Monday 20 June 2011

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கும் பெரியவர்

08.04.11

இவர் அறுபத்தி மூன்று ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்? நிச்சயமாக கோமா நிலையிலிருந்து எதிர்பாராமல் தேர்தல் காலத்தில் விழித்திருக்க வாய்ப்பில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றாலும் இவரின் உண்ணாவிரதத்தில் எதோ நெருடுகிறது.

ஊழலை ஒழிக்க, நல்ல இளமை இருந்தபோது இருக்காத உண்ணாவிரதம், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பல பிரசித்திபெற்ற ஊழல்களை பார்த்தபோது இருக்காத உண்ணாவிரதம், தற்போது ஏன்? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

யாருடைய மறைமுக திட்டமும் (hidden agenda) யாருக்கும் தெரியாத நிலையில், இவருடைய உண்ணாவிரதத்தின் தேவை சரி என்றாலும் நோக்கம் சரியா என தெரியவில்லை. தூண்டபட்டதா? அல்லது தோன்றியதா? சிந்திக்கவேண்டிய கேள்வி. யாரோ ஆதாயம் தேட யாருக்கோ ஆதாயம் கிடைக்க இவரது உண்ணாவிரதம் பயன்படகூடாது பாருங்கள் (இவரது உண்ணாவிரதம் ஊழலை உடனே ஒழிக்க பயன்படாது என்ற எதார்த்த உண்மை இருக்கும்போது).

ஊழல் என்பது பொருள் ஆதாயம் மூலமாக மட்டும் இருக்கவேண்டிய தேவை இல்லை. அது நடுநிலையற்ற செயல்பாடுகளையும் சேர்த்தே குறிக்கிறது (தன் சாதிக்காக, தன் மதத்திற்காக, தன் இனத்திற்காக, தன் கொள்கைகளுக்காக, தான் சார்ந்த அரசியலுக்காக, தன் புகழுக்காக செய்யும் நடவடிக்கைகள் சலுகைகள் அனைத்தும் சேர்ந்தது)

மக்கள் போராட்டமாக சித்தரிக்கபடுகிறது. மக்கள் போராட்டம் என்பதை இந்தியா சந்தித்ததே இல்லை ( தெலுங்கானா பகுதியை தவிர) போராட்டம் என்பது எப்போதும் தலைவர்களின் போராட்டமாகவும் அரசியல் கட்சிகளின் போராட்டமாகவும் மட்டுமே இருந்துள்ளது. போராட்டத்தை தூண்ட தெரிந்தவர்களுக்கு அடக்கவும் தெரியும் அதுபோல அடக்க தெரிந்தவர்களுக்கு தூண்டவும் தெரியும். நடக்கும் நாடகத்தை நாம் இரசித்து பார்ப்போம். ஒரு காந்தியவாதியாக இதுவரை சாதி மத கொடுமைகளுக்காக போராடாத இந்த நபர் தற்போது ஊழலுக்காக போராடுவதுதான் எனக்கு உறுத்தலாக இருக்கிறது.


ஒரு உலக கோப்பை மட்டைபந்து விளையாட்டு போட்டியானது, எப்படி நமது மக்களை, அவர்களின் இந்திய அரசுக்கு எதிரான அத்தனை எதிர் மனப்பன்மையினையையும், திசை திருப்பி குதுகுலமாக கும்மாலமடிக்க வைத்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். இத்தனைக்கும் அது இந்தியா சார்பாக விளையாடிய விளையாட்டல்ல. பல நாடுகளை சேர்ந்த தனியார் விளையாட்டு நிறுவனங்கள் தங்களுக்குள் வர்தகரீதியாக ஆதாயத்திற்காக நடத்திய போட்டி அது. இந்திய அரசுக்கு அதாவது நாம் சொல்லும் இந்தியாவிற்கும் அந்த போட்டிக்கும் எந்த சம்பதமும் இல்லை. டாடா நிறுவனத்துக்கும் டொயோடா நிறுவனத்திற்கும் இடையில் நடக்கும் வர்தகபோட்டிபோன்றது மட்டைபந்து உலக கோப்பை போட்டி. ஆனால் நமது மக்கள் எப்படி இந்தியா இந்தியா என்று எவ்வளவு கத்தி, இந்த போழுதுபோக்கில் மதி மயங்கி, போலியான தேச பக்தியை வெளிபடுத்தினார்கள்.  நாளை வரபோகும் பரபரப்பான அதிர்ச்சிகரமான அல்லது மகிழ்ச்சிகரமான செய்திகள், இந்த காந்தியவாதியை மறக்கடிக்கும். நமது பத்திரிக்கை வியாபாரிகள் இவரது செய்திகளை முதல் பக்கத்திலிருந்து அடுத்தடுத்த பக்கத்திற்கு மாற்றி செய்தியை சுருக்கி இறுதியில் மறந்துவிடுவார்கள். உலக கோப்பை பரபரப்பில் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதி, இந்த காந்தியவாதிகூட உலக கோப்பை முடிந்தவுடந்தான் அராம்பிகிறார் அவரது உண்ணாவிரதத்தை என்றால் பார்த்துகொள்ளுங்கள்.



மத்திய அரசு அதாவது காங்கிரஸ் அரசு, இந்த சூழலில் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல கையாண்டு வருகிறது.

இந்த காந்தியவாதி, ஒரு உண்மையை மீண்டும் நினைவுபடுத்திகொள்ளவேண்டும், ஆங்கில அரசுக்கு எதிராக போராடிய காந்தி,  மத வெறியாளர்களிடம் தோற்றுப்போனார் என்பதை. இந்தியாவின் கல்வி அறிவு தொனுற்றி எட்டு சதவிகிதத்தை எட்டும் வரை, சாதி மற்றும் மதங்களினால் ஏற்பட்டுள்ள ஏற்ற தாழ்வுகள் சமன்படுத்த படும் வரை, பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் சமன்படுத்தபடும் வரை, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவு செய்யப்படும் வரை, இந்தியாவில் ஊழல் இருக்கும் , ஊழல் இருக்கும் , ஊழல் இருக்கும். இவையெல்லாம் சரிசெய்யபடுவதற்கு போராடாமல், நேரடியாக ஊழலை ஒழிக்க போராடுவது என்பது நோய் வருவதற்கான காரணிகளை ஒழிக்காமல் நோயை ஒழிக்க மருந்து தருவதை போலத்தான். நோய் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும் அதை ஒழிக்கமுடியாது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்ற அடிப்படை அறிவில்லாத பழைய பிற்போக்குத்தனம் நிறைந்த காந்தியவாதியாக இருக்கிறார் இந்த பெரியவர்.   

No comments:

Post a Comment