Tuesday 7 February 2012

பெரியாரிய பார்வையில் விடுதலை நாள் தகவல்கள்

பெரியாரிய பார்வையில் விடுதலை நாள் தகவல்கள் (15.08.11 அன்று முகநூலில் பதிந்தது)

இன்று பிரித்தானிய அரசின் கீழ் இருந்த பிரித்தானிய இந்திய பகுதியின் 572  சுய சமஸ்தானங்களுக்கு முழு விடுதலை வழங்கப்பட்ட நாள்.

இந்த நாளில் நாம் தெரிந்துகொள்ள....

தந்தை பெரியார் திராவிட நாடு குறித்து 17.12.1939 அன்று குடிஅரசுவில் எழுதிய தலைங்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகளில் ஒரு சிறு பகுதியை எடுத்து தந்தால் சிறப்பாக இருக்குமென கருதி தந்துள்ளேன். அந்த செய்தி பின் வருமாறு...

.....*நீண்ட ஒரு பத்திக்கு பிறகு*......கடல் நீரினுள் புகுந்து முத்துக்களையும் பவளங்களையும் எடுத்துவர கருவிகளையும், நீரினுள் புகுந்து செல்லும் சப்மரீன்களையும், டார்பிடோக்களையும், எண்ணும் நவீன இயந்திரங்களையும் கண்டுபிடித்து வருபவர்களிடம் மச்சவதாரத்தையும், வராக அவதாரத்தையும், கூர்ம அவதாரத்தையும் , குறித்துச் சொன்னால் நகைக்காமல் என்ன செய்வார்கள் என்று கேட்கிறோம். ஆகவே, இத்தகைய நாகரீகத்தையும், பழக்கவழக்கத்தையும், கலைகளையும், கொண்டவர்கள்தானா சுதந்திரத்தோடு வாழ்துவிடப் போகிறார்கள்? இவர்களுக்கா சுதத்திரம் என்று எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய நாகரீகத்தையும், கலையையும், தெய்வ வழிபாட்டையும் கொண்டது எது? எச்சமூகம்? எந்நாடு? என்பதை சிந்தித்து பார்க்கவேண்டாமா? வெறும் ரோஷம் எதற்கு? ஏக தெய்வ வழிபாட்டையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், தொழிலையே பிரதானமாகவும் கொண்ட கலையையும், நாகரீகத்தையும் உடைய சமூகம், நாடு எத்தனை நாளைக்கு மேற்சொன்ன பழிச் சொற்களைத் தாங்கி நிற்கும்? பயிர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசை உடையவன் களைகளைக் களைந்தெறிய பிரியப்பட மாட்டானா? அதற்கும் தண்ணீர் இறைத்துவிட்டு இத்தனை நாள் வளர்தோமே இப்பொழுது அவைகளை எப்படி களைந்தெறிவது என்று எந்த பயித்தியகாரனாவது என்னுவானா? அது போலவே, நமது கலை, நாகரீகம், பழக்கவழக்கம் ஆகியவைகளானாலும் சரி, அவைகளை நிலை பெற்றிருக்கச்செய்யும் எந்தச் சட்டமானாலும் சரியே களைந்தெறியவேண்டியது முதற்கடமையல்லவா என்று கேட்கிறோம்.

இவ்வண்ணம் நம்நாட்டிலே இன்று நேற்று தோன்றியதாக யாரும் கருதி விட முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி. தியாகராய பெருமான் மனதிலும் தோன்றிவிட்டது. ஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட மக்களை, திராவிட நாட்டை காப்பாற்ற வேண்டும். இந்நாட்டிலிருந்து ஆரியக் களையை களைந்தெறிய வேண்டும் என்ற கருத்தின்மீது பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை தோற்றுவித்தார்கள். இந்த எண்ணம் அன்று இருந்ததினாலேதான் பார்பனரல்லாதோர் இயக்கத்தை தோற்றுவித்தார்கள். இந்த எண்ணம் அன்று இருந்ததினாலேதான் பார்பனரல்லாதோர் இயக்கத்தார் “திராவிடன்” என்ற பத்திரிக்கையை தோற்றுவித்து நடத்தி வந்தார்கள். இப்பொழுது அவ்வெண்ணம் கொழுந்துவிட்டு எரிகிறது. திராவிட இரத்தம் கொதிக்கிறது. அதன் காரணமாகவே சென்ற 10ஆம் தேதி நாடெங்கும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் ஒலித்தது. திராவிட நாட்டை தனியாக பிரித்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கபட்டிருகிறது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் சரித்திர அறிவோ, அரசியல் அறிவோ அற்ற ஒரு சிறு கூட்டம் பரிகாசம் பண்ணுகிறது. தமிழ்நாடு தமிழருக்கே ஆய்விட்டால் கன்னடர்,ஆந்திரர்,கேரளர் என்னாவது என்று கேட்கின்றன அம்முண்டங்கள். தமிழ், தாய் மொழியென்றும் அதிலிருந்துதான் கன்னடம், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகள் பிறந்தன என மொழி ஆராய்ச்சி வல்லுனர்கள் புகலுகின்றனரே. அப்படியிருக்க தமிழ்நாடு தமிழருக்கே என்றால் அவர்களைச் சேர்ந்த குழுவினர்களாகிய கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் தனித்து பிரிந்து போய்விடுவார்களோ? இந்த அற்ப விஷயம் எப்படி அந்த மர மண்டைகளில் ஏறப் போகிறது? அது ஒருநாளும் ஏறப்போவதில்லை என்பதையும் நாமறிவோம்.

