Tuesday 7 February 2012

அரசியலில் மதத்தை புகுத்துகிறார்கள் – கடவுளைக் கண்டிக்கிறார்கள் என்று காட்டுக் கூச்சலிடுபவர்களுக்கு அறிஞர் அண்ணாவின் விளக்கம்.

(16.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

அரசியலில் மதத்தை புகுத்துகிறார்கள் – கடவுளைக் கண்டிக்கிறார்கள் என்று காட்டுக் கூச்சலிடுபவர்களுக்கு அறிஞர் அண்ணாவின் விளக்கம்.

இந்து மதத்திற்காகவும் அதன் கடவுளருக்காகவும் பரிந்துபேசும் அன்பர்களை ஒன்று கவனிக்க வேண்டுகிறேன்.

இந்து மதமும் அதில் பேசப்படும் கடவுளருமே முதன்மையும் சிறப்பும் உடையவர்கள் என்றால், இந்நாவலந்தீவிலுள்ள நாற்பது கோடி மக்களில் ஒன்பது கோடி முசல்மான்களும், அவர்கள் கடவுளான அல்லாவும், ஒரு கோடியே இரண்டு லட்சத்து எண்ணாயிரம் புத்தர்களும், அவர்கள் கடவுளான புத்தரும், ஒரு கோடி கிறிஸ்தவர்களும், அவர்கள் கடவுளான இயேசுவும், பனிரெண்டு லட்சத்து அறுபதினாயிரம் சமணர்களும், அவர்கள் கடவுளான அருகனும், இன்னும் நூறாயிரக்கணக்கான சீக்கியரும், யூதரும், பாரசீகரும் அவர்தம் கடவுளரும், கடவுளே இல்லை என்று முடிவுகட்டியவர்களும், கடவுளை பற்றி கவலை கொள்ளாதவர்களும், தனித்தனி கொள்கைகள், பழக்க வழக்கங்கள், உண்பது உடுப்பதில் வேறுபாடுகள் ஆகிய ஒன்றுக்கொன்று சேர்க்க முடியாத பிரிவுகளோடு இருக்கமுடியுமா? இப்படி செய்வதுதான் கடவுள் இயல்பென்றால், அத்தகைய கடவுள் மக்களுக்குத் தேவையில்லை என்ற முடிவுக்குத்தானே வர வேண்டியிருக்கிறது.

இதனாலேதான், நெடுங்காலமாக மதத்தையும், கடவுளையும் ஆராய்ச்சியின்றி பின்பற்றித் தங்கள் வாழ்க்கை முறைகளை தப்பான வழிகளில் அமைத்துக்கொண்டுள்ள நம் திராவிட மக்களுக்கு, இவற்றின் உண்மைகளை எடுத்துக்கூறவும் திராவிட மக்களின் உண்மையான விடுதலையைக் காணவுமே திராவிடர் கழகம் பாடுபடுகின்றது. இதனையறிய மாட்டாத சிலர், அரசியலில் மதத்தை புகுத்துகின்றார்கள் – கடவுளைக் கண்டிக்கின்றார்கள் என்று காட்டு கூச்சலிடுகின்றனர்.

கடவுளும் மதமும் மக்களுக்குச் செய்த செய்கின்ற காரியங்கள் இவை இவை என எடுத்துக் காட்டவோ, எடுத்துக்காட்டகூடியதாயினும் அவர்களுக்குத் தோன்றுமானால், அவற்றை அவர்கள் கூறும் மதக் கோட்பாட்டின்படி, கடவுளும் மதமும் அமைக்கப்பட்டிருகிறது என்பதை மேலே எடுத்துக்காட்டியுள்ளேன். ஈண்டுக் கூறியவற்றால் தெளிவடைய மாட்டதாருக்கு, அவர்கள் விரும்பும் முறையில் தெளிவுதரவும் காத்திருக்கிறேன். ஆனால், அறிவுக்கு புறம்பான முறையில் அசட்டுவாதம் புரிய முற்படுவோருக்கு உண்மையை விளக்கி உணர வைப்பது என்பது எளிதில் முடியக் கூடிய காரியமன்று. இத்தகையினருக்குக் காலம் என்னும் கதிரவனின் கருத்தொளி நிச்சயம் விளக்கவுரை கூறும். அப்போது, அரசியலில் மதத்தையும் கடவுளையும் ஏன் புகுத்தினார்கள்? கடவுள் தன்மைக்கு ஏன் விளக்கவுரை கூறினார்கள்? மதத்தை ஏன் கண்டித்தார்கள் என்ற உண்மைகள் விளங்கும். அதன் பின்னராவது அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே நம்மை இதுபற்றி எழுதும்படி தூண்டிற்று.

-          “நக்கீரன்” என்ற புனைப்பெயரில் அறிஞர் அண்ணா எழுதியது – 01.10.1944

அறுபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகும், அரசியலில் மதத்தை புகுத்துகிறார்கள் – கடவுளைக் கண்டிக்கிறார்கள் என்று காட்டுக் கூச்சலிடுபவர்கள் இன்றும் இருப்பதால், அதுவும் காலத்தின் கொடுமையாக அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.கவிலும் இருப்பதால், பலர் தெளிவடையவேண்டும் என்பதற்காக, அந்த எழுத்தை இப்போது நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

நான் அறிஞர் அண்ணா எழுதியதை  இங்கு பயன்படுத்திக்கொள்கிறேன்....

ஆனால், அறிவுக்கு புறம்பான முறையில் அசட்டுவாதம் புரிய முற்படுவோருக்கு உண்மையை விளக்கி உணர வைப்பது என்பது எளிதில் முடியக் கூடிய காரியமன்று. இத்தகையினருக்குக் காலம் என்னும் கதிரவனின் கருத்தொளி நிச்சயம் விளக்கவுரை கூறும். அப்போது, அரசியலில் மதத்தையும் கடவுளையும் ஏன் புகுத்தினார்கள்? கடவுள் தன்மைக்கு ஏன் விளக்கவுரை கூறினார்கள்? மதத்தை ஏன் கண்டித்தார்கள் என்ற உண்மைகள் விளங்கும். அதன் பின்னராவது அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே என்னை நினைவுபடுத்தும்படி தூண்டிற்று.


- திராவிடப்புரட்சி

No comments:

Post a Comment