Tuesday 7 February 2012

கண்ணை விற்றுத்தான் சித்திரம் வாங்கவேண்டுமா?

(16.10.11 அன்று முகநூலில் பதிந்தது)

கண்ணை விற்றுத்தான் சித்திரம் வாங்கவேண்டுமா?

ஒரு இதழில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் தொடர்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.

நான் எங்க வீட்டு பூஜையறையில் உட்கார்திருக்கேன்.... காலையில் குளிச்சவுடனே வந்து பூஜையறையில் விளக்கேத்தி வச்சுட்டுத்தான் நான் வேற வேலைக்கே போறது வழக்கம். என்னவோ அதுல மனசுக்கு ஒரு நிம்மதி, ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி வரும்....

ஆழ்வார்பேட்டையில் நாங்க குடியிருக்கிற இந்த வீட்டோட பூஜையறையில் அழகான பிள்ளையார் விக்ரகம், பக்கத்திலேயே முருகன் திருவுருவம், லஷ்மி – சரஸ்வதி படங்கள், மேல்மலையனூர் அங்காளம்மன் படம், நடுவே கொஞ்சம் பெரிசா ஷீரடி சாய்பாபா மார்பில் சிலை கூடவே சத்ய சாய்பாபா படம்னு வரிசையா இருக்கும்....

எங்க பூஜையறையில் பிள்ளையார் திருவுருவங்கள்தான் நிறைய இருக்கு... எங்காவது ஊர்களுக்கு போறப்போ, விதவிதமான போஸ்கள்ல இருக்கிற விநாயகரை வாங்கி வந்துடுவேன். இல்லைனா யாராவது வர்றப்போ கிப்ட் பண்ணுவாங்க...இப்படியே நிறைய பிள்ளையார் பொம்மை செர்ந்துடுச்சு௧ இன்னமும் கூட எங்கள் வேளச்சேரி வீட்டில் நிறைய பிள்ளையார் பொம்மைகள் அடுக்கி வச்சிருக்கேன்....

நான் எல்லா பூஜைகளையும் செய்ய முடியலேனாலும், ஒரு சிலது மட்டும் விடாம செய்வேன். இப்போ எங்க வீட்ல..........குழந்தைகள்,.......குழந்தைகள்னு பேரபசங்க இருக்கிறதால் இப்போல்லாம் கிருஷ்ண ஜெயந்தியை நல்லா கொண்டாடறோம்.....

மத்தபடி விரதம்னு நான் இருக்கிறது வாரா வாரம் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளுக்குன்னு விரதம் இருப்பேன்... இந்த இரண்டு நாளும்  நான்-வெஜ் சின்ன வயசிலிருந்தே சாப்பிடமாட்டேன்.....

புரட்டாசி முழுக்க நான்-வெஜ் சாபிடாம விரதம் இருப்பேன். மற்றபடி கிருத்திகை விரதமும் இருக்கிறது உண்டு...

சந்தோஷி மாதா விரதம் அடிக்கடி இருப்பேன். அன்னிக்கு புளிப்பு சாப்பிடாம இருக்கனும்....

எம்பொண்ணுக்கு கல்ல்யானமாகி முதல் சில வருஷங்கள் குழந்தை பிறக்கலேன்ன நிலையிலேயும் சந்தோஷிமாதா விரதம் இருதான் வேண்டிகிட்டேன். இப்போ..........இர்ந்ண்டு குழந்தைகள் .......,........பிறந்து சந்தோஷமா இருக்காங்க....

சஷ்டி விரதம் கூட சிலவருஷம் தொடர்ந்து இருந்தேன். கடைசி நாள் வடபழனி கோவிலுக்கு கட்டாயம் போயிடுவேன். வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு அந்த விரதம் இருக்கணும்.....

எனக்கு கல்யாணமாகி சென்னைக்கு குடி வந்தப்புறம் இங்கே நான் அடிக்கடி போற கோயில்னா திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்தான். நாங்க வேளச்சேரியில் குடியிருந்தபோ, அடிக்கடி மாங்காடு போயிடுவேன்....

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சாய்பாபா கோயில்னு அநேகமா சென்னையில் இருந்த எல்லா கோயிலுக்கும் போயிருக்கேன். இப்போ தி.நகர் பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி போயிடறேன்.....

எந்த குறிப்பிட்ட ஊருக்கு போனா இந்த கோயிலுக்கு போகனும்ன்னு நான் ரொம்ப செண்டிமெண்டா போற கோயில்னு பார்த்தா உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்குத்தான். திருச்சி போறப்போ அந்த கோயிலுக்கு பொய் தரிசனம் பண்ணிட்டு வந்தாதான் எனக்கு திருப்தி....