பழைய நாகரீகத்தை என் இவ்வளவு பிடிவாதமாக ஆதரிக்கிறோம் என்றால், புது உலகு சமைப்பதற்கான திட்டங்களும், கொள்கைகளும், முறைகளும் நமது தமிழர் கலையிலும், நாகரீகத்திலும், பழக்கவழக்கதிலும் இருப்பதனாலேயே ஆகும். இன்று நாம் அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும், சீர்குலைந்து க்ஷீணதிசையடைந்து வாழ்ந்து வருவதற்கு காரணம் ஆரிய ஆதிக்கமே என்று நாம் எந்த மலையுசியிளிருந்தும் கூசாது கூறுவோம். சரித்திர ஆதாரங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுவோம். அறிஞர் கூற்றுகள் எத்தனை வேண்டுமானாலும் தீட்டுவோம். நன் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருப்பதற்கும் நாம் அடிமையாய் இருப்பதற்கும் பார்பனியமே அதாவது, ஆரியமே காரணம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். இந்நாட்டில் பார்பனியம் இழைத்த கொடுமைகள் பல என தோழர் காந்தியார் பார்பனிய வலையில் விழுவதற்குமுன் கூறியிருக்கிறார். ஆகவே, திராவிட நாடு முன்னேற வேண்டும் ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமிழ்நாடு தமிழருக்கே வர வேண்டும் எனக் கோருகிறார்கள்.

மற்றொரு காரணம் என்னவென்றால், ஒரு மாகாணம் மற்றொரு மாகாணத்தை எந்தவித காரணத்தினாலும் சுரண்டகூடாது என்பதினாலே ஆகும். இப்பொழுது நம்மாகானம் அறிவுத்துறையிலே சிறந்து விளங்கியும், அதாவது உயர்ந்த கல்வியிலே நம்மவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகயிருந்தும், வர்த்தகம், செல்வம் ஆகிய விஷயங்களிலே வடமாகானத்துக்கு இளைத்தே இருந்து வருகிறது.......*பத்தி தொடர்கிறது*........

தமிழன் தன்  “லட்சியம்” வெற்றி பெறும் வரை அயரா மாட்டான் அல்லும் பகலும் அதே சிந்தனையாயிருப்பான் தமிழன் இத்துணிச்சலை பெற்றிருப்பதில் ஒன்று அதிசயம் ஒன்றுமில்லை. இன்று உலகிலே நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்ப்பவர்களுக்கு இதில் ஒன்றும் அதிசயம் காண மாட்டார்கள். அய்ரோப்பாக் கண்டத்தில் எத்தனை சிறு நாடுகள் நமது திராவிட நாட்டைவிட ஜனத் தொகையிலும், விஸ்தீரனதிலும் எவ்வளவோ சிறிய நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன என்பதை யாவரும் அறிவர். ஏன் அவைகள் தனக்ல் சுதந்திரத்திற்காக போராடுகின்றனவென்றால், அப்பொழுதுதான் தங்கள் கலை, நாகரீகம் முதலியவைகள் காப்பாற்ற முடியும் என்ற காரணதிலேயாகும். அய்ரோப்பா எல்லாம் ஒன்றாகிவிட்டால் மெஜாரிடியினர்களுடைய நாகரீகத்தை புகுத்தி மற்றவைகளை அழிக்கச் செய்துவிடுமென்ற அச்சம் ஒவ்வொரு நாடும் கொண்டிருப்பதனால்தான் இன்று அவ்வாறு போராடுகின்றன. ஆகவே, உலகம் போற்றும் நமது கலை, நாகரீகம் பழக்கவழக்கம் ஆகியவை வளர வேண்டுமானால் – உலகிலேயே பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் நமது நாட்டுக்கு அதாவது திராவிட நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும். ஏற்கனவே மாகாணங்களுக்கு சுய ஆட்சி வழங்கப்பட்டுவிட்டது. இப்பொழுது நாம் கோருவதெல்லாம் நமது கலையின் மீதும், நாகரீகதின்மீதும், பொருளாதாரத்தின் மீதும் வேறு எந்த மாகாணமும் அதிகம் செலுத்த கூடாதுஎன்பதேயாகும். இந்த பாதுகாப்பை கோருவதில் என்ன தப்பு என்று கேட்கிறோம். நிலம் படைத்தவன் தனது நிலத்தை சுற்றி அடுத்த நிலத்துகாரனது ஆடு மாடுகள் வந்து பயிரை அழித்துவிடாமல் பார்த்துகொள்வதற்காக வேலி போட மாட்டானா? அப்படி அவன் வேலி போடுவது தவறா? என்று கேட்கிறோம். இதுபோலவேதான் நமது மாகாணத்திற்கு பந்தோபஸ்து தேடுகிறோம் இது எப்படி குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

