Tuesday 7 February 2012

தி.மு.க என்ன செய்யவேண்டும்?

(20.10.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)

தி.மு.க என்ன செய்யவேண்டும்?  

திருச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க முன்னிலை.

முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையட்டும் அது மக்களின் முடிவு.

இனி வருங்காலங்களில் தி.மு.க எப்படி செயல்படவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இனி தேர்தல் அரசியலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டுமா? அல்லது கொள்கை அரசியலுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? என்பது குறித்து சிந்திக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.

கடந்த கால வரலாறை சற்று திரும்பி பார்த்தால், வருங்காலதிற்கான வெளிச்சம் கிடைக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தி தேர்தல் நடத்தியபோது, காங்கிரஸ் பங்கேற்கவில்லை. நீதிக்கட்சி பங்கேற்றது வெற்றிபெற்றது. நீதிக்கட்சி படித்தவர்களாலும் பெரியமனிதர்களாலும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தேர்தலில் ஈடுபடாமல் மக்கள் இயக்கமாக செயல்பட்டது.

காலம் கனிந்த போது, காங்கிரசும் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து. மெல்ல நீதிக்கட்சி அதன் உட்கட்சி பூசல் மற்றும் மக்களிடம் இருந்து விலக்கி இருந்த காரணத்தால், தோல்வியை தழுவ, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

காங்கிரசில் இருந்து கொள்கை காரணமாக பிரிந்த தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தை தேர்தலில் ஈடுபடாத சமுதாய இயக்கமாக நடத்திக்கொண்டிருந்தார். சிதைந்து கொண்டிருந்த நீதிக்கட்சிக்கு தந்தை பெரியார் தலைவராக்கப்பட்டார். தலைவரான தந்தை பெரியார், உலகில் யாரும் எடுக்கத் துணியாத முடிவை எடுத்தார். அதாவது, நீதி கட்சி இனி தேர்தலில் பங்கேற்காது என்று. காங்கிரஸ் எப்படி மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்ததோ அதுபோல, நீதிகட்சியும் மக்களை கொள்கை ரீதியாக தயார்படுத்தும் பணியை செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். நீதிக்கட்சியை, திராவிடர் கழகமாக மாற்றினார்.

தந்தை பெரியாரின் தேர்தலில் பங்கேற்காத முடிவை அன்று இருந்த நீதிகட்சியை சேர்ந்த சிலர் ஏற்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்தது. திராவிடர் கழகம் கொள்கை ரீதியாக சிறப்பாக செயல்பட்டு, மக்கள் மனதில் திராவிடர் என்ற விழிப்புணர்வை, பகுத்தறிவு சிந்தனையை, மொழி உணர்வை, தனித் திராவிட நாடு என்ற உணர்வை  ஏற்படுத்தியது.

இப்படியே, தேர்தலில் ஈடுபடாமல் இருப்பது சரியல்ல என்ற கருத்தை திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணா உட்பட சிலர், தனி கட்சியை உருவாக்கும் எண்ணத்தில் இருந்தனர். தந்தை பெரியாரும், அக்காலத்தில் இருந்த சொத்துரிமை சட்டங்களை மனதில்கொண்டு, திராவிடர் கழகத்தின் தொடர் செயல்பாடுகள், தன் காலத்திற்கும் பிறகு செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில், இயக்கத்திற்கான சொத்தை காப்பாற்றும் வாரிசு தேவை என்பதால், மனியம்மையாரை திருமணம் செய்துகொண்டார். கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்த அண்ணா உட்பட சிலர், இந்த திருமணத்தை காரணம் காட்டி, பிரிந்தனர். (காரணம் இது என அன்று சொன்னாலும், பல ஆணடுகளுக்கு பிறகு, பேராசிரியர் அன்பழகன் அவர்கள், பிரிந்ததற்கான காரணம் ஆட்சியை பிடிப்பதே என்பதே தெரிவித்தார்.)

தி.க, தி.மு.க என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்ட பிறகு, காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரசை தந்தை பெரியார் ஆதரித்தார். தந்தை பெரியாரை பொருத்தவரை, தான் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், தனது கொள்கைகளை ஆட்சியில் இருப்பவர்களை கொண்டு நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார், அது எதிர்ப்பு மூலமாகவோ அல்லது ஆதரவு மூலமாகவோ இருந்தது. இதில் கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லை தேர்தலில் நிற்கும் ஒன்றைத்தவிர.

தேர்தலில் பங்கேற்ற தி.மு.க, தொடக்கத்தில் எதிர்கட்சியாகத்தான் இருக்க முடிந்தது. அடுத்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரசை தோற்கடித்து, தி.மு.க வென்றது. அண்ணா தலைமையில், ஆட்சியை பிடித்தது. வென்ற அண்ணா, தேர்தலில் தன்னை தந்தை பெரியார் எதிர்த்தாலும், அவரை திருச்சிக்கு சென்று சந்தித்து இந்த ஆட்சியை தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு அவரது அரசில், முதல் சட்டமாக, தந்தை பெரியாரின் கண்டுபிடிப்பான சுயமரியாதை திருமண முறையை அங்கீகரிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார். அந்த சட்டத்தை தீர்மானத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பு, தந்தை பெரியாரின் ஒப்புதலுக்கு அந்த வரைவு சட்டத்தை அனுப்பி, அவரது திருத்தத்தை ஏற்று மாற்றி, சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார். அதன்பிறகு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதையே கடமையாக கொண்டு செயல்பட்டது தி.மு.க அரசு.

இதில் கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், தேர்தல் வெற்றியை தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கும் அண்ணாவின் செயலுக்கு உண்மையிலேயே நியாயமான காரணம் இருந்தது. காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை, ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியை தோற்கடித்த காங்கிரசை, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த காங்கிரஸ் கட்சியை, தோற்கடிக்க காரணமாக இருந்தது, தந்தை பெரியாரின் கொள்கைகளே. புரட்சிகரமான அந்த கொள்கைகள், திராவிட உணர்வு, திராவிடர்களை இணைத்தது. தமிழக மக்களில் பலருக்கு திராவிட உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வாளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால்தான், தி.மு.க வெல்ல முடிந்தது. (இன்றும் அந்த உணர்வாளர்கள் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்).

அண்ணாவின் மறைவிற்கு பிறகும், கலைஞர் தலைமையில் தி.மு.க வென்றபோதும், அந்த உணர்வாளர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருந்தது.

எம்ஜியார் தி.மு.கவை விட்டு பிரிந்தபோதும், அவரது கட்சி முன்னணியினர் பலர் அந்த திராவிடர் இன உணர்வாளர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் தேர்தல் வெற்றி என்பது, கொள்கை சார்ந்ததாக இல்லாமல், தனி மனித கவர்ச்சி சார்ந்ததாக மாறியது.

மக்களாட்சி தத்துவத்தில், ஒரு வெற்றி என்பது கொள்கை அரசியல் மற்றும் தேர்தல் அரசியல் என்ற இரு காரணிகளை கொண்டே அமைகிறது. இதில் கொள்கை அரசியல் முதன்மையாகவும், தேர்தல் அரசியல் இரண்டாவதாகவும் இருப்பதே உலக அளவில் நடைமுறை. கொள்கையை நிறைவேற்றுவதற்காகவே தேர்தல் அரசியலில் ஈடுபடுவது வழக்கம்.

எம்ஜியார் பிரிந்த பிறகு, அதாவது இன்று வரை, தேர்தல் வெற்றி என்பது  கொள்கை அரசியல் முதன்மை என்பதில் இருந்து மாறி, தேர்தல் அரசியலே முதன்மை என்பதாக இருக்கிறது.

தேர்தல் அரசியல் என்பது கீழ்காணும் அடிப்படையில் உள்ளது.