அதே மாதிரி கன்னியாகுமரி போனா தவறாம சுசீந்திரம் பொய் கட்டாயம் ஆஞ்சநேயரை தரிசனம் பண்ணிட்டு வருவோம். இப்பகூட ஒரு கேப்புல இறங்கி அந்த கோயிலுக்கு போயிட்டு வந்துட்டேன்.

பெரும்பாலும் ஏதாவது வேலையா அந்தந்த ஊர்களுக்கு போறப்போ விசாரிச்சுட்டு பக்கத்தில் இருக்கிற கோயில்களுக்கு போயிட்டு வந்துடுவேன். ஸ்ரீரங்கம், திருச்சி உசிபில்ளையார் கோயில், தூத்துக்குடி பணிய மாதா கோயில், குருவாயூர், பத்மநாபசாமி கோயில்னு எல்லாமே போயிருக்கேன்....

எங்க வீட்டுக்காரங்ககூட மேல்சட்டை எல்லாம் கழட்டிட்டு துண்டு போர்த்திட்டு ஒரு கோயிலுக்கு வந்தாங்க....அது எந்த கோயில்? இவங்க எப்படி அங்க வந்தாங்க? (விவரம் அடுத்த இதழில்)


இந்த கட்டுரையை எழுதியது ஒரு பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல....நம்மினம் அடிமைப்பட்டு கிடந்ததை மறக்காமல், உள்ளிருக்கும் வெறியை அடக்கிக்கொண்டு, தன்னை ஒரு சூத்திரன் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு திராவிடத் தலைவருடைய மருமகளின் கட்டுரை.

ஒருவரின் எழுத்தை அப்படியே பதிந்து அது குறித்து விமர்சனம் செய்யும் இந்த கட்டுரையை எழுதும் முன் பலமுறை சிந்தித்துபார்த்தேன். எழுதத்தான் வேண்டுமா? எழுதினால் என்ன பயன்? இதை எழுத நாம் யார்? விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்காமலா எழுதியிருப்பார்கள்? இப்படியாக குழம்பிய நான், இறுதியில் முடிவெடுத்தேன் எழுதிவிடுவதென்று. காரணம்,

நான் பெரிதும் மதிக்கும் திராவிடத்தலைவரின் குடும்பத்தில் இருந்து இப்படிப்பட்ட கருத்துகள் வெளிவரும்போது, அதன் தாக்கம் அந்த தலைவருடைய கட்சியின் அடிமட்ட தொண்டன்வரை இருக்கும் என்பதாலும்,

அந்த கருத்துகள், அந்த தலைவரின் கருத்துக்கு நேர் எதிராக இருப்பதால், பலரிடம் விவாதிக்கவேண்டிய சமாளிக்க வேண்டிய சூழல் அடிமட்ட தொண்டன் வரை இருப்பதாலும்,

அதை விட சில முக்கிய காரணங்கள்...

இதை பற்றிய விமர்சனம் எதிரிகளிடம் இருந்து வருவதற்கு முன் நாமே பதிவோமே என்பதாலும்,

பல இயக்கத்தின் நலன்விரும்பிகள், பெரு மதிப்பின் காரணத்தாலும் அச்சத்தின் காரணத்தாலும் விமர்சிக்க தயங்குவார்கள் என்பதாலும்,

எனக்கு எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாத காரணத்தாலும்,

நானும் இயக்கத்தின் நலன்விரும்பி என்பதாலும்,

நாம் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை விமர்சிக்கப்போவதில்லை, பலரும் அறிந்துகொள்ளும்வண்ணம் வெளியிடப்பட்டுள்ள, விமர்சனத்திற்குள்ளாகும் என்று தெரிந்து எதிர்பார்த்து எழுதிய கட்டுரையை விமர்சிப்பதில் தவறில்லை என்பதாலும்,

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும் என்ற வள்ளுவரின் வரிகள் என்னை எழுதத்தூண்டியதாலும் எழுதினேன்.

அந்த ஆன்மீக விளம்பரம் செய்யும் கட்டுரையை படித்தபின் எனக்கு தோன்றியது :

இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் என்ன?

நாங்கள் ஒரு பழுத்த ஆன்மீகவாதிகள் என்று காட்டிக்கொள்வதில் என்ன பயன்?

எங்கள் குடும்பத் தலைவரின் அல்லது இயக்கத் தலைவரின் பகுத்தறிவு கொள்கைக்கும் எங்கள் கொள்கைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வெளிப்படுத்துவது ஏன்?

சமூகத்தில் ஒரு நல்ல நிலையில் உள்ளவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் பின்பற்றும் உளவியல் மனப்பாங்கை பற்றி தெரியாதா? முன் ஏர் செல்வதை தொடர்ந்து பின் ஏர் செல்லாதா? நமக்கு இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையை பரப்ப எண்ணம் இல்லாவிட்டாலும், அதற்கு நேர்மாறான மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமான கட்டுரையை எழுதுவது ஏன்?