எனவே, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் திராவிடநாடு தனியாக பிரிக்கப்படும்வரை சலிக்காமல் ஒலிக்கபடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அதற்கு ஆவன செய்ய ஒவ்வொரு தமிழனும் தன்னைப் பக்குவபடுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

திராவிடநாடு! திராவிடருக்கே!     


மேற்சொன்ன தந்தை பெரியாரின் கருத்துக்களை படித்தபிறகு இன்று எனக்கு கீழ் கண்ட கேள்விகள் எழுகின்றன...

நம் மொழி காப்பாற்றபடுகிறதா?

தமிழர்கள் எப்படி தன் மொழியில் பெயர் வைப்பதை அசிங்கம் என கருதி வட மொழியில் பெயர் வைக்கின்றனர்?

தமிழன் பண்டிகை வட நாட்டில் கொண்டாடப்படுவதில்லை, ஆனால், தீபாவளி, ஹோலி, ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகளை எப்படி நம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர்?

வடநாட்டினர் தென்நாட்டின் உடையை உடுத்த விரும்பாத நிலையில், தமிழர்களின் உடையை தமிழர்கள் வெறுத்து ஒதுக்கி...வட நாட்டின் பைஜாமா குர்தா, சல்வார் கமீஸ்..துப்பட்டா என்று மாறியது எப்படி?

தென் மாநில மொழிகளை வடநாட்டினர் கற்றுக்கொள்ளாத வெறுக்கும் நிலையில்...தமிழர்கள் எப்படி இந்தியை விருப்பத்துடன் கற்றுகொள்ள தொடங்கினர்?

தென்நாட்டின் உணவு வகைகளை வடநாட்டினர் வெறுத்து ஒதுக்கும் நிலையில்...தென்நாட்டினர் எப்படி வட இந்திய உணவை சுவைத்து சாப்பிட பழகினர்? பல உணவகங்களில் வட இந்திய பதார்த்தங்கள் என பட்டியலே தரப்படுகிறது எவ்வாறு?

இன்றும் தமிழகம் மற்றும் ஏனைய தென் மாநிலங்கள் பொருளாதாரத்தில் வடநாட்டை விட பின்தங்கியுள்ளது எவ்வாறு?

இந்த கேள்விகளுக்கான பதில்களும் தந்தை பெரியாரின் தலையங்கத்தில் உள்ள இறுதி பத்தியில் தெளிவாக தெரிகிறது. எதை அவர் தடுக்க நினைத்தாரோ அதை தடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் நமக்குள் எழுகிறது....


பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற அந்த 572 சுய சமஸ்தானங்களில் நம் திராவிடநாட்டு பகுதியும் இருந்தாலும்.....மொழி, கலை, நாகரீகம், பழக்கவழக்கம் ஆகியவற்றில் சிறந்திருந்த நாம் இன்று வட இந்திய ...ஆரிய...பார்பனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறாமல் இருக்கிறோம்...நாம் அடிமைகள்தான் இன்றும். அன்று ஆரியரிடமிருந்து பிரித்தானியரிடம் சென்றோம் மீண்டும் ஆரியரிடம் அடிமையாக்கபட்டுவிட்டோம்.

ஆகவே, எனக்கு இந்த நாளில் எந்த மகிழ்ச்சியும் ஏற்படவில்லை...போலியாக மகிழ்ச்சியை வெளிபடுத்திகொள்ளும் விருப்பமும் இல்லை.

- திராவிடப் புரட்சி                              

No comments:

Post a Comment