தேர்தல் கூட்டணி
தனிமனித கவர்ச்சி
ஜாதி வாக்குகள்
செலவு செய்யப்படும் பணம்
தேர்தல் பணிகள்
பிரச்சாரம்
பிரசார முறைகள்
சினிமா கவர்ச்சி
கூட்டத்தினரை ஈர்க்கும் பேச்சுத் திறமை
விலைவாசி
அன்றாட மக்கள் பிரச்சனைகள்
நீண்ட கால மக்கள் பிரச்சனைகள்
பத்திரிக்கைகள் செய்தி – பிரச்சாரம்
வானொலி, தொலைகாட்சி செய்தி – பிரச்சாரம்
அனுதாபம்
மாற்றம் வேண்டும் என்ற எண்ணம்
வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. நிரந்தரமானது அல்ல. எனவே தேர்தல் அரசியல் என்பது தற்காலிகமான வெற்றியை தரக்கூடிய ஒன்று. இந்த மாறுதலுக்கு உட்பட கூடிய தற்காலிக வெற்றியை அளிக்க கூடிய தேர்தல் அரசியலை நம்பி ஒரு இயக்கம் செயல்படுவது என்பது சூதாடுவதற்கு சமம். ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு வகையான சூதாட்டமாகவே அமையும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மக்களாட்சியின் அதாவது தேர்தலின் விந்தை என்று சப்பைக்கட்டு காரணங்களை தோற்ற கட்சியினர் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் சூதாட்டத்தில் தோற்றனர் என்பதே உண்மை.

எது நிரந்தரம்? அண்ணா காலத்தில் நடந்ததே.....அது நிரந்தரம். ஆமாம் கொள்கை அரசியல் நிரந்தர வெற்றியை தரக்கூடிய ஒன்று. வெறும் கொள்கை அரசியல் போதுமா என்று கேட்டால் போதாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கொள்கை அரசியல் இல்லாத தேர்தல் அரசியலும் போதாது என்பது.

கொள்கை அரசியல் என்பது, கொள்கை பிரச்சாரம் செய்வதும், கொள்கையை ஏற்றுக்கொள்ளுபவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதும் ஆகும். கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் எந்த தேர்தலிலும் கொள்கைக்காக வாக்களிப்பார்கள், தேர்தல் அரசியல் அவர்களது வாக்களிக்கும் கட்சியை முடிவு செய்யாது. ஆகவே கொள்கைகாரனமாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை கூட கூட, நல்ல கொள்கையை உடைய கட்சி தொடர்ந்து நிறைய நிரந்தர வாக்களர்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.

கொள்கை அரசியலால் உருவாக்கப்படும் வாக்காளர்கள் நிரந்தரமானவர்கள். தேர்தல் அரசியலால் கிடைக்கும் வாக்களர்கள் தற்காலிகமானவர்கள்.

எனவே கொள்கை அரசியலின் ஒரு பகுதியாக, திராவிட இன உணர்வை, தமிழ் மொழி உணர்வை, பகுத்தறிவு சிந்தனையை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதும் அந்த கொள்கையை மக்கள் மனதில் நிரந்தரமாக நிலை பெறச் செய்யும் வகையில், தொய்வில்லாத தொடர் பிரசாரங்களை செய்து, அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் கடமை தி.மு.கவிற்கு உள்ளது.

கொள்கை அரசியல் குறைந்து தேர்தல் அரசியல் அதிகமானதன் விளைவே தி.மு.க தேர்தலில் தோற்றதற்கான காரணம். கொள்கை அரசியலும் தேர்தல் அரசியலும் சரியான விகிதத்தில் இருக்கும்போது, கட்சிக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.

இப்போது தி.மு.க அதன் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்யும் நெருக்கடியில் உள்ளது. சுயநல சிந்தனையில் இருந்து விடுபட்டு, தலைமை துதிபாடும் இழி நிலையில் இருந்து மீண்டு, கொண்ட கொள்கையில் உறுதியாகவும், இருக்கும் இயக்கதிற்கு உண்மையாகவும் இருப்பதுதான், தி.மு.க உறுப்பினர்கள் தி.மு.கவின் வெற்றிக்கும், திராவிட இன வெற்றிக்கும் செய்யும் உண்மையான பங்களிப்பாக இருக்கும்.

நிரந்தர வெற்றிக்கு பாதை வகுப்போம் அதில் வெற்றி நடைபோடுவோம்.


- திராவிடப் புரட்சி

No comments:

Post a Comment