Monday 20 June 2011

கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியும் மோடி ஆட்சியில் குஜராத்தின் வளர்ச்சியும்

07.04.11

இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று தோன்றியதற்கு முக்கியமான காரணம், சமீபகாலத்தில் சிலர் குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடிதான் காரணம் என்பதும் சிலர் கலைஞரின் காலத்தில் ஏற்பட்டுள்ள தமிழகத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட முயல்வதும்தான்.

குஜராத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் ஒப்பிடுவதென்பது வண்டல் மண்ணில் விவசாயம் செய்வதையும் பாலை நிலத்தில் விவசாயம் செய்வதையும் ஒப்பிடுவதுபோலத்தான்.

இந்த இரு மாநில வளர்ச்சியை ஒப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ளவேண்டியது .

.           குஜராத்தில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன? தமிழகத்தில் எத்தனை பொதுத்துறை உள்ளன?

.           தமிழகத்தைவிட குஜராத்தில் பல மடங்கு அதிக பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன ஏன்?

.           தமிழகத்தில் எத்தனை உள்நாட்டு பன்னாட்டு நிறுவங்களின் தலைமை அலுவலகம் உள்ளது?

.           பெரும்பான்மையான உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருப்பது ஏன்?

.           சேது சமுத்திர கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது ஏன்?

இப்படி பல கேள்விகளுக்கான பதில்களை தேடினால், இந்திய நாட்டில் நடக்கும் பல ஒருதலைபட்சமான ஓரவஞ்சனை செயல்களை அடையாளம் காண முடியும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிலவற்றை காண்போம்.

.           பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

.           பல பெரிய நிறுவங்களின் அதிகாரிகள் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள்.

.           தொழில் வளத்தை பெருக்கும் அமைச்சகங்களில் இருக்கும் அமைச்சரில் தொடங்கி முக்கிய அதிகாரிகளில் பலர் வடநாட்டை சேர்ந்தவர்கள்.

இப்படி பல்வேறு காரணங்களால் தென்னகத்தில் (தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி) மத்திய அரசாங்கத்தால் நிறுவப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இல்லை.

இந்நிலையில் இதையெல்லாம் தவிர ஒரு முக்கியமான ஒன்று தொழில் வளர்ச்சியில் மாநில வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அது “இயற்கை எரிவாயு”.

இயற்கை எரிவாயு என்பது உரத்தொழில்சாலைகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது மேலும் அது சுத்தமான விலைகுறைந்த  எரிபொருள் என்பதால் அதன்மூலம் பல தொழிற்சாலைகள் இயங்கவும் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கவும் முடியும்.

தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் அதன் எரிபொருளுக்கும் மின்சார தேவைக்கும் வெளிநாட்டிலிருந்து கரியை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன. சில தொழிற்சாலைகள் மின்சாரம் தயாரிக்க வெளிநாட்டிலிருந்து நாப்தவை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக அதன் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது.

அதே சமயத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவில் அதன் கடல்பகுதியில் கிடைக்கும் எண்ணெய்வளம் தவிர்த்த இயற்கை எரிவாயுவை நேரடியாக அதன் தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் அல்லது இலவச மானியமாகவோ தருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த உற்பத்தி செலவில் அதிக இலாபம் கிடைகிறது. இலாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும் என்பது இயற்கையே.

இந்திராகாந்தி காலத்தில் தனது மாநிலமான உத்திரபிரதேசதிற்கு மகாராஷ்ட்ராவில் இருந்து குழாய் மூலமாக ஒரு குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து செல்ல வழிவகுத்தார்கள். இதன் மூலம் அங்கு உரத்தொழிற்சாலைகள் பெருகின.

தற்போது ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா கோதாவரி கடல் படுகையில் அதிக அளவில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்க பட்டு அதையும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது குஜராத் மாநிலத்திற்கு குழாய் மூலம் எடுத்து செல்கிறது.

ஒரு அதிர்ச்சி தகவல் : குஜராத் என்ற ஒரு தனி மாநிலம் இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயுவில் நாற்பது சதவிகிதத்தை எடுத்து பயன்படுத்துகிறது. தமிழகத்திற்கு ஒரே ஒரு சதவிகிதம் கூட கிடையாது.

இயற்கை எரிவாயு விஇசயத்தில் தென்னகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், ஓர் ஆண்டுக்கு முன்பு ஒரு நாள் நமது தமிழக முதல்வர் கலைஞர் கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது ஒரு சாதாரணமான செய்தியாக அன்று நமது பத்திரிக்கைகள் வெளியிட்டன. அடுத்த சில நாட்களில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தின் நோக்கம் கிருஷ்ணா கோதாவரி படுகை இயற்கை எரிவாயுவை தென்னகத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை பற்றி விவாதிக்க கருத்து பரிமாறிக்கொள்ள.

