Tuesday 7 February 2012

தி.கவின் கொள்கைக்கும் தி.மு.கவின் கொள்கைக்கும் வேறுபாடு உள்ளதா? அறிஞர் அண்ணாவின் விளக்கம்.

(13.11.11 அன்று முகநூலில் பதிந்தது)

தந்தை பெரியாரின் கொள்கைகள் வேறு, அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் வேறு,

திராவிடர் கழகத்தின் கொள்கைகள் வேறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் வேறு,

என்பது போன்ற கருத்துகளை தி.மு.கவினரே பேசும்போது, அதைக்கேட்க வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இந்தக்காலத்தில் கூட, கலைஞரும், பேராசிரியரும் தொடர்ந்து தந்தை பெரியாரின் கொள்கை வழி நடப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், எப்படி இப்படி ஒரு கருத்து பரவுகிறது என்பது புரியவில்லை.

அவரவர் வசதிக்கேற்ப கொள்கையை விளங்கிக்கொள்வதற்கும், விளக்குவதற்கும், திராவிட இயக்க கொள்கை என்பது இராமாயண மகாபாரத புராண கதைகள் அல்ல. ஒரு இனத்தின் அரசியல் வரலாற்றை, போராட்டத்தை, இலக்கை நிர்ணயிக்கும் ஒன்று.

ஆகவே, இது குறித்து தெளிவடைய, அறிஞர் அண்ணா விளக்கியதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்...

“அவரோடு (தந்தை பெரியார்) சேர்ந்து பணிபுரிய முடியாத நிலையிலுள்ள பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப்பேசி ஒரு முடிவு செய்தனர். அதன் முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம்.

திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதவும் கிடையா. இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் (தந்தை பெரியார்) ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்ததுகிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை, வராது. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவரை ஏற்படுத்தவில்லை, அவசியம் என்றும் கருதவில்லை. அந்த நாற்காலியை காலியாகவே வைத்துள்ளோம்.”

“கல்கி பத்திரிக்கை எவ்வளவு தைரியமாக, எவ்வளவு சந்தோஷமாக தீட்டியது.......
.... திராவிடர் கழகத்தினர் தன்னாலேயே அழிந்து விடுவர் என்று ஆருடம் கூறியது. அப்பனே! இது சூத்திரத்தின்மீது கட்டப்பட்ட ஆருடம். ஆசையின் விளைவு, இதை விட்டுவிடு. மரம் அழியவில்லை. இதிலிருந்து ஒட்டு மாஞ்செடி தோன்றியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஓட்டு மாஞ்செடித்தான். மண்வளம் ஏராளம். அதே பூமி. நீர்பாய்ச்ச, பதப்படுத்த, பாத்திகட்ட முன்னிற்போர் பலர். ஓட்டு மாஞ்செடி (திராவிடர்) கழகத்துக்கு முரணானது அல்ல, ஒத்த கருத்து கொண்டதே ஓட்டு மாஞ்செடி.”

“பெரியாரே, நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்துச் சிறைச்சாலை செல்லத்தான் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். தொடக்க நாளாகிய இன்றே!”


போதுமா தோழர்களே....அண்ணாவின் இந்த விளக்கம். தவறான கொள்கை மயக்கத்தில் இருந்து விடுபடுங்கள். உயர்த்த திராவிட இயக்க கொள்கையை உயர்த்திப் பிடிப்போம். ஒற்றுமையாய் செயல்படுவோம்.

No comments:

Post a Comment