய திராவிட பகுதிகளில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதோருக்கும் பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கிறது. இது திராவிட ஆரிய என்ற சிந்தனையை பெரிய அளவில் அந்த பகுதியில் பரப்பவில்லை.
திராவிட தேசியம் அமைக்கும் செயலை முடக்கும்வண்ணம் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்த காங்கிரஸ் தலைவர்களால் மொழிவாரி மாகாணம் குறித்த பிரசாரமும் அதற்கான முயற்சியும் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் பேசிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கலைஞர். மு.கருணாநிதி அவர்கள், திராவிடர் என்றால் தமிழர், தமிழர் என்றால் திராவிடர் என்று பேசியதை, விமர்சனம் செய்துகொண்டிருக்கும் குழப்பவாதிகள், மேலே உள்ள பகுதியை கவனித்து புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் இதுவரை திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியை பார்த்தோம். மற்றொரு பகுதி மிகவும் முக்கியமானது. ஆம், அந்த பகுதி தந்தை பெரியார் திராவிட இயக்கத்தை வழிநடத்திய பகுதி. திராவிட பகுதியை சேர்ந்த திராவிடர்களின் நலனுக்காக இயங்கிய நீதிக்கட்சி எனும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தலைவராக தந்தை பெரியார் வந்தபிறகு திராவிட இயக்கம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது . ஒரு வட்டார இயக்கமாக, ஒரு இனம் சார்ந்த இயக்கமாக, அந்த இனத்தின் நலனை அரசின் மூலமாக பெறும் இயக்கமாக இருந்த நிலை மாறி, சிறந்த கொள்கைகளோடு இயங்கத்தொடங்கிய பகுதி அது. திராவிட இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு ஒரு நிரந்த வடிவமைப்பு தரப்பட்ட பகுதி அது. மனித சமுதாயத்தின் ஏற்றத்தை சிந்திக்கும் உலகின் எந்த சிறந்த கொள்கைக்கும் சிறிது சளைக்காத தலைச்சிறந்த கொள்கைகளை திராவிட இயக்கம் பெற்ற பகுதி அது. அதை நாம் அடுத்து பார்ப்போம். 


 
- திராவிடப் புரட்சி  


பின் குறிப்பு: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின், உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற நூலும் கு.நம்பி ஆரூரன் அவர்களின் தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும் என்ற நூலும் இந்த கட்டுரையை எழுத பெரிதும் உதவி புரிகின்றன.     

6 comments:

 1. இல்லாத ஜாதியை இருக்கிறது என்று நம்பும் ஜாதி வெறிபிடித்தவர்கள் இருக்கும் ஓர் இனத்தை இல்லை அது மாயை என்று சொல்லுவது வேடிக்கையானது. மறுப்பவர்கள், வரலாற்று அறிஞர்களாகவோ, மானுடவியல் அறிஞர்களாகவோ இருந்தால், அதை ஒரு பொருட்டாக கருதலாம், ஆனால் இப்படி மறுப்பவர்களில் பெரும்பான்மையினர் அரசியல்வாதிகள், இவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக எதையோ சொல்லி குழப்ப முயலுகின்றனர், .... Its true...

  ReplyDelete
 2. உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கிய உங்கள் பதிவு நல்லோதொரு கருத்து களஞ்சியம் தான் திராவிட புரட்சி அவர்களே! Crystal Clear one Blog Keep it Up Sir

  ReplyDelete
 3. அருமை தோழர் திராவிட புரட்சி. தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 4. திராவிடம் மாயை
  என்பான்
  இனி மூடிவிடுவான்
  தன் வாயை ...........!

  ReplyDelete
 5. மிக அருமையான விளக்கம். இந்த கட்டுரை அவசியமாக இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

  ReplyDelete
 6. திராவிட இயக்க வரலாறு குறித்த கட்டுரை அருமை. தோழர் திராவிட புரட்சி அவர்களின் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete