Tuesday 7 February 2012

திராவிட இயக்கத்தின் தற்போதைய ஆபத்தான நிலை

(14.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

திராவிட இயக்கத்தின் தற்போதைய ஆபத்தான நிலை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆட்சியாளர்களும் அவர்களின் ஆலோசகர்களாக இருந்த ஆரியர்களும், உழைக்காமல் செழிப்பாக வாழ, மற்ற மக்கள் எல்லோரும் உழைக்கும் வர்க்கமாக, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலையில், வரியையும் கட்டி, ஏழ்மையில் உழன்றனர். இதற்கான காரணம் அவர்கள் சூத்திரர்கள் என்பதால்.

சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையில், கல்வி பார்ப்பனர்களுக்கும், ஆளும் சத்திரியர்களுக்கும் மட்டுமே என்ற நிலையில், அறிவில் குறைந்து, சொல்லித்தரபட்ட கடவுள் நம்பிக்கையில் உழன்று, அiனைத்திற்கும் காரணம் விதி என்று நம்பி, மூட நம்பிக்கையில் மாய்ந்தனர்.

காலம் மாறியது, ஆங்கிலேயரின் ஆட்சி வந்தது, வழக்கம்போல அந்த ஆரியர்கள் அவர்களின் ஆலோசகர்களாக மாறினார். ஆண்ட சத்திரியர்கள் அழிந்தனர், ஆலோசகர்கள் தொடர்ந்து செழிப்பாக இருந்தனர். அவர்கள் கற்ற கல்வி மற்றும் அவர்களது சூழ்ச்சியினால், நவீன காலத்திலும் வேலைவாய்ப்பை பெற்று சுகமாய் வாழ்ந்தனர்.

ஆங்கிலேயர் இந்த சமூகத்திற்கு செய்த மிகப்பெரும் நன்மை என்பது. கல்வியை பொதுவாக்கியதுதான். அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பாட்டாலும், ஆண்டாண்டுகாலமாக அடிமையாய் வாழ்ந்த அந்த சூத்திர சமூகம், கல்வியின் பலனை அனுபவிக்கமுடியாமலேயே இருந்துவந்தது. இன்றும்கூட கல்லூரி படிப்பை படிக்காத லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

அனைத்திற்கும் காரணம், சூத்திரன் என்ற நிலையும், அந்த நிலைக்கு காரணமாக இருக்கும் மதமும், அந்த மதத்தை காப்பாற்றும் கடவுளும், அந்த கடவுளை காப்பாற்றும் பார்ப்பனர்களும்தான்.

தென்னகத்தில் ஒரு புரட்சி நடந்தது. கல்வி கற்ற சூத்திரர்கள் சிலர் சிந்தித்தார்கள். தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார் என்ற மூன்று பெருமகனார்கள் அமைப்பு ரீதியாக இதை எதிர்க்க கிளம்பினார்கள். 1916ல், சென்னை வேப்பேரியில், தென்னிந்திய நல உரிமை சங்கம் அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிக்கட்சி ஆட்சியை பிடித்து, சூத்திரர்களுக்கு மேம்படுத்தும் பணியை தொடங்கியது. பின்னாளில் நீதிக்கட்சி தந்தை பெரியாரின் தலைமையில் சுமரியாதை கழகத்தை இனைத்து திராவிடர் கழகமாக உருமாறியது. திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாத நிலையில், அதில் இருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி தந்தை பெரியாரின் கொள்கையை ஆட்சியை பிடித்து நிறைவேற்றும் பெரும் பணியை செய்தார். தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கும் திராவிட இயக்கம் இந்தியாவில் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்னமும் நிறைய செய்யவேண்டிய பணிகள் மீதம் உள்ளது.

இப்படி சில வரிகளுக்குள் சொல்லப்பட்ட இந்த வரலாறு அவ்வளவு எளிதாக அமைந்தது அல்ல. இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது அவர்கள் எதிர்த்தது சர்வ வல்லமை படைத்த ஆரியத்தை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்களை, அவர்களுக்கு சாதகமாக இருந்த அரசை, அவர்களை நம்பிய இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் நம்பிக்கையை.

பார்ப்பனர்களை எதிர்த்தார்கள், இந்து மதத்தை எதிர்த்தார்கள், கடவுளை எதிர்த்தார்கள். அதனால், ஆரியர்களின் எதிரிகளானார்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளானார்கள், மத உணர்வு மிக்க செல்வந்தர்களுக்கு எதிரிகளானார்கள், கடவுள் மத நம்பிக்கை உடைய இலட்சக்கணக்கான மக்களுக்கு எதிரியானார்கள்.