அந்த முக்கியமான கூட்டத்தில், தமிழகத்தின் தொழில் துறை செயலாளர், கேரளாவின் தொழில்துறை செயலாளர் (அவர் முதல்வர் அச்சுதானந்தன் அனுப்பி வைத்த வாழ்த்து செய்தியை வாசித்து காண்பித்தார்), ஆந்திர மாநில கேஜி பேசின் காஸ் கமிஷன் தலைவர், கர்நாடக மாநில பிரதிநிதி மற்றும் தென்னகத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள், அவர்களின் பிரதிநிதிகள், அறிவியல் அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் ஒரு மாநிலமே மொத்தமாக சுரண்டுவதையும் அதிலும் சில தொழில் குடும்பங்கள் அதிகமாக சுரண்டுவதையும், தென்னகம் தொடர்ந்து புறக்கணிக்க படுவதையும் இதனால் ஏற்படும் இலாப நட்ட கணக்குகளையும் பற்றி பேசினார்கள்.

இதில் ஒரு சுவையான ஆனால் அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளிவந்தது. திருபெரும்புதூரில் உள்ள ஒரு பெரிய பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் தலைவர் வருத்தத்தோடு குறிப்பிட்டது: இதே தொழிற்சாலையை நாங்கள் குஜராத்தில் அமைத்திருந்தால் எங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் அதிக இலாபம் வந்திருக்கும் என்ற ஆதாரத்துடன் கூடிய புள்ளிவிவரத்தை தந்தார். கூட்டம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.

இதைவைத்து பல தொழில் நிறுவனங்களை குஜராத்தும் மகாராஷ்ட்ராவும் இழுத்துகொண்டிருந்த நிலையில், வேறுவழி இல்லாமல், தென்மாநிலங்கள் , உற்பத்தி சாராத தொழில்களான மென்பொருள், கால் சென்டர், தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவு சார்தொழில்களில் கவனம் செலுத்தி அதில் வளர தொடங்கின.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நமது முதல்வர் கலைஞர் என்ற திறமைசாலியின் செயல்பாடுகள் மெல்ல தொடங்கின. அரசியல் சூழலை பயன்படுத்தி மத்திய அரசில் பங்கெடுத்து முக்கிய துறைகளை பெற்று அதன் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்தார். குஜராத் போன்று இலவச அல்லது குறைந்த விலை மின்சார/இயற்கை எரிவாயுவை தர இயலாத நிலையில், இலவச நிலங்கள் தருவது, உடனடி உரிமம் தருவது, அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது, பிரச்சனையற்றர் செயல்பாடுகளுக்கு உதவுவது போன்ற வழிகளில் பல பன்னாட்டு நிறுவனங்களையும் உள்ளூர் நிறுவனங்களையும் ஊக்கபடுத்தி தொழில்வளம் பெருக செய்தார். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகியது தனிநபர் வருமானமும் பெருகியது.

மெதுவாக காயை நகர்த்திய கலைஞர் சேது சமுத்திர திட்டம் நிறைவேற ஆவன செய்தார். விடுவார்களா நம் வட இந்திய பெருமுதலாளிகள்? அந்த திட்டம் நிறைவேறினால் நமது துறைமுகங்கள் வளரும், பல பன்னாட்டு சரக்கு கப்பல்கள் வந்து போகும், குஜராத்து மகாராஷ்டிரா துறைமுகத்தை விட பெரிய அளவில் நமது கடல் வணிகம் பெருகும். அதை எப்படி அந்த மாநிலத்தை சேர்ந்த பேரு முதலாளிகள், அரசியல்வாதிகள் விடுவார்கள்? எடுத்தார்கள் அவர்களது ராமர் பானத்தை எய்தார்கள் திட்டத்தின் மீது, முடக்கினார்கள் அந்த திட்டத்தை.

ஓயவில்லை வட இந்திய தொழில் அதிபர்களும் மோடியும். தமிழகத்திற்கு நேராகவந்த மோடி தன மாநில வசதிகளை எடுத்து சொல்லி இங்கிருக்கும் தொழில் அதிபர்களை அங்கு வந்து தொழில் தொடங்க கேட்டுகொண்டார். மேலும் மத்தியில் தி.மு.க அமைச்சரவையில் இடம் பெறாமல் இருப்பதற்கான அணைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.

இதில் கலைஞரின் சிறப்பு என்னவென்றால், குஜராத்தை போல எந்த வளமும் இல்லாமல், குஜராத்தை போல எந்த பெரிய உள்நாட்டு முதலீடும் இல்லாமல், குஜராத்தை போல எந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் இல்லாமல், பன்னாட்டு முதலீடுகளை கொண்டுவந்து தமிழகத்தை தொழில்வளத்தில் முன்னேறிய முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கிறார்.

நண்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிகாட்டிய சாதனை பெரியதா? வண்டல் மண்ணில் விவசாயம் செய்து காண்பிப்பது பெரியதா? எது சாதனை? விதண்டவாதமும் அரசியலும் செய்யவிரும்பாத அனைத்து நடுநிலையாளர்களும் ஏற்றுகொள்வார்கள் கலைஞரின் சாதனை மிகபெரிது என்பதை.

No comments:

Post a Comment