தலைவர் மேடையில் அமர்ந்துகொண்டு, விநாயகனை வாதாபியில் இருந்து வந்தவர் என்று கிண்டல் செய்வதும், தமிழ் வருட பிறப்பின் ஆபாசங்களை எடுத்து சொல்லும்போதும், ராமாயானத்தை ராமனை கட்டுக்கதை என்று சொல்லும்போதும், மூடநம்பிக்கைகளை கிண்டல் செய்யும்போதும், மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் உங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்?

இந்த ஆன்மீக கட்டுரையை படித்த பிறகு, இனிவருங்காலங்களில், தலைவர் மேடையில் பேசும் பகுத்தறிவு பேச்சை கேட்கும் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இது இயக்கத்தின் கட்டுரை அல்ல ஒரு தனி மனிதரின் கொள்கையை சார்ந்தது என்று வாதிடலாம். ஆனால், தலைமை இடத்தில் இருப்பவர்கள் இயக்கத்தின் அடையாளமாகவே பார்க்கபடுகின்றனர், இதுதான் எதார்த்தம். ஆகவே, கொள்கை என்பது ஊருக்கு மட்டும் உபதேசமாக இருக்கிறது என்று எதிரிகள் எள்ளி நகையாடிவிடக்கூடாது. 

நாங்கள் ஆன்மீகவாதிகள் நாங்கள் பகுத்தறிவுவாதிகள் அல்ல என்று யாருக்கு தரும் சமிங்கை இது?

நாம் பகுத்தறிவுவாதிகள் என்பதால்தான் மற்றவர்கள் குறிப்பாக பார்பனர்கள் மற்றும் பார்ப்பன பத்திரிக்கைகள் எதிர்க்கின்றன என்ற எண்ணமா?

நமது வெற்றி தோல்வியை பார்பனர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்ற அச்சத்தில் அவர்களுடன் செய்துகொள்ளும் சமரசமா?

மாயாவதியின் முறையா? மாயாவதி உத்திரபிரதேசத்தில், பார்பனர்களோடு செய்துகொண்டிருக்கும் சமரசத்திற்கு காரணம் அங்கு பார்ப்பனர்கள் அதிகம் மற்றும் அவர்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கவும் செய்கிறது என்பதால், அது தமிழகத்தில் செல்லுமா?

இன்று பகுத்தறிவு கொள்கையை சமரசம் செய்கிறோம்? நாளை இருமொழி கொள்கையையா? நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை, எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இந்தி படிக்கிறார்கள் என்று அடுத்த கட்டுரை வெளிவருமா?

ஏற்கனவே தேசிய கொடியை எற்றிவிட்டோம், கொள்கை சமரசம் தொடர்வதை பார்த்தால் நாளை தீபாவளி கொண்டாடுவோமா என்ற அச்சம் இயல்பாக எழுகிறது.

பிறர் கட்டுபடுத்தி அவர்கள் இஷ்டம் போல நம்மை நடக்கவைப்பதும் அடிமைத்தனம்தான், நாம் வேறு வழியில்லாமல் சமரசம் செய்துகொண்டு அவர்கள் இஷ்டம் போல நடந்துகொள்வதும் ஒருவகையான அடிமைத்தனம்தான்.

ரத்தம் சிந்தாமல், ஒரு உயிர் கூட பலியாகாமல், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அதன் மொழி மற்றும் பண்பாட்டை அழித்தால் போதும், அந்த இனம் தானாய் அழிந்துபோகும். இப்படி மொழியையும் பண்பாட்டையும் இழந்ததால் அழிந்த இனங்கள் உலகில் ஏராளம். அதுபோல, ஒரு இயக்கத்தை அழிக்க, அதன் தலைவரை அழிக்க வேண்டியதில்லை, அதன் உறுப்பினர்களை அழிக்க வேண்டியதில்லை, அதற்கு பதிலாக எளிதாக அதன் கொள்கைகளை அழித்தால் போதும், அந்த இயக்கம் தானாய் அழிந்துபோகும். இப்போது சிந்தித்து பாருங்கள் நாம் செய்வது சரியா என்று?

தொடர்ந்து எதிர்த்துவந்ததை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்வது என்பதும் தோல்வியின் அடையாளம்தான், அடிப்படை கொள்கையில் சமரசம் என்பது அழிவின் தொடக்கம்தான்.

எந்த வெற்றிக்காக இந்த தோல்வி?

கொள்கையை விட்டுக்கொடுத்துதான் வெற்றி பெறவேண்டுமா?

கண்ணை விற்றுத்தான் சித்திரம் வாங்கவேண்டுமா?

- திராவிடப் புரட்சி

No comments:

Post a Comment