மிக சிறிய கூட்டம் மிகப்பெரும் சமூகத்திற்கு எதிராக அவர்களது ஆயிரக்கணக்கான ஆண்டுகால கடவுள், மத, ஜாதி நம்பிக்கைக்கு எதிராக பேசுவது செயல்படுவது என்பது சாதரணமான ஒன்றல்ல. போகுமிடமெல்லாம் தாக்கப்பட்டார்கள், இரத்தம் சிந்தினார்கள், மிரட்டலுக்கு ஆளானார்கள், கொலை முயற்சியில் பாதிக்கப்பட்டார்கள், வேலை இழந்தார்கள், சொத்தை இழந்தார்கள், சொந்த பந்தங்களை இழந்தார்கள், உற்றார் உறவினர்களால் ஒதுக்கிவைக்கபட்டார்கள் ஓரம்கட்டப்பட்டார்கள், சட்டம் துரத்தியது, கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள், வறுமையில் உழன்றார்கள், உயிரையும் இழந்தார்கள்.

இவையெல்லாம் எதற்காக???

சுயநலத்திற்காகவா???

இல்லை இல்லை.சமூகத்திற்காக.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அடிமைபடுத்தபட்டிருந்த, தாம் அடிமை என்று உணராதிருந்த, கடவுள் மதம் ஜாதி என்ற மாயவலையினுள் சிக்கி வெளிவரமுடியாமல், சூத்திர பட்டத்தை சுகமாய் சுமந்துகொண்டு, இழிநிலையை விதியின் காரணம் என்று நம்பி, அறிவுனர்சியும் மானவுனர்சியும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த மக்களை சீர்திருத்துவதற்க்காக, சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக.

எத்தனை ஆயிரம் தன்னலமற்ற இயக்க உணர்வுள்ள தொண்டர்களின், தலைவர்களின் தியாகத்தால் உருவானது இந்த திராவிட இயக்கம்?.

இன்று சிலர் தாங்கள்தான் இயக்கம் என்று திமிர்பிடித்து இருக்கின்றனர். எதற்கு கொள்கை என்று ஏளனம் செய்கின்றனர். அது அந்த காலம் என்று ஊதாசீனப்படுத்துகின்றனர். பெரும்பான்மை இந்து மதத்தவரின் மனம் புண்படக்கூடாது என்கின்றனர் அக்கறையாக. ஜாதியை ஒழிக்கமுடியாது என்று கிசுகிசுக்கின்றனர். ஜாதி மத விவகாரங்களை விசாரணைக்கு உட்படுத்தினால் வாக்கு வங்கி குறைந்துவிடும் என்று விவாதிக்கின்றனர். அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகவேண்டும் என்று அமட்டலாய் சொல்லுகின்றனர். பெரும்பான்மையை எதிர்த்தால் அழிந்துவிடுவோம் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர்.

ஏய் கொள்கையற்ற கோமாளிகளே!

எந்த இயக்கத்தில் இருந்துகொண்டு இந்த பேச்சை பேசுகிறீர்கள்? பெரும்பான்மை மக்களின் இழிநிலையை போக்க அந்த பெரும்பான்மை மக்களையே எதிர்த்து நின்று சாதித்த இயக்கம் இந்த திராவிடர் இயக்கம். சமூகத்தை சீர்திருத்திய இயக்கம் இந்த திராவிட இயக்கம். சமூகத்தையே புரட்டிபோட்ட புரட்சி இயக்கம் இந்த திராவிட இயக்கம்.

பெரும்பான்மையாம் புடலங்காயாம். யாரை ஏமாற்ற இந்த பேச்சு?

இந்துமதத்தை, அதன் கடவுள்களை, அதன் கொடுங்கோன்மையை எதிர்த்து களம்கண்ட இயக்கம் இது. ஜாதியை தன் பெயருக்கு பின்னால் போடுவதை கேவலமாக நினைக்கும் வண்ணம் இந்த சமூகத்தில் உள்ள உயர்ஜாதி பார்ப்பனர் உட்பட அனைவரும் சிந்திக்கும்வண்ணம் சமூகமாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம் இந்த இயக்கம். இந்தியாவில் எங்கும் இல்லாத மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்திய இயக்கம் இந்த இயக்கம்.


பெரும்பான்மைக்கு ஒத்து ஊதும் எண்ணம் இருந்திருந்தால், இந்த இயக்கமே தோன்றியிருக்காது. பெரும்பான்மைக்கு ஆதரவு என்பது தொடர்ந்திருந்தால், அனைவரும் இருந்திருப்போம் அடிமைகளாய், தேவிடியா மகன், மகள் என்ற சூத்திர பட்டத்தை சுகமாய் சுமந்துகொண்டு.

பலரின் தியாகத்தால் உருவான சிறிய சமூக மாறுதலை பயன்படுத்தி கிடைத்த வாய்ப்பில் எதோ ஒரு நிலைக்கு வந்துவிட்ட காரணத்தினால், கொள்கையை தூக்கி எறியச்சொல்லும் எமாற்றுக்காரகளே, நீங்கள் மட்டும் சமூகம் அல்ல. இன்றும் கீழ் நிலையில், சமூகத்தின் அடித்தட்டில், வாய்ப்பு மறுக்கபட்டவர்களாய் வாழும் மக்கள் உங்களை விட ஏராளம். அவர்களுக்கு இந்த இயக்கத்தின் பணி இன்றும் நிலுவையில் உள்ளது. உங்கள் நிலை நிரந்தரம் என்று நினைக்காதீர்கள் அது மாறுதலுக்கு உட்பட்டது. உங்கள் நிலையை வைத்து உலக நிலையை ஒப்பிடாதீர்கள்.

பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கையை ஆதரிப்பதனால், வெற்றிபெற முடியுமா? எதிர்த்தால் தோல்வியை தழுவுவோமா? புரட்டுப் பேச்சு பேசுபவர்களே, உங்கள் தரப்பை சரி என எடுத்துக்கொண்டால், திராவிட இயக்கம் என்னதான் இந்து மத வேஷம் போட்டாலும், ஒரிஜினல் அக்மார்க் இந்து மதக கட்சியான, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிள்ளையான பா.ஜ.கதான் ஆட்சியை பிடிக்க முடியும். அவர்களைவிட நீங்கள் என்ன பெரிய மதவாதிகளா? என்ன பித்தலாட்ட பேச்சு பேசுகிறீர்கள்?.

திராவிட இயக்கம் என்பது எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம், தந்தை பெரியாரின் வார்த்தையில் சொன்னால், பாஷானத்தில் புழுத்த புழு. இதை எதிர்ப்பால் அழிக்கமுடியாது.

தன் கொள்கையை இழந்தால், அது தானாய் அழியும். அந்த கொள்கையை உள்ளிருந்தே சிலர் அழிப்பதுதான் கொடுமை.

கொள்கையற்ற இந்த அறிவீனர்கள், கொள்கையுள்ள எங்களைப்பார்த்து சொல்லுகிறார்கள், இனி உங்களுக்கு வேலையில்லை வெளியேறுங்கள் என்று. யாரைப் பார்த்து யார் சொல்லுவது? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுகிற கதையாய்.

அராபியன் கூடாரத்திற்குள் நுழைந்த ஒட்டகம் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது இருக்கும் நிலையை பார்த்தால். இது காலத்தின் கொடுமையல்ல. இந்த இயக்கத்தின் அழிவின் தொடக்கம். காப்பாற்றும் கடமை எங்களுக்குள்ளது.

வரலாறு என்பது வெறுமே படித்துபார்ப்பதற்கல்ல. வரலாறில் நாம் கற்றுக்கொள்ளவதற்காக. கடந்த காலத்தில் இருந்த நாம் சரி தவறுகளை உணர்ந்து நம்மை சீர்படுத்திக்கொள்ள பயன்படுவதே வரலாறு.

திராவிட இயக்கம் தற்போது படிக்கவேண்டிய வரலாறு புத்த மதத்தின் வரலாறு.

இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த வைதீக மதம், பார்ப்பன மதம், இந்துமதம் அதன் சமூக கொடுமை எங்கெங்கும் வியாபித்திருந்த காலத்தில், புத்தர் என்று புரட்சியாளர் தோன்றினால், கேள்வி கேட்டார், விவாதித்தார், இழி நிலைக்கு காரணம் விதியல்ல என்பதை நிறுவினார், மனிதனின் துக்ககரமான நிலையை நீக்கப் புறப்பட்டார். கடும் எதிர்பிற்கிடையேயும் பிரசாரம் செய்தார். எதிரிகளால் அவரை வாதத்தில் வெல்ல முடியவில்லை. வைதீகம் புத்தரின் முன்னால் வீழ்ந்தது. புத்தம் பரவியது, ஆண்டது. ஆனால் வைதீகம் வேறு வடிவம் எடுத்தது. வைதீகர்கள் பலர் புத்தரின் இயக்கத்திற்குள் நுழைந்தனர், பெரும் நிலைக்கு உயர்ந்தனர். மெல்ல அவர்களது வைதீக கருத்துகளை புத்தரின் இயக்கத்தினுள் புகுத்தினர், அதையும் மூடநம்பிக்கை உள்ள மதமாக மாற்றினர். மூடநம்பிக்கைக்கு எதிராக உயர்ந்த அந்த புத்தரின் இயக்கம், மூடநம்பிக்கை புகுத்தப்பட்ட மதமாக மாறியது. அதன் அடிப்படை கொள்கையை இழந்த நிலையில், மூடநம்பிக்கை உள்ள மதங்களில் புத்தமதமும் ஒன்றாக மாற.....மெல்ல அழிந்தது புத்தமதம் இந்தியாவில். ஆண்ட புத்த மதத்தினர், அடித்துவிரட்டப்பட்டனர், அழித்து ஒழிக்கப்பட்டனர். மீண்டும் வைதீகம் தலை தூக்கியது.

இது திராவிட இயக்கத்தினர் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டிய வரலாறு. நாமும் புத்தரின் இயக்கத்தை போல பெரும்பான்மையை சமூக நலத்திற்க்காக எதிர்த்து புறப்பட்டோம், சாதித்தோம், சமூக நீதியை ஓரளவுக்கு நிலைநாட்டினோம், ஆண்டோம், இப்போது நமது அடிப்படை கொள்கைக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் இயக்கத்தினுள் வந்து கோலோச்சுகின்றனர். அடுத்து என்ன நிலை வரும் என்பதை சிந்தித்து எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.


- திராவிடப்புரட்சி     

No comments:

Post a Comment