Sunday 26 June 2011

சென்னையில் கூடிய ஈழ ஆதரவாளர்கள் கூட்டம்

சென்னையில் கூடிய ஈழ ஆதரவாளர்கள் கூட்டம்

எண்பதுகளில், நான் சிறுவனாக இருந்த காலத்தில், ஈழ ஆதரவு கூட்டங்களில், அந்த எழுச்சியான ஊர்வலங்களில் கலந்துகொண்ட பிறகு, அதுவும் நீண்ட காலங்களுக்கு பிறகு, ஈழ ஆதரவிற்காக, தமிழின உணர்வோடு கூடிய ஒரு கூட்டத்தில் இன்று கலந்துகொண்ட மகிழ்ச்சியோடு, அதுகுறித்த சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று சென்னையின் மெரினா கடற்கரையில் கூடபோகும் மனிதாபிமானமிக்க ஈழ ஆதரவாளர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருக்கும்போது, பட்டினப்பாக்கம் அருகில் இருசக்கர வண்டியில் வந்த ஒருவர் கேட்டார் கண்ணகி சிலை எங்கிருக்கு சார்?. உடன் புரிந்துகொண்ட நான் கேட்டேன், மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக செல்கிறீர்களா? என்று. அவரும் அமாம் என்று பதிலளிக்க எனக்கொரு மகிழ்ச்சி அதில். நானும் அங்குதான் செல்கிறேன், எண்ணை பின்தொடர்ந்து வாருங்கள் என்று சொல்லி புறப்பட்டேன்.

கண்ணகி சிலை அருகில் வந்த எண்ணை, சாலை போக்குவரத்து காவல்துறையினர், வேறுவழியை காட்டி அங்குதான் உள்ளே போகமுடியும் என்று மீண்டும் திருப்பிவிட்டனர். இறுதியில், நேதாஜி சிலை பின்புறம் என் வாகனத்தை நிறுத்தினேன்.

பல சிறப்பான கூட்டங்கள் நடைபெற்ற சீரணி அரங்கிருந்த இடத்தில், அரசனிடமே நீதி கேட்டு போராடிய காப்பியத்தலைவி கண்ணகி சிலைக்கும், ஆங்கிலேயே அரசை எதிர்த்து போராடிய சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கும் இடையில், இன்றும் போராட்ட குணம் போய்விடவில்லை என நிருபிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர் தமிழின உணர்வாளர்கள்.

அருகில் சென்றபோது எனக்கு காத்திருந்தது அடுத்த ஆச்சர்யம். ஆமாம், அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கூடியிருந்தனர் அந்த இடத்தில். தற்போது ஈழ ஆதரவு உனர்வை குத்தகை எடுத்துள்ளதாக கருதும் ஒரு கட்சியின் கொடி தேவையில்லாமல் பறந்தது நெருடலாய் இருந்தது, பொதுவான இந்த உணர்வு ரீதியிலான கூட்டத்தில், கட்சி கொடியை தவிர்த்திருக்கவேண்டும் என்று பலரும் புலம்பியதை கேட்கமுடிந்தது.

புகைப்பட கருவி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி என ஆயத்தமாக சென்றிருந்த என்னிடம் ஒரு தோழர் காகித குவளையுடன் கூடிய மெழுகுவர்த்தியை கொடுத்து சென்றார். சிலர் ஈழ படுகொலையை கண்டித்து வாசகம் எழுதியிருந்த ஆடை அணிதிருந்தனர், சிலர் கருஞ்சட்டை அணிதிருந்தனர், வந்தவர்களில் பலர் இளைஞர்கள், பல பெண்களும் வந்திருந்தனர், சில பெண்கள் தங்களின் குழந்தைகளோடு வந்திருந்தனர், பல ஊடங்களின் செய்தியாளர்கள் வந்திருந்தனர், பல கட்சிகளின் தலைவர்கள் வந்திருந்தனர், அவர்களின் தொண்டர்கள் வந்திருந்தனர்.

நான் எண்பதுகளில் கண்ட கூட்டத்திற்கும், இன்று வந்திருந்திருந்த கூட்டத்திற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருந்தது. அன்று ஒரே எண்ணத்தோடு தமிழின உணர்வோடு மட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இன்று, யாராவது அரசியல் பேசிவிடுவார்களோ? என்ற குழப்ப உணர்வோடு வந்திருந்தனர்.

இது யாரும் கூட்டிய கூட்டம் அல்ல, அனைவரும் உணர்வோடு கூடிய கூட்டம் என்பதால், எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல், கையில் ஏற்றிய மெழுகுவர்த்தியோடு தங்களின் தமிழின உனர்வை வெளிக்காட்டிவிட்டு அமைதியாய் கலைந்து சென்றனர் இனவுனர்வுள்ள தமிழர்கள்.

இந்த கூட்டம் யாருக்கு எதை தெரிவிக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களுக்கு ஒரு செய்தியை நிச்சயம் தெரிவிக்கிறது. ஆம், எந்த அரசியல் கலப்பும் இல்லாவிட்டால், எப்படி தமிழக மக்கள் தானாக தங்களின் தமிழுணர்வை ஒற்றுமையாய் வெளிக்காட்டுவார்கள் என்பதை. ஈழ ஆதரவு உணர்வை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திய தலைவர்கள், இன்றாவது உணரவேண்டும், ஈழ ஆதரவு உணர்வென்பது கட்சி பேதமில்லா உணர்வென்பதை. இன்று கூடிய கூட்டம் அதற்கொரு சான்று.

மொத்தத்தில், தமிழர்களின் இனஉணர்வு இன்று மெரினா கடற்கரையில் வெளிப்பட்டது.     

No comments:

Post a Comment